கிரிக்கெட் (Cricket)

'குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் முயற்சி' - வங்கதேச விவகாரத்தில் தலையிட்ட பிசிபியை சாடிய ஹர்பஜன் சிங்

Published On 2026-01-25 21:26 IST   |   Update On 2026-01-25 21:26:00 IST
  • பாகிஸ்தான் தலையீடு வங்கதேசத்திற்குதான் இழப்பு
  • இந்த விவகாரத்திற்கும், பாகிஸ்தானிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

2026 இந்தியன் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் தேர்வு ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். அப்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தநிலையில், கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக்கானை இந்து தலைவர்கள் பலரும் தேசத்துரோகி என விமர்சித்தனர்.

இதனைத்தொடர்ந்து பிசிசிஐ தலையீடு காரணமாகவும் முஸ்தபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் விளையாடமாட்டோம் எனவும் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றவேண்டும் எனவும் தெரிவித்தது.

ஆனால் ஐசிசி அதன் கோரிக்கையை ஏற்காததால், வங்கதேசம் தொடரில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. வங்கதேசம் நீக்கப்படுவதற்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, வங்கதேசம் நீக்கப்பட்டால், பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் பங்கேற்காது எனத் தெரிவித்து, தங்கள் அணியின் முடிவை அரசுதான் எடுக்கும் என்றும், இது இரட்டை நிலைப்பாடு என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஐசிசி பாகிஸ்தான் விலக முடிவு செய்தால், வரலாறு காணாத தடையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடருக்கான தங்கள் அணியை அறிவித்துள்ளது.  

இந்நிலையில் வங்கதேச விவகாரத்தில் பாகிஸ்தான் தலையீடு தொடர்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். , இது பாகிஸ்தானின் "குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் முயற்சி" என்று விமர்சித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையானது, இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு "இரண்டுக்கு ஒன்று" (2 vs 1) என்ற போட்டியை உருவாக்கும் தேவையற்ற முயற்சி என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து "ஏற்கனவே பாகிஸ்தான் இலங்கையில் விளையாடுகிறது. இந்த விவகாரத்திற்கும், பாகிஸ்தானிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேவையில்லாத விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுகிறது. இதனால் வங்கதேச கிரிக்கெட் அணியும் அதன் வீரர்களும்தான் பாதிப்படைவார்கள். உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் இழப்பது மிகப்பெரியது. இந்தியாவுக்கு வரவில்லை என்று நேரடியாக மறுப்பு தெரிவிக்கும் முன், ஐசிசியுடன் கலந்துரையாடுவதற்கான வழிகளை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

டி20 உலகக் கோப்பை இங்கிலாந்திலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ நடத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட இல்லை, ஆனால் இங்கே அவர்கள் உண்மையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருக்கலாம். எனவே இது யாருடைய தோல்வியும் அல்ல, வங்கதேசத்தின் தோல்வி" என தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News