பொது மருத்துவம்

ஆலிவ் எண்ணெயின் முழு பலனையும் அறிந்தால் கண்டிப்பாக அதனை பயன்படுத்த தொடங்கிவிடுவோம்!

Published On 2025-10-25 12:09 IST   |   Update On 2025-10-25 12:09:00 IST
  • ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாம்!
  • ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.

ஆலிவ் எண்ணெய், சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது என நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இருந்தபோதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் ஆலிவ் எண்ணெயின் முழு பலனையும் அறிந்தால் கண்டிப்பாக அதனை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். ஆலிவ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம். 

மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்

இதயத்திற்கு நன்மை பயக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் (Monounsaturated Fats - MUFAs) ஆலிவ் எண்ணெயில் நிறைந்துள்ளது. மேலும் 13.8% நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. அதேசமயம் 10.5% பாலிஅன்சாச்சுரேட்டட் உள்ளது. அதாவது ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.  இருப்பினும் ஆலிவ் எண்ணெயின் முக்கிய கொழுப்பு அமிலம் ஒலிக் அமிலமாகும். நிறைவுறா கொழுப்பான ஒலிக் அமிலம் மொத்த எண்ணெய் உள்ளடக்கத்தில் 71% ஆகும். ஒலிக் அமிலம் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் புற்றுநோயுடன் தொடர்புடைய மரபணுக்களில் கூட நன்மை பயக்கும் பண்புகளை விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது. 

ஆக்ஸிஜனேற்றிகள்

1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயில் தினசரி மதிப்பில், 13% வைட்டமின் E-யும், 7% வைட்டமின் K-யும் உள்ளது. மேலும் பாலிஃபீனால்கள், வைட்டமின் E, ஸ்குவாலீன் போன்ற உயிரியல் ரீதியாக செயல்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்துள்ளன. இவை இருதய மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்க உதவும். அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதோடு, ரத்தக் கொழுப்பை ஆக்சிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

புற்றுநோய், இதய நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, வகை 2 நீரிழிவு நோய், அல்சைமர், கீல்வாதம், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு அடிப்படை காரணம் நாள்பட்ட அழற்சி எனக் கண்டறியப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் உள்ள முக்கிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த நோய்களுக்கு எதிராகப் போராடுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, வீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் முக்கியமானது ஓலியோகாந்தல் கலவை. இது இப்யூபுரூஃபன் (ibuprofen) போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் போலவே செயல்படுவதாகவும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒலிக் அமிலம், சி-ரியாக்டிவ் புரதம் அழற்சிகளைக் குறைக்கின்றன. 

பக்கவாதத்தை தடுக்க உதவும்

இரத்த உறைவு அல்லது இரத்தப்போக்கு காரணமாக மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, மரணம் ஏற்படுவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளது. 2014ஆம் ஆண்டு 841,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆலிவ் எண்ணெய் சாப்பிட்ட இவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் 2020ல் ஆலிவ் எண்ணெய் உட்கொள்ளலுக்கும், பக்கவாத ஆபாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்டறியப்பட்டது. 


புற்றுநோய் அபாயத்தை ஆலிவ் எண்ணெய் குறைக்கிறது

இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், மத்திய தரைக்கடல் நாடுகளில் இதய நோய் அபாயங்கள் குறைவாக இருந்தன. இது அந்நாடுகளின் உணவுமுறை பழக்கத்தை ஆய்வுசெய்ய வழிவகுத்தது. அப்போது அவர்கள் உணவில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் முக்கியப் பொருளாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஆலிவ் ஆயில் ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டது. 

எடை இழப்பு

ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கின்றன என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. காரணம் இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFA) பசியைக் கட்டுப்படுத்தவும், உடலில் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இருப்பினும், எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்பதையும், ஆலிவ் எண்ணெய் விதிவிலக்கல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.  

அல்சைமர் நோயை எதிர்த்து போராடும்

அல்சமைர் நரம்புச்சிதைவு நிலைகளில் ஒன்றாகும். இது மறதி நோய்க்கும் வழிவகுக்கும். அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணம் மூளை செல்களுக்குள் பீட்டா-அமிலாய்டு (Beta-amyloid) பிளேக்குகள் குவிவதாகும். ஆலிவ் எண்ணெய் இந்த பீட்டா- அமிலாய்டு சுரப்பிகளை தடுக்கும் என்றும், அல்சைமர் நோய் மற்றும் அறிவாற்றல் குறைபாட்டை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்

ஆலிவ் எண்ணெய் வகை 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைக் குறைக்க உதவும். அதுபோல ஆலிவ் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் CRP (சி-ரியாக்டிவ் புரதம்) அளவைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஹெலிகோபாக்டர் பைலோரி (எச். பைலோரி) பாக்டீரியாவுக்கு எதிராக போராடக்கூடிய பண்பு ஆலிவ் எண்ணெயில் உள்ளது.  

Tags:    

Similar News