தமிழ்நாடு செய்திகள்

'பெண்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை' - குற்றச்சம்பவங்கள் குறித்து கமல்ஹாசன் ஆவேசம்

Published On 2026-03-12 20:11 IST   |   Update On 2026-03-12 20:11:00 IST
  • 32 வருடங்கள் கடந்தாலும் சாக்கடை சுத்தமாகவில்லை
  • பெண்கள், குழந்தைகள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை

இந்தியாவிலேயே பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக திகழும் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வால் புகார்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடந்த இரண்டு நாட்களிலேயே நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நெஞ்சை உலுக்கியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தாண்டி கொலை, கொள்ளை, போதைப்பொருள் என பல்வேறு வழிகளில் குற்றச் சம்பவங்கள் பெருக்கெடுத்து வருகின்றன.

குற்றங்களை தடுக்க அரசும், காவல்துறையும் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. கண்டனங்களும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அரசுத் தரப்பிலோ, காவல்துறை தரப்பிலோ நடவடிக்கை எடுக்கிறார்களா? எடுத்தும் அதிகரிக்கிறதா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இதனிடையே எதிர்க்கட்சிகள் பலரும் திமுக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சட்டம், ஒழுங்கு தொடர்பாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மநீம தலைவருமான, நடிகருமான கமல் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

"சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது… இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்"

சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை." என குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை, அரசைத் தாண்டி ஒழுக்கம் இல்லாத எந்த இடத்திலும் சுதந்திரம் இருக்காது. சுதந்திரம் இல்லையெனில் அங்கு வன்முறைகளும், பெண்கள், சிறுபான்மையினர், எளியோர், ஏழை, சாதி என்னும் பெயரால் தாழ்த்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் எதிராகவும் வன்கொடுமைகள் அரங்கேறும் என்பது எழுதப்படாத விதி. 

Tags:    

Similar News