நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் பெண்கள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
- இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
- நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:
இந்திய மக்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்ட 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியத் தாயின் தெய்வீக வடிவத்திற்கான ஒரு பாடலாக திகழும் 'வந்தே மாதரம்' பாடல், ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் தேசபக்தியை விதைக்கிறது. தமிழ் கவிஞர் பாரதி, வந்தே மாதரம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் என்பது இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய குடியரசு நாட்டின் அடிப்படை ஆவணமாகும்.
விளையாட்டுத் துறையில் மகளிர் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மகள்கள் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், பின்னர் பார்வையற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் வென்று வரலாறு படைத்தனர்.
நமது இந்திய சகோதர, சகோதரிகள் கடின உழைப்பால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
நமது நாட்டை சுத்தமாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உலகத்தரம் வாய்ந்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியை வடிவமைக்கின்றனர். நமது முப்படைகளின் துணிச்சலான வீரர்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
நமது வாக்காளர்கள் தங்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். வாக்களிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது நமது குடியரசின் சக்திவாய்ந்த பரிமாணமாகும்.
'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' இயக்கம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனாவின் கீழ் இதுவரை 570 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 56 சதவீதம் பெண்களுடையது என தெரிவித்தார்.