நெற்றி சுருக்கங்களை போக்கும் வீட்டு வைத்தியங்கள்
- புகைப்பிடித்தல், தூக்கமின்மை, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கம் உள்ளிட்டவையும் நெற்றியில் சுருக்கங்களை விரைவாக வரவழைத்துவிடுகின்றன.
- இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் எழுந்ததும் நெற்றி பகுதியை கழுவி விடலாம்.
நெற்றியில் சுருக்கங்கள் தோன்றுவது முதுமையின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அடிக்கடி கோபமாகவோ, ஆக்ரோஷமாகவோ, ஆச்சரியமாகவோ முக பாவனைகளை வெளிப்படுத்துதல், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை குறைதல், சூரிய ஒளி சருமத்தில் படர்தல், முதுமையை நெருங்குதல் உள்ளிட்ட காரணங்களால் சருமத்தில், நெற்றியில் கோடுகளும், மடிப்புகளும் உருவாகின்றன. அந்த சமயத்தில் சரும தசைகள் சுருங்கவும் செய்கின்றன. இதே நிலை நீடிக்கும்போது காலப்போக்கில் நிரந்தர கோடுகள் ஏற்பட்டு நெற்றி சுருக்கங்கள் தோன்ற வழிவகுக்கின்றன.
பொதுவாகவே வயதாகும்போது கொலாஜன், எலாஸ்டின் ஆகிய இரண்டு முக்கிய புரதங்களை சருமம் இழக்கிறது. இவைதான் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இவை பலவீனமடைவதுடன், நீர்ச்சத்து குறைபாடு, மன அழுத்தம், புற ஊதா கதிர் வீச்சு உள்ளிட்ட காரணிகளும் சருமத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றுவதற்கு வழிவகுத்துவிடுகின்றன. புகைப்பிடித்தல், தூக்கமின்மை, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கம் உள்ளிட்டவையும் நெற்றியில் சுருக்கங்களை விரைவாக வரவழைத்துவிடுகின்றன.
நெற்றி சுருக்கம் முதுமையின் ஒரு அங்கம் என்றாலும் கூட அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் வேகமாகவே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்த்துவிடும். சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் நெற்றியில் சுருக்கங்கள் தோன்றும் செயல்முறையை தாமதப்படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டியவை...
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்யில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி சுருக்கங்களை மென்மையாக்கும். தூங்குவதற்கு முன்பு நெற்றியில் சிறிதளவு விளக்கெண்ணெய்யை தடவவும். மேல்நோக்கிய நிலையில் மசாஜ் செய்துவிட்டு, காலையில் முகத்தை கழுவி விடலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை அளிக்கக்கூடியது. முன்கூட்டியே சுருக்கங்களை ஏற்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கக்கூடியது. செக்கில் தயாரான தேங்காய் எண்ணெய்யை சில துளிகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதை லேசாக சூடாக்கி, தூங்க செல்வதற்கு முன்பு நெற்றியில் வட்ட வடிவில் தேய்த்து, சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் எழுந்ததும் நெற்றி பகுதியை கழுவி விடலாம்.
முட்டை வெள்ளைக்கரு
முட்டை வெள்ளைக்கரு சருமத்தை தற்காலிகமாக இறுக வைக்கும். மெல்லிய கோடுகளைச் சரிசெய்ய உதவும் புரதங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடிக்கவும். அதை நெற்றியில் தடவி, 15 நிமிடங்கள் உலர விட்டு, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை மேற்கொள்ளலாம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சருமத்தை ஈரப்பதமாக்கி, அதன் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தும். இதனால் சருமத்தில், நெற்றியில் கோடுகள் தோன்றுவது குறையும். ஒரு வெள்ளரிக்காயை துருவி, சாறு பிழிந்து கொள்ளவும். பஞ்சு உருண்டையை வெள்ளரி சாற்றில் முக்கி நெற்றியில் தடவவும். 15 நிமிடங்கள் உலர விட்டு, பின்பு கழுவி விடலாம். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை இவ்வாறு செய்வது நல்ல பலனை தரும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. கற்றாழை ஜெல்லை நெற்றியில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு இருபது நிமிடங்கள் உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தினமும் பயன்படுத்துவது நெற்றி சுருக்கங்கள் விரைவாக எட்டிப்பார்ப்பதை தடுக்கும்.
தேன் மற்றும் எலுமிச்சை
தேன், சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை அதிகரித்து, நெற்றியில் தோன்றும் மெல்லிய கோடுகளை மங்கச் செய்யக்கூடியது. ஒரு டீஸ்பூன் தேனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து நெற்றியில் தேய்த்து, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த செய்முறையை பின்பற்றிய பிறகு உடனே சூரிய ஒளி சருமத்தில் படுவதை தவிர்க்கவும்.