வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு 7,35,191 பேர் பெயரை சேர்க்க விண்ணப்பம்
- வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர்.
- முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் ஆவார்கள்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீர் செய்ய சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பீகாரில் தொடங்கிய இந்த பணி, 2-ம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, குஜராத், அசாம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில், இந்த தீவிர திருத்தப்பணி மிகவும் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியின் முதல் கட்டமாக வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுத்து பூர்த்தி செய்து பெறப்பட்டன. கடந்த மாதம் 4-ந்தேதி தொடங்கிய இந்த பணி, கடந்த 14-ந்தேதி முடிவடைந்தது. இந்த பணியின் அடிப்படையில் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதன்படி அக்டோபர் மாதத்தில் இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 என்ற வாக்காளர் எண்ணிக்கை, வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 பேர் மட்டுமே இடம் பெற்றனர்.
அதாவது மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர். அதில் இறந்தவர்கள் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர். முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் ஆகும்.
இந்த வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க படிவம் 6 மற்றும் உறுதிமொழி சான்றிதழ் கொடுத்து பெயர் சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த பணி அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி வரை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அல்லது 19-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,35,191 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேட்பாளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க 9505 பேர் விண்ணப்பத்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர்.