null
அதிக பசி எடுக்கிறதா? முகத்தில் பருக்கள் அதிகமாக வருகிறதா? இதுதான் காரணமாம்!
- குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது!
- எடை இழப்பு மற்றும் எடை அதிகரித்தலுக்கு குடல் புழுக்கள் ஒரு காரணியாக உள்ளன.
"தம்பிக்கு, பாப்பாவுக்கு நாக்குப்பூச்சி மாத்திரை கொடுக்கணும். இந்த மாசம் நிறைய சாக்லேட் சாப்பிட்டா. வயித்துல புழு இருக்கும்" என நம்மை சுற்றி இருக்கும் சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என சிறுவயது குழந்தைகளின் பெற்றோர் கூற கேட்டிருப்போம். குழந்தைகளுக்கு குடலில் எளிதாக புழுக்கள் உருவாகும். அதனால் அவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் கொடுப்பார்கள். ஆனால் அதை கேட்கும், பார்க்கும் நாம் என்றாவது குடல்புழு மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளோமா? குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது. குடல் புழுக்களால் பெரியவர்களுக்கும் ஆபத்து உள்ளது. நமது குடலில் புழுக்கள் உள்ளன என்பதை எவ்வாறு கண்டறியலாம். அதற்கான அறிகுறிகளை இங்கு காணலாம்.
அதிகப்படியான பசி
நாம் வேளை வேளைக்கு சரியாக உணவு எடுத்துக்கொண்டாலும், அடிக்கடி பசி எடுக்கும். குடல் ஒட்டுண்ணிகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் பாதிப்படையும். உதாரணமாக அஸ்காரியாசிஸ் போன்ற புழுக்கள் உடலில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்துகள் உறியப்படும்போது நமக்கு அடிக்கடி பசி எடுக்கும். நாம் இடையில் நொறுக்குத்தீணிகள் எடுத்துக்கொண்டாலும் பசி அடங்கவில்லை என்றால் கண்டிப்பாக குடல் புழுக்களுக்கான அபாயம் உள்ளது.
பருக்கள், தோல் பிரச்சனைகள்
தோல் வெடிப்புகள், புதிய தடிப்புகள் அல்லது அரிப்பு புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனைகள் பொதுவாக உணவு, ஹார்மோன்கள் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. ஆனால் சில புழு தொற்றுகளும் தோலில் தடிப்புகள் அல்லது புண்கள் போன்ற வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன. உதாரணமாக, தோல் லார்வா மைக்ரான்ஸ் (கொக்கிப்புழு லார்வாக்களால் ஏற்படுகிறது) தோலில் ஊடுருவி அரிப்பு மற்றும் சிவப்பு நிற வெடிப்புகளை உருவாக்குகிறது. இவை வெளிப்புற பாதிப்புகள் என்றால், குடல் புழுக்கள் ஊட்டச்சத்து குறைபாடு, நோயெதிர்ப்பு மண்டல மாற்றங்கள் அல்லது வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்ற இரண்டாம் நிலை ஏற்றத்தாழ்வுகள் மூலம் சருமத்தை பாதிக்கும். இது பருக்கள் மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகளை காட்டும்.
எடை மாற்றம்
குடல் புழு தொற்று இருப்பதற்கான வழக்கமான அறிகுறிகள், வயிற்று வலி, வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். பெரியவர்களுக்கு இந்த அறிகுறிகள் சற்று மாறுபடும். லேசான அசௌகரியம், வாயு பிரச்சனைகள், வீக்கம், எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இருக்கும்.
பெரியவர்களும் குடல் புழு மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமானது
அரிப்பு
என்டோரோபயாசிஸ் போன்ற நூல் புழுக்கள், அதாவது அதன் பெண் புழுக்கள் இரவில் குடலை விட்டு வெளியே வந்து ஆசனவாயைச் சுற்றியுள்ள தோலில் முட்டையிடுவதால், கடுமையான அரிப்பு மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. பெரும்பாலும் பெரியவர்கள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். அதாவது வெறும் எரிச்சல், அவ்வளவு பெரிய விஷயமல்ல என்று நினைத்து இந்த தொற்றுகளை கண்டுகொள்வதில்லை.
சோர்வு, இரும்புச்சத்து குறைபாடு
புழுக்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை உண்ணும்போது, நமது உடல் போதுமான இரும்பு, புரதங்கள் அல்லது பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெறும் வாய்ப்புகளை இழக்கிறது. இது சோர்வு, சிலநேரங்களில் ரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ஒருவருக்கு காரணமில்லாமல் தொடர்ச்சியாக சோர்வு இருந்தால் கண்டிப்பாக குடல்புழுக்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டு, உங்களுக்கு குடல் புழுக்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், இரப்பை குடல் நிபுணரிடம் உங்கள் உடலில் தென்படும் அறிகுறிகளைக் கூறி ஆலோசனை பெறுங்கள்.