பா.ஜ.க.வின் பலத்தை காட்ட தயாராகும் நயினார் நாகேந்திரன்- புதுக்கோட்டையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம்
- தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
- புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது.
புதுக்கோட்டை:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு நடந்து முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
அத்துடன் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மனுக்கள் பெற்று, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி தொடர பாடுபடவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்
அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்களை தயார்படுத்தும் வகையில் தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அவர் அ.தி.மு.க. ஆட்சி சாதனைகளையும் பட்டியலிட்டு வருகிறார்.
தே.மு.தி.க. சார்பில் பொதுச்செயலாளர் பிரேமலதா இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கோணத்தில் மாடுகள் மாநாடு, தண்ணீர் மாநாடு, கடலம்மா மாநாடு போன்றவற்றை நடத்தி இயற்கை ஆர்வலர்களை ஈர்த்து வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் மாவட்டந்தோறும் பிரசார கூட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் சட்டமன்ற தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரும் கடந்த அக்டோபர் 12-ந்தேதி தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணத்தை மதுரையில் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் அவர், தனது பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவு செய்கிறார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்தவும், அதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சாந்தமாக பதிலடி கொடுத்து வரும் அவர், தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக தென் தமிழகத்தை குறிவைத்து சட்டமன்ற தேர்தலுக்கு காய் நகர்த்தும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை அழைத்து வருவதன் மூலம் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தை பயன்படுத்த தயாராகி வரும் நயினார் நாகேந்திரன் ஏற்பாடுகளை தற்போதே தொடங்கிவிட்டார்.
நேற்று டெல்லி சென்று திரும்பிய அவர், நிருபர்களிடம் கூறுகையில், எனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இருவரில் ஒருவர் வருவார் என்றும் தெரிவித்தார். ராமேசுவரத்தில் காசி தமிழ்ச்சங்கமம் விழா, ராமேசுவரம்-தாம்பரம் புதிய வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா, புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழா ஆகியவற்றில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது. தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலன் நகர் அருகே பள்ளத்தி வயலில் தனியாருக்கு சொந்தமான 59 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.
மேலும் தற்போது இந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அங்கு 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார், உளவுத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவும் ஆய்வு செய்தார். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் உள்ளிட்ட கருவிகளை வைத்தும், டிரோன்களை பறக்கவிட்டு அந்த இடத்தின் பாதுகாப்பு தன்மையும் உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் பெயர்கள், பின்புலங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கான ஹெலிபேடு தளம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி வருகை குறித்த தகவல் தமிழக பா.ஜ.க.வினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.