குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் கையெழுத்தை மேம்படுத்த செய்ய வேண்டியவை...

Published On 2022-11-19 07:51 GMT   |   Update On 2022-11-19 07:51 GMT
  • கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
  • மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும் என்பார்கள். அந்த அளவுக்கு கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கையெழுத்து மோசமாக இருந்தால் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். தேர்வில் அதன் தாக்கம் வெளிப்படும்.

மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பேனா கொண்டு எழுதும் நடைமுறை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை பொறுத்தவரை கையெழுத்து முக்கியமானது. அதுதான் அவர்களின் மதிப்பெண்ணையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். கையெழுத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.

* தினமும் எழுதி பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும். குழந்தைகள், மாணவர்களை பொறுத்தவரை வீட்டு பாடங்கள் எழுதுவதுடன் நிறுத்திவிடக்கூடாது. படிக்கும் பாடங்களை எழுதி பார்க்கலாம். அது நன்றாக நினைவில் பதிவதற்கு வழிவகுக்கும். புத்தகங்கள், பத்திரிகை செய்திகளை எழுதி பார்த்தும் பயிற்சி பெறலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ளாகவே ஆர்வம் எழ வேண்டும். அதற்கேற்ப அவர்களை கவரும் வகையிலான எழுது பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் எண்ணத்தில் உதிக்கும் வார்த்தைகளை எழுதுமாறு ஊக்குவிக்கலாம்.

* இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு நிர்பந்திப்பது அவசர அவசரமாக எழுதி பார்க்கும் மன நிலைக்கு தயார்படுத்திவிடும். முக்கியமான தேர்வுக்கு தயாராகும்போது வேண்டுமானால் சற்று வேகமாக எழுதி பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த வேகம் எழுத்தின் தரத்தை பாழ்படுத்திவிடக்கூடாது. கையெழுத்து எப்போதும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பதற்கு ஏதுவாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

* எழுதி பார்க்கும்போது குழந்தைகள் சரியான தோரணையில் அமர்ந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்த நிலையில் அமர்ந்து எழுதுவதுதான் சரியான தோரணையாகும். எழுதும்போது மணிக்கட்டு பகுதியைவிட கைவிரல்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது பேனாவை கைவிரல்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து முழு வடிவம் பெறும். அழகாகவும் மாறும். கைவிரல்களும், பேனா முனையும் நேர் நிலையில் இருக்க வேண்டும். சில குழந்தைகள் எழுதும்போது கைகளை வளைப்பதுண்டு. இது சரியான தோரணை கிடையாது.

* பேனா தேர்விலும் கவனம் தேவை. சரியான பேனாவை தேர்ந்தெடுத்தால்தான் எழுத்து வடிவம் அழகு பெறும். எழுத்தின் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எழுதும்போது குழந்தைகளின் கைகள் நிதானமாக இருக்க வேண்டும்.

* காகித தேர்வும் எழுத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட பேப்பரில் குழந்தைகளை எழுத வைப்பது பொருத்தமாக இருக்கும். எழுத்துக்கள் நேர் வரிசையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

* இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காலங்கள் கடந்தும் நினைவுகளை அசைபோடவைக்கும் அசாத்திய ஆற்றல் கடிதத்துக்கு உண்டு. குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் படிக்கும், வேலை பார்க்கும் இளம் வயதினர் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

Tags:    

Similar News