செய்திகள்

மணல் அள்ளியதை கண்டித்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

Published On 2018-12-01 17:15 GMT   |   Update On 2018-12-01 17:15 GMT
இளையான்குடி அருகே மணல் அள்ளியதை கண்டித்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இளையான்குடி:

இளையான்குடி ஒன்றியம் வடக்கு கீரனூர் கிராமத்தில் மணல் அள்ளுவதாக இளையான்குடி தாசில்தார் தமிழரசனுக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவர், வருவாய் ஆய்வாளர் காசியம்மாள், கிராம உதவியாளர் பாலமுருகன் ஆகியோருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது 3 லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் சென்று அதிகாரிகள் விசாரித்த போது, சவடு மண் அள்ள அனுமதி பெற்று, மணல் அள்ளியது தெரியவந்தது. இதை தடுக்க முயன்ற அதிகாரிகளை லாரி டிரைவர்கள் சிவகங்கையை சேர்ந்த சரவணன் (வயது 44), காளையார் கோவிலை சேர்ந்த ஆறுமுகம் (35) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதையடுத்து அதிகாரிகள் இளையான்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் டிரைவர்களை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரும்பச்சேரியை சேர்ந்த ஒப்பந்தகாரர் முருகன், லாரி உரிமையாளர்கள் சிவகங்கையை சேர்ந்த புவியரசன், காளையார்கோவில் காளீஸ்வரன், மானாமதுரை சிங்காரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News