பொது மருத்துவம்

காய்ச்சிய நீர் - வடிகட்டிய நீர் - பாட்டில் நீர்: எது ஆரோக்கியமானது?

Published On 2026-01-17 11:04 IST   |   Update On 2026-01-17 11:04:00 IST
  • குடிநீரை கொதிக்க வைப்பதால் ரசாயன மாசுபடுத்திகளோ, பூச்சிக்கொல்லிகளோ நீக்கப்படாது.
  • குடிநீரை வடிகட்டி பயன்படுத்துவதும் பாதுகாப்பானது.

குடிநீர் பருகுவது உடலுக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியமானதோ, அது எந்த அளவுக்கு சுத்தமான நீராக இருப்பதை கருத்தில் கொள்வதும் முக்கியமானது. காய்ச்சிய குடிநீர், வடிகட்டிய குடிநீர், பாட்டில் நீர் உள்ளிட்டவை பரவலாக பயன்பாட்டில் இருக்கும் நிலையில் எந்த தண்ணீரை பருகுவது ஆரோக்கியமானது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. எது சிறந்தது என்று பார்ப்போம்.

காய்ச்சிய நீர்:

குடிநீர் நன்கு தெளிந்த நிலையில், அசுத்தமின்றி சுத்தமாக இருப்பது போல் தோற்றம் கொண்டிருந்தாலும் வைரஸ், பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் பற்றிய கவலை எழுந்தால் கொதிக்க வைத்து பருகுவதே சரியானது. சுமார் ஒரு நிமிடமாவது நன்கு தண்ணீரை கொதிக்கவைத்து அதனை வடிகட்டி பருகலாம். அப்படி காய்ச்சிய நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானதாகிவிடும்.

கவனிக்க வேண்டியவை:

குடிநீரை கொதிக்க வைப்பதால் ரசாயன மாசுபடுத்திகளோ, பூச்சிக்கொல்லிகளோ நீக்கப்படாது. நீரின் சுவையும் மாறக்கூடும். பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு இது நடைமுறைக்கு உகந்தது அல்ல.

பாட்டில் நீர்:

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், யூ.வி., ஆர்.ஓ. போன்ற பல்வேறு சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு உட்பட்டிருக்கும். குறிப்பாக கிருமிகள் நீக்கப்பட்டிருக்கும். குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும்.

குறைபாடுகள்:

எல்லா பாட்டில் நீரும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. தரம் மாறுபடலாம். அத்துடன் பாட்டில் நீரை அதிக நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மைக்ரோபிளாஸ்டிக் நீரில் கலக்க வாய்ப்பிருக்கிறது.

எதை தேர்வு செய்ய வேண்டும்?

குடிப்பதற்கு மட்டுமின்றி சமைப்பது உள்ளிட்ட அன்றாட உபயோகத்துக்கு வடிகட்டிய நீரை பயன்படுத்துவது நல்லது. அதற்கு தரமான சுத்திகரிப்பு சாதனத்தை வீட்டில் நிறுவலாம். ஆர்.ஓ. பயன்படுத்துவதாக இருந்தால் நீரில் இருக்கும் தாதுக்களை அறவே நீக்காமல் பாதுகாக்கும்படியான வடிகட்டிகளை இடம் பெறச் செய்ய வேண்டும்.

வெளியிடங்களுக்கு பயணம் செய்யும்போது நம்பகமான தயாரிப்பு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களை வாங்கி உபயோகிக்கலாம்.

அல்லது வீட்டில் இருந்தே பாட்டில்களில் வடிகட்டிய, காய்ச்சிய நீரை கொண்டு செல்லலாம். எந்த வகை குடிநீராக இருந்தாலும் அதன் பருகும் முன்பு தூய்மையை உறுதி செய்து செய்து கொள்ள வேண்டும். பாட்டில்களில் உபயோகிப்பதாக இருந்தால் பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

வடிகட்டிய நீர்:

குடிநீரை வடிகட்டி பயன்படுத்துவதும் பாதுகாப்பானது. குறிப்பாக கார்பன் வடிகட்டிகள் நீரில் கலந்திருக்கும் குளோரினின் வீரியத்தை குறைத்து நீரின் சுவையை மேம்படுத்தும். மேலும் நீரில் படிந்திருக்கும் தேவையற்ற மாசுக்கள், அசுத்தங்களை போக்கும். தினசரி பருகுவதற்கு ஏற்றதாகவும் அமையும்.

கவனிக்க வேண்டியவை:

எல்லா வடிகட்டிகளும் ஒரே மாதிரியான செயல்திறன் கொண்டவை அல்ல. சில வடிகட்டிகள் அனைத்து அசுத்தங்களையும் வடிகட்டுவதில்லை. அவை திறம்பட செயல்பட, தவறாமல் சுத்தம் செய்வதும், சரியான நேரத்தில் மாற்றுவதும் முக்கியமானது. தரமான வடிகட்டிகளை வாங்கி உபயோகிப்பது அதை விட முக்கியமானது.

Tags:    

Similar News