மகிழ்ச்சியான மனநிலைக்கு வழிகாட்டும் பழக்கங்கள்...
- விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள்.
- பயணங்களின்போது ஜன்னல் அருகே அமர்ந்து காற்றை ரசிப்பதும் மனதை அலாதியாக்கும்.
மகிழ்ச்சி ஏன் கடினமாகிறது?
* எது நம்மை மகிழ்ச்சியாக்கும் என்பதை கண்டறியும் விஷயத்தில் சில சமயம் மனம் தவறான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.
* மனதை உலுக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும்போது துயரம் குடிகொள்ளும். அந்த சமயத்தில் தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள் எழுவது மனதை பலவீனப்படுத்தி விடும். பதற்றத்தை உண்டாக்கிவிடும்.
* ஏதாவது மகிழ்ச்சியாக நிகழ்வு ஒன்று நடந்த பிறகு, மூளை விரைவாக அதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு பழகி விடுகிறது. அத்தகைய எதிர்பார்ப்பு ஈடேறாதபோது மன மகிழ்ச்சி தடைபடும்.
எது மகிழ்ச்சியை தடுக்கிறது?
* அதிக பணம் (அடிப்படை தேவைகளுக்கு மேலாக)
* கவர்ச்சியான வேலை
* டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் மூழ்கி விடுதல்
* கனவு வீடு, ஆடம்பரமான கார், பேஷன் ஆடைகள் பற்றிய சிந்தனையில் எந்நேரமும் மூழ்கி இருத்தல்
* விரும்பிய உடல் அமைப்பை பெறுவதற்கு போராடுதல்
எது நம்மை அதிக மகிழ்ச்சியாக்கும்?
தொடர்பில் இருத்தல்
* நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி உங்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவி புரிந்தவர்களுடன் அவ்வப்போது பேசுங்கள். நேரில் தொடர்பு கொள்வது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது.
* அந்நியர்களுடன் பேசுவதும் (உங்களுக்கு அந்த யோசனை பிடிக்காவிட்டாலும் கூட) மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர்கள் முகவரி தெரியாமல் தடுமாறி நிற்கும்போது நீங்களாக சென்று வழிகாட்டுவது கூட ஒருவித மகிழ்ச்சியை உண்டாக்கும்.
சிறிய தருணங்களை ரசித்தல்
* விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள். ஐஸ்கிரீமை ருசிக்கும்போது அதை நேசியுங்கள். இப்படி சிறிய தருணங்களை ரசித்தல் மனதை மகிழ்ச்சிப்படுத்தும்.
* பயணங்களின்போது ஜன்னல் அருகே அமர்ந்து காற்றை ரசிப்பதும் மனதை அலாதியாக்கும்.
தினசரி நன்றியுணர்வு
* ஒவ்வொரு நாளும் அன்றைய நாளில் நடந்த முக்கியமான 3 விஷயங்களை எழுதுங்கள். இந்த பழக்கம் மூளையை நினைவூட்டும்.
* அந்த 3 விஷயங்களை உங்களை அதிகம் நேசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வது அதை விட சிறந்தது.
நற்செயல் செய்தல்
* ஒருவருக்கு தற்செயலாக ஒரு நல்ல செயலை செய்யுங்கள். அந்த நபர் உறவினர்கள், நண்பர்களாக இருக்கலாம். ஏற்கனவே அறிமுகம் இல்லாத நபராகவும் இருக்கலாம்.
* குறிப்பாக உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு உடனே உதவிடுங்கள். அவர்கள் உங்களை அணுகி கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்களாகவே செய்யும் அந்த உதவி உங்களையும், சம்பந்தப்பட்டவரையும் மகிழ்ச்சியான மன நிலைக்கு கொண்டு செல்லும்.
நன்றாக தூங்குதல்
* ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். அதில் சமரசம் செய்யாதீர்கள்.
* உங்கள் தூக்க அட்டவணை நிலையானதாக இருந்தால் அதுவே நோய் நொடி இல்லாத, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.
சாகச பயணங்கள் மேற்கொள்ளுதல்
* சுற்றுலாவுக்கோ, வெளியிடங்களுக்கோ சென்றால் அங்கு நீங்கள் வாழ்நாளில் அனுபவிக்காத சாகசங்கள், விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தால் அதில் ஈடுபட யோசிக்காதீர்கள். கூடுதல் பணம் செலவழிக்கவும் தயங்காதீர்கள். அது வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும்பட்சத்தில் அதனை அனுபவிப்பது கூடுதல் மகிழ்ச்சியை தேடித்தரும்.
* வருடத்திற்கு ஒருமுறையோ, குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையேயோ வெளியிடங்களுக்கு செல்லும் பட்சத்தில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்யுங்கள். அங்கு செல்வதற்காக காத்திருக்கும் நாட்களும், எதிர்பார்ப்புகளும் கூட மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
தியானம் செய்தல்
* அலை பாய்ந்து திரியும் மனம் மகிழ்ச்சியற்றதாகவே இருக்கும். அதை தியானம் மீட்டமைக்கும்.
* தியானத்திற்கு தினமும் 5 நிமிடங்கள் செலவிட்டால் போதும். சமூக வலைத்தளத்தில் யோகா நிபுணர்களின் வழிகாட்டுதலில் வடிவமைக்கப்படும் வீடியோக்களை கூட பார்த்து பயிற்சி செய்யலாம். அதுவும் மனதை இலகுவாக்கும்.
ஒப்பீடு செய்தல்
* ஒப்பிடும் அளவுகோலை மாற்றியமையுங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவததல்ல. உங்களுடனே ஒப்பீடு செய்யுங்கள். உங்கள் நிறை, குறைகளை அலசி ஆராயுங்கள்.
* விறுவிறுப்பான, சுவாரசியமான திரைப்படம் பார்க்கும் போது சிறிது நேரம் நிறுத்தி வையுங்கள். அது அந்த படத்தின் மீதான ஆவலையும், எதிர்பார்ப்பையும் தூண்டி விடும். மீண்டும் பார்க்கும்போது புதிய உற்சாகத்தை பெறுவீர்கள்.
நேரம் செலவளித்தல்
* உங்களுக்கு அதிக நேரத்தை அளிக்கும் வகையில் செலவிடப்படும் பணம் எப்போதும் மதிப்புடையது என்பதை மனதில் கொள்ளுங்கள். அது பொழுதுபோக்காக இருக்கலாம். விருந்து, விழாக்களாக அமையலாம். உற்றார், உறவினர்கள் ஒன்று கூடும் இடமாக இருக்கலாம்.
* எனவே எப்போதும் செலவளிக்கும் பணத்திற்கு உரிய மதிப்பு கிடைக்கும் வகையில் கூடுதல் நேரத்தை உங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் செலவிடுங்கள்.
உடற்பயிற்சி செய்தல்
* உடலுக்கு அசைவு கொடுக்கும் எந்த பயிற்சியாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்வதற்கு முயற்சியுங்கள். அது சில நிமிடங்கள் செய்யக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை.
* செல்போன் அழைப்பின்போது நடந்து கொண்டே பதிலளிப்பது கூட ஒருவித உடல் இயக்கமாக அமையும். உடலையும், மனதையும் ஆசுவாசமடைய செய்யும்.