செய்திகள்

மக்களுக்கு எதிரான திட்டங்களை கருத்து கேட்காமல் செயல்படுத்த நினைப்பதா?- அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

Published On 2018-10-10 20:43 GMT   |   Update On 2018-10-10 20:43 GMT
மக்களுக்கு எதிரான திட்டங்களை கருத்து கேட்காமல் செயல்படுத்த நினைப்பதா? என்று அ.தி.மு.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு, மத்திய பா.ஜ.க. அரசிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு கோரிக்கை விடுத்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக ஸ்டெர்லைட் தனியார் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள பேனா மை ஈரம் காய்வதற்குள், அ.தி.மு.க அரசு விடுத்துள்ள இந்த திடீர் கோரிக்கை உள்நோக்கத்துடன் கூடிய சுயநலம் கொண்டது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் இதற்காகவே டெல்லி சென்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே உதவியது போல், அந்த குழுமத்தின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கும் உதவுவதற்கான அ.தி.மு.க அரசின் முன்னோட்டமாக அமைந்துள்ளது.

மக்களின் நலனுக்காக போராடும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் திட்டங்களை நிறைவேற்றுவது தாமதமாகிறது என்று அந்த கோரிக்கை மனுவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால் அரசியல் கட்சிகளோ, அரசு சாரா அமைப்புகளோ எந்த காலத்திலும் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும் நிச்சயமாக எதிரானவை அல்ல. அதனால்தான் மக்களின் விருப்பத்துடன் கூடிய ஒப்புதலுடன் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இதைக்கூட சரியான கோணத்தில் புரிந்து கொள்ளாத அ.தி.மு.க அரசு, தனது கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக, வேண்டுமென்றே அரசியல் கட்சிகள் மீது பழி போட்டு, இப்படியொரு கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழிற்சாலைகளோ, புதிய திட்டங்களோ, முதலீடுகளோ தலைவிரித்தாடும் அ.தி.மு.க அரசின் ஊழல் மற்றும் கமிஷன் கலாசாரத்தால், வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றனவே தவிர, மக்கள் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் ஓயாமல் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளால் அல்ல.

தங்கள் முதுகில் படிந்திருக்கும் ஊழல் அழுக்கை கிஞ்சிற்றும் நீக்க முடியாத அ.தி.மு.க அரசும், அதன் அமைச்சர்களும் மக்களுக்கு எதிரான திட்டங்களை, கருத்துக்கேட்காமலேயே செயல்படுத்துவோம் என்ற எதேச்சதிகார மனப்பான்மையில் செயல்படுவது, ஆணவத்தின் உச்சகட்டம். ஆகவே, மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையை அ.தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற்று, முக்கியத் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஜனநாயக ரீதியாக மக்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டங்களை நடத்த கண்டிப்பாக முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #MKStalin #DMK #ADMK #BJP
Tags:    

Similar News