தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் இல்லை - அரசு வழக்கறிஞர் வாதம்

Published On 2025-12-18 13:27 IST   |   Update On 2025-12-18 13:27:00 IST
  • திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
  • திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது.

மனுதாரர்கள் தரப்பு, கோவில் தரப்பு, வக்பு வாரியம் தரப்பு வாதங்கள் முடிந்தநிலையில் இன்று அரசு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் இதற்கு முன் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபம் ஏற்றும் தூண் தான் என்பதற்கு மனுதாரர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

நில அளவை துறை ஆய்வு செய்ததில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் தமிழ்நாட்டில் பல தூண்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

1920-ல் தனிநீதிபதி ஆய்வுக்கு சென்றபோது திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூண் இருந்திருந்தால் உத்தரவில் கூறியிருப்பார்.

மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தமிழர்கள் கலாச்சாரம் எனக்கூறி திருப்பரங்குன்றத்தில் அதே வழக்கத்தை கேட்பது ஏற்புடையதல்ல.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனிநீதிபதி உத்தரவிட முடியுமா? என்பது தான் எங்களது கேள்வி என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் தீபத்தூண் இல்லை என்பது தான் எங்கள் தரப்பு வாதம். தூணில் தீபம் ஏற்றுமாறு மனுதாரர் வைத்த கோரிக்கையை கோவில் நிர்வாக அதிகாரி சட்டப்படி தான் நிராகரித்துள்ளார்.

சட்டப்படி திருப்பரங்குன்றம் வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் நடத்தியிருக்க வேண்டும்.

இவ்வாறு அரசு தரப்பில் வாதம் நடைபெற்றது.

Tags:    

Similar News