பொது மருத்துவம்

குளிர் காலத்தில் தயிர் ஏன் சாப்பிட வேண்டும்?

Published On 2025-12-28 12:25 IST   |   Update On 2025-12-28 12:25:00 IST
  • பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும்.
  • தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல.

தயிர் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கக்கூடியது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ஏராளமான நன்மைகளை அளிக்க வல்லது. ஆனாலும் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். சளியை உண்டாக்கிவிடும் என்ற எண்ணமே அதற்கு காரணம். சளி, இருமல் ஏற்படாத வண்ணம் தயிரை எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா?

பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும். தயிரும் குளிர்ச்சி தன்மை கொண்டது. அப்படியிருக்கையில் குளிர்ந்த அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்த தயிரை சாப்பிட்டால் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி அடையக்கூடும். தொண்டை வலி அல்லது சளிக்கு வழி வகுக்கும். அதனால் அந்த தவறை செய்யாதீர்கள்.

எப்படி சாப்பிடலாம்?

தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல. அறை வெப்பநிலையில் தயிரை சாப்பிடுவதுதான் சரியானது. குளிர் சாதனப்பெட்டியில் இருந்து எடுத்தால் அரை மணி நேரம் கழித்து உட்கொள்வது நல்லது.

இரவில் தயிர் சாப்பிடுவதும் கூடாது. அதன் குளிர்ச்சித்தன்மை உடல் வெப்பநிலையை மேலும் குறைத்து சளியை அதிகரிக்க செய்துவிடும். எனவே, காலையிலோ அல்லது மதிய உணவிலோ தயிர் கலந்து சாப்பிடுவது நல்லது.

யார் சாப்பிடக்கூடாது?

இருமல், சளி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வதோ அல்லது தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதோ நல்லது.

குளிர் காலத்திலும் தயிர் ஏன் சாப்பிட வேண்டும்?

குளிர்காலத்தில் இயல்பாகவே பசி உணர்வு அதிகரிக்கும். உடல் குளிர்ச்சி தன்மைக்கு மாறுவதை தடுத்து, உடல் சூடாக இருக்க அதிக கலோரிகள் எரிக்கப்படும். அப்படி வெப்பத்தை உருவாக்க உடல் அதிக சக்தியை பயன்படுத்துவது பசியை தூண்டி விட்டு விடும். அதனை கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட தோன்றும். அப்படி கனமான உணவுகளை சாப்பிடுவது செரிமான செயல்திறனை குறைக்கும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். அஜீரணத்தையும் குறைக்கும். வயிற்று ஆரோக்கியத்தையும் காக்கும். அதனால் குளிர் காலத்தில் தயிரை தவிர்க்கக்கூடாது.

சருமத்துக்கும் நன்மை பயக்குமா?

குளிர் காலத்தில் தோல் வறண்டு போகும். தயிரில் உள்ளடங்கி இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். முகத்துக்கு 'பேஸ் பேக்'காகவும் தயிரை பயன்படுத்தலாம். தயிரில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி போன்றவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்.

Tags:    

Similar News