உலகம்

நாட்டு மக்களுக்காக என்னிடம் திட்டம் உள்ளது: நாடு திரும்பிய வங்கதேச முன்னாள் பிரதமர் மகன் பேச்சு

Published On 2025-12-25 19:58 IST   |   Update On 2025-12-25 19:58:00 IST
  • 2008-ம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து லண்டன் சென்றார்.
  • தாய் உடல்நிலை மோசமாக உள்ளதால் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்காளதேச தேசியவாத கட்சி தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80) விடுதலை செய்யப்பட்டார்.

சமீபத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து லண்டனில் இருக்கும் அவரது மகன் தாரிக் ரகுமான் (60) வங்காளதேசத்துக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால் தாரிக் ரகுமான் நாட்டை விட்டு வெளியேறி, இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வந்தார். 2008-ம் ஆண்டு தாரிக் ரகுமான் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை அரசாங்கம் விடுவித்த பிறகு 2008-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.

தற்போது தாரிக் ரகுமான் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு அவர் இன்று வங்காள தேசத்துக்கு திரும்பினார். அவர் தனது மனைவி ஜுபைதா ரகுமான், மகள் ஜைமா ரகுமான் ஆகியோருடன் லண்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்டார்.

தாரிக் ரகுமான் பயணித்த விமானம் இன்று காலை 10 மணிக்கு சில்ஹெட் உஸ்மானி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அங்கு தாரிக் ரகுமானுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வங்காளதேச தேசியவாத கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். சாலையின் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கட்சி கொடியை அசைத்தபடி தாரிக் ரகுமானை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

அதன்பின் அவர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் கலிதா ஜியாவைச் சந்தித்தார். இதற்கிடையே தனது கட்சியினர் மத்தியில் தாரிக் ரகுமான் உரையாற்றினார்.

அப்போது அவர் "எல்லோரும் இணைந்து நாட்டை கட்டமைக்கும் நேரம் இது. பாதுகாப்பான வங்கதேசத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். வங்கதேசத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என யாராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி, பாதுகாப்பாக வந்து சேர வேண்டும். நாட்டு மக்களுக்காகவும், நாடுகளுக்காகவும் நான் திட்டம் வைத்துள்ளேன்" என்றார்.

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடவும் வங்காளதேச தேசியவாத கட்சி செயல் தலைவரான தாரிக் ரகுமான் முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டு கொல்லப்பட்டதால் சமீபத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தாரிக் ரகுமான் நாடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News