null
ம.பி.யில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்வு... ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
- 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பகீரத்புராவில், கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 25 அன்று இந்தூர் நகராட்சி மூலம் விநியோகிக்கப்பட்ட தண்ணீரின் சுவை வித்தியாசமாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பகீரத்புரா குடியிருப்பாளர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
மூன்றுபேர் உயிரிழந்ததை அடுத்து நேற்று நள்ளிரவில் முதலமைச்சர் மோகன் யாதவ் நகராட்சி மற்றும் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்தார். இதன்படி, மண்டல அதிகாரி சாலிகிராம் சித்தோலே மற்றும் உதவிப் பொறியாளர் யோகேஷ் ஜோஷி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பொதுச் சுகாதாரப் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுபம் ஸ்ரீவஸ்தவாவும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது ஒரு சோகமான நிகழ்வு எனக்குறிப்பிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். சிகிச்சையில் இருப்பவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்தார். இதனிடையே இச்சம்பவத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.