உலர் பழங்கள்-நட்ஸ்களை தண்ணீரில் ஊறவைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன.
- உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.
உலர்பழங்கள், நட்ஸ் வகைகளை பலரும் விரும்பி சுவைக்கிறார்கள். அவற்றை சரியான முறையில் உட்கொள்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை ஊற வைத்து உட்கொள்வதே சரியானது. அவை பற்றியும், ஏன் ஊறவைத்து உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.
வால்நட்
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி பீனால்கள் அதிகம் காணப்படும். அடர்த்தியான கொழுப்பையும், சற்று கசப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். அதனை அப்படியே சாப்பிட்டால் செரிமானமாவதற்கும் கடினமாக இருக்கும்.
தண்ணீரில் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைப்பது கசப்புத்தன்மையை குறைப்பதோடு மென்மையாக மாற்றும். அதிலிருக்கும் கொழுப்பை உடல் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றி செரிமான மண்டலத்திற்கு குறைந்த அழுத்தத்தையே கொடுக்கும்.
2 அல்லது 4 வால்நட்டுகளை 12 மணி முதல் 24 மணி நேரம் வரை ஊற வைத்து உட்கொள்வது, எந்த உணவுப்பொருளுடனும் சேர்க்காமல் தனியாக உட்கொள்வது அதிகபட்ச நன்மையை அளிக்கும்.
முந்திரி
கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. அதனை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஊறவைக்கும்போது முந்திரியில் உள்ள நொதிகள் நடுநிலையாக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து எதிர்ப்பு தன்மையும் குறையும்.
ஆரோக்கியமான கொழுப்புகளின் தன்மையும் மேம்படுத்தப்படும். 4-5 முந்திரிகளை 2 அல்லது 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அவற்றை ஸ்மூத்தி அல்லது சிற்றுண்டிகளில் பயன்படுத்தலாம்.
ஊற வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பெரும்பாலான உலர் பழங்கள், நட்ஸ் வகைகளில் பைடிக் அமிலம் உள்ளது. இது இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களுடன் வினைபுரிந்து அவை உடலுக்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
ஊறவைப்பதன் மூலம் இந்த அமிலத்தின் வீரியத்தை சிதைக்க முடியும். அதன் காரணமாக செரிமானம் எளிதாகும். வயிற்று உப்புசத்தை கட்டுப்படுத்தலாம். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவிடலாம்.
உலர் அத்திப்பழம்
உலர்ந்த அத்திப்பழங்களில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. அவற்றில் அதிக நார்ச்சத்து அடர்த்தியும் இருப்பதால், அவற்றை ஜீரணிப்பதற்கு செரிமான மண்டலம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுவே உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.
மேலும் கால்சியம், இரும்பை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கும் அனுமதிக்கும். மலச்சிக்கலை குறைப்பதற்கும், எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். 10 முதல் 12 உலர் அத்திப்பழங்களை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் உட்கொள்வது செரிமானத்தை இலகுவாக்கும். ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தும்.