பொது மருத்துவம்

இரவு நேரத்தில் இளநீர் குடிக்கலாமா?

Published On 2026-03-01 15:23 IST   |   Update On 2026-03-01 15:23:00 IST
  • இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
  • இளநீர் குடிப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

உலகில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கும் பானமாக இளநீர் உள்ளது. இளநீரை விரும்பாதவர்கள் அரிது தான். ஏனெனில் இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கோடை காலங்களில் இளநீர் வியாபாரம் இந்தியாவில் அமோகமாகவே நடக்கும். உடலுக்கு பல வழிகளில் நன்மை தரக்கூடிய இளநீரை இரவு அருந்தலாமா என்ற கேள்வி சிலருக்கு எழும். அதற்கான தீர்வு குறித்து பார்க்கலாம்.

கோடை காலங்களில் ஏற்படும் தாகத்தை தணிக்க இளநீர் சிறந்த தேர்வாக அமையும். அதே போல் இரவு நேரங்களில் இளநீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக இருக்கும். குறிப்பாக பருவகால நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும். இளநீரில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்களும் அடங்கியுள்ளதால், கூந்தல் மற்றும் சருமத்திற்கும் வலுசேர்க்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன்பு இளநீர் குடிக்கலாம். இவற்றிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும். நீரிழப்பை தடுக்கும்.

இளநீர் வருடம் முழுவதும் ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் கிடைக்கும் ஒரு பானம். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இளநீர் குடிப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது உடலில் இருக்கும் தொற்றுக்கிருமிகளை வெளியேற்ற உதவும். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் இளநீர் துணை புரியும். இளநீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் குடிப்பதால், அதன் ஆரோக்கிய நன்மைகள் இரட்டிப்பாகும். உணவுக்கு முன்பும், பின்பும், தூங்குவதற்கு முன்பும், உடற்பயிற்சிக்கு பின்பும் இளநீர் குடிப்பது உடலுக்கு நல்லது. இதனால் செரிமானம் மேம்பட்டு, உடல் நீரேற்றமாக இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கும். இதய துடிப்பை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.

பொதுவாக ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் இளநீர் குடிப்பது போதுமானது. இருப்பினும், சர்க்கரை நோய் அல்லது குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி இளநீரை குடிப்பது நல்லது.

Tags:    

Similar News