கிரிக்கெட்

பவர்பிளேயில் அதிரடி: ரோகித் சர்மா, கே.எல். ராகுலை முந்தினார் ஜெய்ஸ்வால்

Published On 2023-11-27 02:43 GMT   |   Update On 2023-11-27 02:43 GMT
  • இளம் வீரரான ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.
  • அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 235 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியால் 191 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

போட்டியின்போது பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், 2-வது பேட்டிங் செய்யும்போது பந்து வீச கடினமாக இருக்கும். இதனால் முதலில் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ, அவ்வளவு ரன்கள் குவிக்க இந்தியா திட்டமிட்டது.

அதற்கு ஏற்றபடி தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடினார். இவரது அதிரடியால் இந்தியா பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

இதன்மூலம் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் 23 பந்தில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்திருந்தார். கே.எல். ராகுல் 2021-ல் துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 19 பந்தில் 50 ரன்கள் அடித்திருந்தார். தற்போது இருவரையும் ஜெய்ஸ்வால் முந்தியுள்ளார்.

Tags:    

Similar News