'வி.சி.க.வில் இருபது பேர் மட்டுமே' - சர்ச்சை பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
- ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் நன்கு அறிவார்.
- ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்’
தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்,
"திருமாவளவன் அவர்களே, நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள், ஆனால் உங்களுடைய கட்சி இங்கு மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. நீங்களும், 20 பேரும் மட்டும் தான் கட்சியில் இருக்கிறீர்கள். விசிகவில் 20, 30 தலைவர்கள் மட்டும் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொண்டர்கள் அனைவரும் இங்கு மாறிவிட்டார்கள். அறிவாலயத்தில் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் இன்றைக்கு வரைக்கும் ஏன் சிலை வைக்கவில்லை. திருமாவளவனை திமுகவினர் அடியாளாக பயன்படுத்துகின்றனர். அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, அதிகாரத்துக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு." எனப் பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சுக்கு விசிக தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தநிலையில் அதற்கு விளக்கமளித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு...
இன்று நடந்த த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்ததை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன்.
'ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு...' என்கிற முழக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் அவர்களின் கரங்களில் கிடைக்கும் வரை என் குரல்வளையிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த முழக்கத்தையும் என் குரலையும், 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது' என நினைக்கும் தி.மு.க தலைமை கடுமையாக ஒடுக்கப் பார்க்கிறது. அவ்வகையிலேயே என் பேச்சும் இன்று அவர்களால் திரித்துவிடப்பட்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் நன்கு அறிவார். எனது கல்லூரிக் காலம் முதலே பெருமதிப்பும் மரியாதையும் கொண்டு நான் நேசிக்கும் தலைவர் அவர். அதை உணர்ந்தவராகவே எப்போதும் நீங்கா அன்புடனும் என்னுடன் உரையாடுகிற, உறவாடுகிற தலைவராக திருமாவளவன் இருந்துவருகிறார்கள்.
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்' என திருமாவளவன் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருகிறார். ஆனால் அந்தக் கட்சியிலுள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி 'முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்' என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, 'வி.சி.க-வில் இருபது நபர்கள் மட்டுமே இருப்பதாக' நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
எனது பேச்சில் சொல்ல வந்த கருத்து முழுமைபெறாமல் போனதால், அது முற்றிலும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திகொண்டு, மிகத் தவறான விதத்தில் எனது பேச்சும் கருத்தும் தி.மு.க சக்திகளால் திரித்துப் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க-வின் இந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, அடிமட்ட வி.சி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள்.
வி.சி.க-வின் கொடிக்கம்பங்களைக்கூட சுதந்திரமான முறையில் நட முடியாத அளவிற்கு, ஆளும் அதிகார மையம் செய்யும் அடக்குமுறையை ஒடுக்குமுறையை அனைவருமே அறிவார்கள். அப்படி தம் உரிமைகளுக்காக நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின்மீது அதிகாரத்தைச் செலுத்தி அநியாய வழக்குகளை இந்த அரசு பதிவுசெய்ததை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட; ஒடுக்கப்பட்ட மக்களின்மீதே வழக்குப்பதிவு செய்த வஞ்சகத்தை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். தம்மைத் தேர்ந்தெடுத்த எளிய மக்களுக்கு இன்றைய அதிகார ஆளும் வர்க்கம் கொடுத்த 'ஒடுக்குமுறை' பரிசை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
வாக்கு அரசியலை மட்டுமே மனதில் கொண்டு, இந்த எளிய மக்களை ஆளும் தி.மு.க அதிகார வர்க்கம் சுரண்டுகிறது. தனது வாக்குத் தேவைக்காக மட்டும் வி.சி.க-வின் தோழர்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சி அரசியலையே எப்போதும் தி.மு.க செய்துவந்திருக்கிறது; வருகிறது. அதை மிக அருகிலிருந்து பார்த்து நன்கு அறிந்தவன் நான்.
அதனாலேயே, வி.சி.க-வுக்குள், தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள் குறித்து நான் குறிப்பிட்டுப் பேசினேன். அறிந்த உண்மையைப் பேசினேன். அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களை வைத்தே எங்கள் கட்சி மீதான விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியோ, நாங்களோ எவ்வித அதிகாரத்திலும் இதுவரை இருந்தது இல்லை. அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்... அந்த மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமும் நிலைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, இந்த அரசியல் பயணத்தில் களமாடி வருகிறோம். அந்த உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவரும்.
வி.சி.க இயக்கத்தில் தி.மு.க-வின் குரலாகச் செயல்பட்டு வரும் அந்த 20 நபர்கள் குறித்த உண்மை முகமும் ஒருநாள் உலகிற்குத் தெரியவரும். ஏன்? இப்போது அண்ணனுடன் பயணிக்கும் பலருக்கும் அந்த நபர்களைக் குறித்த உண்மைகள் தெரியுமே! நான் எனது அரசியல் பயணத்தை எந்தக் களத்திலிருத்து எந்த நோக்கத்திற்காகத் துவங்கினேனோ, அந்த நோக்கத்திலிருந்து இதுவரை நான் தடம் மாறவில்லை.
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம்' என்கிற எனது குரல், அவர்கள் அதிகாரத்தை அடையும் வரை என்னிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நான் எப்போதும் அன்பும், நேசமும் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கு மிக அன்போடு தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனது கருத்து, தவறான வகையில் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க செய்துவருகிற அந்தத் திரிப்பு அரசியலுக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த விளக்கப் பதிவு.
'ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு' என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், எப்போதும் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.