மன நோய்: ஆரம்ப அறிகுறிகளும்.. தற்காப்பு நடவடிக்கைகளும்..!
- சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள்.
- மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும்.
மன நல பிரச்சனை எந்த நேரத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். அது எப்படி உண்டாகும்? என்னென்ன அறிகுறிகளை வெளிப்படுத்தும்? அதனை எப்படி கையாள வேண்டும்? என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து செயல்பட்டால் மன நலனை பேணி பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் மன நோயாக மாறி மன நலனில் மட்டுமல்ல உடல் நலனிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன நோய்க்கு வித்திடும் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.
கவனம் செலுத்துவதில் சிரமம்
எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். மோசமான செயல்திறன் கொண்டிருப்பார்கள். தொடர்ந்து கவனச்சிதறலுடன் செயல்படுவார்கள். அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.
உடல் ரீதியான மாற்றம்
மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது பலருக்கும் பசியின்மை உண்டாகும். சாப்பாடு மீது விரக்தி ஏற்படும். சிலரோ வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். மன நலன் பாதிப்புக்குள்ளாகி வாந்தி எடுக்கவும் செய்வார்கள்.
மனநிலை மாற்றம்
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள். இயல்பாக பேசினால் கூட கோபத்தை கொப்பளித்துவிடுவார்கள். கோபம் அவர்களிடத்தில் தொடர்ந்து குடிகொண்டிருக்கும். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவார்கள். தனிமையை நாடுவார்கள். எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபடமாட்டார்கள். இதற்கு முன்பு விரும்பி செய்த விஷயங்களை கூட தவிர்ப்பார்கள்.
மதுப்பழக்கம்
எந்தவொரு பிரச்சனையையும் மன ரீதியாக எதிர்கொள்ள தைரியமில்லாமலோ, மனதுக்குள்ளேயோ விவாதித்து அதுபற்றி பிறரிடம் பேசத் தயங்குவதோ மன நல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். அதில் இருந்து மீள மது, போதை பழக்கத்தை நாடுவது நாளடைவில் அதற்கு அடிமைப்படுத்திவிடும்.
அதிக உணர்ச்சி நிலை
மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும். அதிகப்படியான பயம் எட்டிப் பார்க்கும். கவலைகள் ஆக்கிரமித்து பயத்தை அதிகப்படுத்தும். மனத்தெளிவு இல்லாமல் குழப்பம் குடிகொள்ளும். பதற்றமும் பற்றிக்கொள்ளும்.
உடல் வலி
மன நோயின் ஆரம்ப அறிகுறிகள் சிலருக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நாள்பட்ட தலைவலி, வயிற்றுப்போக்கு, தசை வலி, கை, கால் வலி என உடல் ரீதியான வலிகளை எதிர் கொள்வார்கள்.
நடத்தை
பிளேடு கொண்டு கைகளை கீறுதல், கத்தியைக்கொண்டு வெட்டுதல் போன்ற காயத்தை ஏற்படுத்தும் பொறுப்பற்ற நடத்தை, தற்கொலை பற்றிய சிந்தனை தலைதூக்குதல் போன்ற செயல்பாடுகள் மன நோயின் அறிகுறியாக கருதப்படும்.
மாற்றங்கள்
அன்றாட நடவடிக்கைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுதல், காரணமே இல்லாமல் சண்டையிடுதல், வாக்குவாதம் செய்தல், அச்சுறுத்துதல், மற்றவர்களுக்கோ அல்லது தனக்கோ தீங்கு விளைவித்தல் போன்ற செயல்பாடுகளையும் கொண்டிருப்பார்கள்.
நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?
உங்கள் அன்புக்குரியவர்கள் மன நல பிரச்சனைக்கு ஆளாகி இருந்து, இது போன்ற அறிகுறிகளுடன் செயல்பட்டால் அவர்களை நிதானத்துடன் கையாள வேண்டும். அன்பாக, பாசமாக வழி நடத்த வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்தாலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
இணைந்து பணியாற்றுங்கள்
குடும்பத்தினர், நண்பர்கள், உடன் வேலை செய்யும் சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பை எளிதாக்குங்கள்.
நண்பர்கள், குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் கருத்துகளில் நிறை, குறை இருந்தால் அவர்கள் மனம் நோகாதபடி சுட்டிக்காட்டுங்கள்.
உங்கள் நலம் விரும்பிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். இலக்குகளை நிர்ணயித்து திட்டமிடுங்கள். மனதுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்காமல் செயல்படுங்கள்.
தவிர்க்கும் வழிமுறைகள்
எதிர்மறை எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது. உங்கள் கவலைகளை நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து மன அழுத்தம் இருந்தாலோ, மன நலன் பாதிப்புக்குள்ளாகி நிம்மதியை இழந்தாலோ மன நல நிபுணரிடம் கவுன்சலிங் பெற வேண்டும்.
உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்கள் கூறும் கருத்துகளை நன்கு கவனியுங்கள். அவர்களிடம் பேசவோ, உங்களின் நிலை பற்றி அறிய கேள்வி கேட்கவோ தயங்காதீர்கள்.