உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து முதல்வரிடம் விரைவில் வெள்ளை அறிக்கை வழங்கப்படும்- அண்ணாமலை

Published On 2023-05-21 06:25 GMT   |   Update On 2023-05-21 08:57 GMT
  • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு அறிவுறுத்த கவர்னருக்கு அதிகாரம் உண்டு.
  • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையை மட்டுமல்ல அரசு வழக்கறிஞர்களையும் தவறாக வழி நடத்தியுள்ளனர்.

சென்னை:

பாரதிய ஜனதா கட்சியினர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி, மாநில செயலாளர் பிரமிளா சம்பத் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கவர்னரிடம் மனு அளித்தனர்.

கவர்னரை சந்தித்த பிறகு அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கள்ளச்சாராய உயிரிழப்பு உள்ளிட்டவை குறித்து கவர்னரிடம் 2 மனுக்களை அளித்துள்ளோம். கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழகத்தில் டாஸ்மாக்கின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதை கவர்னரிடம் எடுத்து கூறி உள்ளோம். அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இன்னும் 15 நாட்களுக்குள் டாஸ்மாக்கை குறைத்து அதே வருமானத்தை கொண்டு வர முடியும் என்கிற வெள்ளை அறிக்கையையும் முதலமைச்சரிடம் கொடுப்பதாக நாங்கள் கவர்னரிடம் கூறியுள்ளோம்.

காவல் துறைக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று மகளிர் அணியுடன் வந்து கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இதற்கான அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது என்று நம்புகிறோம். அரசியலமைப்பு சட்டத்தை அமைச்சர் மீறும்போது அதை காக்கும் பொறுப்பு கவர்னருக்கு உண்டு.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு அறிவுறுத்த கவர்னருக்கு அதிகாரம் உண்டு.

தமிழகத்தில் காவல் துறைக்கு சுதந்திரம் இல்லை. தி.மு.க. ஒன்றிய செயலாளர் அனுமதி இல்லாமல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முடியுமா? கடந்த 2 வருடங்களாகவே நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காவல் துறைக்கு சுதந்திரம் இல்லை என்பது தான். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையை மட்டுமல்ல அரசு வழக்கறிஞர்களையும் தவறாக வழி நடத்தியுள்ளனர்.

இதே போல் அமைச்சர் செஞ்சி மஸ்தானையும் நீக்க கவர்னர் முதலமைச்சருக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

பனை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மீண்டும் கள்ளை கொண்டு வருவதற்கு தமிழக பா.ஜனதா கட்சி உறுதுணையாக நிற்கும். 15 நாளில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம். அடுத்த 5 நாளில் விழுப்புரத்தில் மாநாடு நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News