null
தினமும் முட்டை சாப்பிடலாமா? முட்டை சாப்பிடும்போது உடலில் நிகழும் மாற்றம் என்ன?
- கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்
- முட்டையில் உள்ள ஊட்டச்சத்துகள் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சிறியதாக இருந்தாலும் ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்தாக இருப்பதுதான் முட்டை. ஒவ்வொரு நாளும் 27% அமெரிக்கர்கள் முட்டையை வேகவைத்தோ, ஆம்லெட்டாகவோ அல்லது சாண்ட்விச்சின் ஒரு பகுதியாகவோ எடுத்துக்கொள்கிறார்கள். காரணம் முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் முட்டையை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடும்போது உடலில் நிகழும் மாற்றம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
ஒரு முட்டையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்
கலோரிகள்: 71
மொத்த கொழுப்பு: 5 கிராம்
புரதம்: 6.24 கிராம்
வைட்டமின் பி12: 0.5 மைக்ரோகிராம்
வைட்டமின் டி: 1.24 மைக்ரோகிராம்
கால்சியம்: 24 மி.கி.
கோலின்: 169 மி.கி.
கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்
முட்டையில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள்
புரதம்
முட்டையில் அதிகளவு புரதம் உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் பசியை கட்டுப்படுத்தும். முட்டைகள் தசைகளைப் பராமரிக்கவும், திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதியில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
வைட்டமின் டி
முட்டையில் நிறைந்துள்ள பலவிதமான வைட்டமின்கள் பல நன்மைகளைத் தருகின்றன. இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பயோட்டின் (Biotin), மற்றும் ஃபோலேட் ஆகியவை அடங்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன.
கோலின்
செல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான கோலின், முட்டையில் உள்ளது. கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிப்பதைத் தவிர, கோலின் கொழுப்பைக் கடத்துவதற்கும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு, முட்டைகள் கருவின் வளர்ச்சிக்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில் அவை மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வைட்டமின் பி12
இரண்டு முட்டைகள் ஒரு நாளைக்குத் தேவையான பி12- ல் மூன்றில் ஒரு பங்கை கொடுக்கின்றன. இந்த வைட்டமின் "சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும், நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை ஆதரிப்பதற்கும் அவசியம்.
ஆக்ஸிஜனேற்றிகள்
முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
தினசரி முட்டை எடுத்துக்கொள்ளலாமா?
ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது. வயதானவர்கள், அதிக புரதத் தேவைகள் உள்ளவர்கள் ஒருநாளைக்கு இரண்டு முட்டை எடுத்துக்கொள்ளலாம். எப்போதாவது அதிகமாக சாப்பிடுவது பிரச்சனையில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கும்மேல் சாப்பிடுவது நீரிழிவு, அதிக கொழுப்பு அல்லது இதய நோய் உள்ளவர்களுக்கு உகந்ததாக இருக்காது. அவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக்கொள்ளலாம். புரதச்சத்துக்கு வெறும் முட்டையை மட்டும் நம்பியில்லாமல், மீன் போன்ற மற்ற புரதச்சத்து நிறைந்தவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.