அதிமுக சார்பில் போட்டியிட 9,500 பேர் விருப்ப மனு: விரைவில் நேர்காணல்..!
- அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட கடந்த 15-ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம்.
- இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் சுமார் 9,500 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று 31-ந்தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி விருப்ப மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. மொத்தம் சுமார் 9,500 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் விரைவில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.