null
மகிழ்ச்சி - ஆரோக்கியம் தரும் தினசரி பழக்கங்கள்
- புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.
- உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது.
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் அதனை சாத்தியமாக்குவது பலருக்கும் கடினமாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் 85 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மகிழ்ச்சியாகவும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு வித்திடும் தினசரி பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளது.
1939-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த 268 மாணவர்களின் 80 ஆண்டுகளுக்கு மேலான வாழ்வியல் முறையை ஆய்வு செய்து இந்த பழக்கவழக்கங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை குறித்து பார்ப்போம்.
1. புகைப்பழக்கத்தை தவிர்த்தல்
புகைப்பிடிக்கும் பழக்கத்தை பின்தொடர்வது புற்றுநோய், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு உள்பட உயிருக்கு அச்சுறுத்தும் ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.
2. மதுப்பழக்கத்தை அறவே தவிர்த்தல்
மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்துதல் அல்லது அறவே தவிர்த்தல் உடல் நலத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். நல்ல தூக்கத்திற்கு வித்திடும். உடலுக்கு அதிக ஆற்றலையும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும் தீர்க்கமாக, தெளிவாக முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்.
3. உடல் எடையை பராமரித்தல்
சத்தான உணவுகளை உண்பது, முறையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை பராமரிப்பது நோய்களை தடுக்க உதவிடும். வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும்.
4. தினசரி உடற்பயிற்சி செய்தல்
தினமும் குறைந்தது 30 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சி மேற்கொள்வது மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஏனெனில் உடற்பயிற்சி மூலம் `என்டார்பின்கள்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.
5. சிக்கல்களை சமாளித்தல்
உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது. அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் சமாளிக்கும் திறனை கொண்டிருப்பது உறவுகளை வலுப்படுத்தும். மன அமைதியையும் உண்டாக்கும்.
6. கற்றுக்கொள்ளுதல்
தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் பழக்கமும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
7. அன்பை வெளிக்காட்டுதல்
நீண்டகால நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கை துணை வெளிக்காட்டும் அன்பு உள்ளிட்டவை மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் மிக முக்கியமானவை என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.