தினமும் 3 கப் காபி குடிப்பது ஞாபக மறதியை தடுக்கும்
- நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
- மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்.
தினமும் 3 கப் காபி அல்லது இரண்டு கப் டீ குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறையும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் அவர்கள் தினசரி காபின் கொண்ட சூடான பானங்களை (தேநீர், காபி) எவ்வளவு அருந்தினர் என்பதையும், அவர்களின் நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
ஆய்வின் முடிவில் தினமும் இரண்டு முதல் 3 சுப் காபின் கொண்ட டீ அல்லது காபி குடிப்பவர்களுக்கு, அதை குடிக்காதவர்களை விட 15 முதல் 20 சதவீதம் வரை டிமென்ஷியா அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் 3 கப்புகளுக்கு மேல் டீ, காபி குடிப்பதால் கூடுதல் பலன் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"டிமென்ஷியாவைத் தடுக்கும் வழிகளை ஆராய்ந்தபோது, காபி போன்ற அனைவரும் பயன்படுத்தும் பானம் நல்ல உணவுமுறை தீர்வாக இருக்கலாம் என்று நினைத்தோம்" என்று இந்த ஆய்வின் ஆசிரியரும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான டாக்டர் டேனியல் வாங் தெரிவித்துள்ளார். "மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.
டீ மற்றும் காபியில் உள்ள பாலிபினால்கள் போன்ற பொருட்களே இந்த நன்மைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும், அவை வீக்கம் மற்றும் செல் சேதத்தை குறைத்து, நினைவுத்திறன் சரிவைத் தடுக்க உதவக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.