செய்திகள்

மலேசியாவில் இருந்து சென்னை வந்த வாலிபர் கடத்தல்

Published On 2018-05-28 08:49 IST   |   Update On 2018-05-28 08:49:00 IST
வாங்கிய கடனை திருப்பி தராததால் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வாலிபர், காரில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் இப்ராகீம்(வயது 26). இவர், சொந்தமாக தொழில் செய்வதற்காக தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த அமீன்(26) என்பவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.20 லட்சத்தை கடனாக பெற்றதாகவும், அதில் ரூ.11 லட்சத்தை இப்ராகீம் திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் மீதம் உள்ள ரூ.9 லட்சம் கடனை திருப்பி தராமல் இப்ராகீம், மலேசியாவுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. ஓராண்டு மலேசியாவில் இருந்த இப்ராகீம், தனது குடும்பத்தினரை பார்க்க சென்னைக்கு திரும்பி வந்தார்.

இதை அறிந்த அமீன், தனது தம்பி தமீம்(25), நண்பர் சாகுல் உள்பட 3 பேருடன் காரில் விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த இப்ராகீம், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, அவரை அமீன் தடுத்து நிறுத்தி காரில் ஏற்றி, தாம்பரத்துக்கு கடத்திச்சென்றார்.

அங்கு தனக்கு தரவேண்டிய ரூ.9 லட்சம் பணத்தை திரும்பி தரவேண்டும் என்று கேட்டு மிரட்டினார். பின்னர் இப்ராகீமின் தந்தை சாகுல்அமீத்திற்கு போன் செய்த அவர், மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தபோது சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து வைத்து விட்டார்கள். உடனே ரூ.9 லட்சம் பணத்தை கொண்டு வரவேண்டும் என்று தந்தையிடம் கூறும்படி இப்ராகீமிடம் வற்புறுத்தினார்.

ஆனால் செல்போனை வாங்கி பேசிய இப்ராகீம், தான் கடத்தப்பட்டு இருப்பதாகவும், ரூ.9 லட்சம் பணம் கேட்பதாகவும் தந்தையிடம் கூறினார்.

மேலும் பணத்தை தராமல் போலீசுக்கு சென்றால் இப்ராகீமை கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு இப்ராகீமின் தந்தை சாகுல்அமீது, தற்போது ரூ.9 லட்சம் இல்லை. ரூ.3 லட்சம் மட்டும் தருவதாக ஒப்புக்கொண்டார். அந்த பணத்தை தாம்பரம் கொண்டுவருமாறு கூறினர். அதற்கு சாகுல்அமீது, அங்கு வரமுடியாது. திருவல்லிகேணிக்கு வந்தால் பணத்தை தருவதாக கூறினார்.

பின்னர் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வருமாறு கூறிய சாகுல்அமீது, இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து தாம்பரத்தில் இருந்து காரில் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் வந்தனர். பின்னர் தனது தம்பி தமீமுடன் இப்ராகீமை அனுப்பி வைத்து, பணத்தை வாங்கி வரும்படி கூறிய அமீன் உள்பட 3 பேரும் காரில் இருந்தனர். அதன்படி அங்கு சென்ற தமீமை அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, இப்ராகீமை பத்திரமாக மீட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமீன் உள்பட 3 பேரும் அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டனர். இது பற்றி விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அமீன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News