null
20 ஓவர் உலக கோப்பை: மிரட்டல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை
- பிரதமர் தற்போது பாகிஸ்தானில் இல்லை.
- அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று வங்காளதேசம் அறிவித்தது. இதனால் வங்காளதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை சேர்த்து ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முடிவு எடுத்தது.
இதற்கிடையே வங்காளதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி கூறியதாவது:-
இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. செயல்படுகிறது. இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வங்காள தேசத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்த நிலைப்பாடு அரசின் அறிவுறுத்தலின்படியே இருக்கும். பிரதமர் தற்போது பாகிஸ்தானில் இல்லை. அவர் திரும்பியதும் எங்களின் இறுதி முடிவு தெரிய வரும். அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஐ.சி.சி.-ன் கீழ் நாங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் வங்காள தேசத்துக்கு ஆதரவாக உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் விலக முடிவு செய்தால் வரலாறு காணாத தடையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இரு தரப்பு தொடர், ஆசிய கோப்பையில் ஒதுக்கி வைத்தல், பி.எஸ்.எல். போட்டிகளுக்கு தடையில்லா சான்றிதழ் இல்லை, சர்வதேச போட்டிகள் இல்லை என பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், கடுமையான வருவாய் இழப்பும் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.