பொது மருத்துவம்

அலட்சியம் செய்யக்கூடாத 12 வலிகள்...

Published On 2026-01-18 09:44 IST   |   Update On 2026-01-18 09:44:00 IST
  • பல்லில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம்.
  • உடல் உணர்த்தும் இத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணிக்கக் கூடாது.

உடலில் ஏற்படும் வலிகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியம் செய்து விடுகிறோம். ஆனால் அவற்றில் சில வலிகள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். ஒருபோதும் உதாசீனம் செய்யக்கூடாத 12 முக்கிய வலிகள் குறித்தும், அவை அடிக்கடி வருவது எத்தகைய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்ப்போம்.

மார்பு வலி

மார்பில் அடிக்கடி வலி ஏற்படுவது நல்லதல்ல. குறிப்பாக இடது கை அல்லது தாடை பகுதிக்கு வலி பரவினால், இதயக்கோளாறு, மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். உடனடி மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

வயிற்று வலி அல்லது வயிற்று பிடிப்பு

திடீரென வயிற்று வலியோ, வயிற்று பிடிப்போ ஏற்பட்டால் குடல் புண், பித்தப்பை கோளாறு போன்ற அவசர சிகிச்சை தேவைப்படுவதை உணர்த்தலாம். அல்சர், வயிற்று கோளாறு பிரச்சனையாகவும் இருக்கலாம்.

கால் வலி

காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், வெப்பம் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், அது ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதே நிலை நீடித்தால் உயிருக்கு ஆபத்தாக மாறும் வாய்ப்பு உள்ளது.

பல் வலி

பல்லில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம். உடனடி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அனைத்து பற்களுக்கும் பரவுவது மட்டுமின்றி, உடலின் பிற பகுதிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.

கால்கள் அல்லது பாதங்களில் எரிச்சல்

கால்கள் அல்லது பாதங்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுவதும் நல்லதல்ல. நரம்பு பாதிப்பு, ரத்த ஓட்டக் குறைபாடு அல்லது வைட்டமின் பி குறைபாடு காரணமாக இருக்கலாம்.

திடீர் தோள்பட்டை வலி

தோள்பட்டையில் ஏற்படும் திடீர் வலி, சில நேரங்களில் நுரையீரல், பித்தப்பை தொடர்பான பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் வலியாக இருக்கலாம்.

திடீர் தலைவலி

இதுவரை அனுபவிக்காத அளவிற்கு திடீரெனவோ, கடுமையாகவோ தலைவலி ஏற்பட்டால், மூளையில் ரத்தக்கசிவு, பக்கவாதம் அல்லது ரத்த அழுத்த மாற்றங்கள் போன்ற ஆபத்தான அறிகுறிகளை சுட்டிக் காட்டலாம்.

கழுத்து வலி, காய்ச்சல்

கழுத்தை நகர்த்த முடியாத அளவுக்கு வலியோ, அதனுடன் காய்ச்சலோ இருந்தால், அது மெனின்ஜைட்டிஸ் என்ற உயிர்க் கொல்லி நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதற்கு உடனடி சிகிச்சை அவசியம்.

முதுகு வலி (கீழ் பகுதி அல்லது நடுப்பகுதி)

முதுகின் அடிப்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ வலியை உணர்ந்தால், முதுகின் உட்புறத்தில் நோய்த்தொற்று அல்லது முதுகுத்தண்டுவட பகுதியில் அழுத்தம், சிறுநீரக கோளாறுகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

பாத வலி அல்லது உணர்விழப்பு

பாதங்களில் முள் குத்துவது போன்ற உணர்வு அல்லது பாதங்கள் உணர்விழந்து போவது அல்லது கடுமையாக வலிப்பது போன்றவை நீரிழிவு நோய் அல்லது நரம்பு சேதம் அடைவதன் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

கண் வலி

கண்களில் வலி, அழுத்தம் அல்லது பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது குளோக்கோமா அல்லது கண் தொற்றுகள் காரணமாக இருக்கலாம்.

காது வலி சீழ் வடிதல்

காது வலியுடன் காய்ச்சல் அல்லது சீழ் வெளியேறுதல் ஏற்பட்டால், அது கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியாகும். தாடை, தொண்டை அல்லது மூக்கு துளைகளுக்கு அந்த தொற்று பரவக்கூடும். அதனால் காதுவலி அதிகரிக்கும்.

உடல் உணர்த்தும் இத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணிக்கக் கூடாது. ஏதேனும் ஒரு வலி தொடர்ச்சியாக நீடித்தால் தாமதமின்றி மருத்துவரை அணுகுவது முக்கியமானது.

Tags:    

Similar News