என் மலர்
சினிமா செய்திகள்
அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்ஷா குழு, சிவப்பு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலர் இரவு பகல் பாராது பணியாற்ற வருகின்றனர். கொரோனா தடுப்பு பணியின் ஒருபகுதியாக அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கிருமிநாசினி தெளித்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகளை தெளிக்க நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது அதிக திறன் கொண்ட ட்ரோன்களை வடிவமைக்க அஜித், தக்ஷா குழுவுக்கு ஆலோசனை வழங்கினாராம். அதன்படி தற்போது 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமி நாசினியை சுமந்து செல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோன், சுமார் 30 நிமிடத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கிருமி நாசினி தெளிக்கும் திறன் கொண்டதாம். சென்னையில் நடத்தப்பட்ட இதன் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
@CPBlr@DCPNEBCP@DCPSouthBCP@IPSHemant@BlrCityPolice@DrKNarayanan@spcbpura@mla_sudhakar@sriramulubjp Pilot was tested sucessfully in Chennai with 16 litres tank capacity can cover 1 acre under 30 mins. Readily Available for a CSR Pilot for Blr. pic.twitter.com/V7CaZSgyvZ
— sugaradhana (@sugaradhana) June 23, 2020
நடிகர் கும்கி அஸ்வின் திருமணம் அரசு விதிமுறைப்படி சமூக விலகலுடன் சென்னையில் எளிமையாக நடந்தது.
பிரபல நகைச்சுவை நடிகர் கும்கி அஸ்வின். இவர் விக்ரம் பிரபுவின் கும்கி படத்தில் நடித்து பிரபலமானார். பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் சுவாமிநாதன் மகன் ஆவார். கும்கி அஸ்வினுக்கும் சென்னை கே. கே.நகரை சேர்ந்த ராஜசேகர் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது.

கும்கி அஸ்வின்-வித்யாஸ்ரீ திருமணம் சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கினால் அரசு விதிமுறைப்படி சமூக விலகலுடன் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து இந்த திருமணத்தை நடத்தினர். ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கும்கி அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருமான வனிதாவின் மகன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் விஜய்குமார் - மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா, விஜய்யுடன் 'சந்திரலேகா' படத்தில் நடித்தார். அதன்பின் ஒரு சில படங்களில் நடித்த வனிதா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் சமீபத்தில் பீட்டர் பால் என்ற இயக்குநருடன் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட அது வைரலானது. அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு சேர வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''விஜய் ஸ்ரீஹரியின் முதல் பிறந்தநாள் விழாவில் தளபதி'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.
நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அறம் படத்தால் நயன்தாராவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருவதாக கோபி நயினார் தெரிவித்தார்.

இந்நிலையில் அறம் 2 படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. நயன்தாரா நடிக்க மறுத்ததால் தான் கோபி நயினார் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அறம் 2 படத்தில் நடிக்குமாறு கோபி நயினார் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தையே நடத்தவில்லையாம். இந்த தகவலை கோபி நயினார் தெரிவித்துள்ளார். மேலும் அறம் 2 படத்தை நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து நான் இயக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர் எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் மதியழகன்.
சில மாதங்களுக்கு முன் அருண் விஜய்யின் பாக்ஸர் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அருண் விஜய், ரித்திகா சிங் பிரதான வேடங்களில் நடிக்கும் பாக்ஸர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்பதை அறியும் ஆவல் எல்லோருடைய மனதிலும் எழுந்தது. சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட தேடல் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே இந்த வேடத்துக்கு பொருத்தமானவர் என்று ஒட்டு மொத்த படக்குழுவும் முடிவு செய்து ஏகமனதாக அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.


நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தைத் தயாரித்த வி.மதியழகன், தற்போது ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மகா படத்தைத் தயாரித்து வருகிறார். மேலும் எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், ராஜா மந்திரி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, செம போதே ஆகாதே, மற்றும் அப்பா ஆகிய படங்களையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் 19 பெருந்தொற்று பிரச்னைகள் முடிவுக்கு வந்ததும், முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஒருவரை சமூக வலைத்தளத்தில் கலாய்த்திருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன், தனது புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, மீண்டும் போற போக்குல் ஒரு போட்டோ ஷூட் என்று தலைப்பிட்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பதிவைப் பார்த்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார், "போற போக்குல பண்ணதுக்கே இப்படின்னா, பிளான் பண்ணி பண்ணிருந்தா வேற மாதிரி போலயே.. ஸ்டைலா இருக்கீங்களே என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

நெல்சன் திலீப் குமாரின் பதிவுக்கு பதிலளித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், “கமெண்ட போட்டோமா, ரெண்டு கலாய் கலாய்ச்சமா கடைய சாத்திட்டு போய் காப்பி தண்ணிய குடிச்சமானு இருங்க இயக்குநரே. இன்ஸ்டாலயே சுத்திட்டு திரிய கூடாது” என்று நகைச்சுவையாக கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்த ராதிகா ஆப்தே, விமானத்தில் ரசிகரின் செயலால் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
தமிழில், டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி உட்பட படங்களில் நடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர், லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரைக் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இப்போது லண்டனில் இருக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்.தனது லண்டன் அனுபவம் பற்றி கூறிய அவர், ஊரடங்கு காரணமாக மக்கள் வெப்சீரிஸ்களை அதிகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். லண்டன் தெருக்களில் நான் நடந்து சென்றால் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
இவ்வளவு காலம் லண்டனில் தங்கி இருப்பதும் இதுதான் முதன்முறை. ரசிகர்கள் என்னை நேரில் சந்திக்கும்போது, உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது என்று சொல்வதையோ பாராட்டுவதையோ வரவேற்கிறேன். ஆனால், நடுரோட்டில் நின்றுகொண்டு என் பெயரை சொல்லிக் கத்தும்போதும் நான் ஜாக்கிங் செல்லும்போது கவனத்தைத் திசைத் திருப்பும்போதும் கவலையாகி விடுகிறேன்.

ஒரு முறை நான் விமானத்தில் இருந்தபோது, ஒருவர் என்னருகில் வந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் சோர்வாக இருந்தேன். அதனால் நன்றாக அசந்து தூங்கிவிட்டேன். கண்விழித்து பார்த்த போது, அந்த நபர் மீண்டும் போனை என்னை நோக்கி நீட்டியபோது அதிர்ச்சி அடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பேய் மாமா’ என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் சக்தி சிதம்பரம், தன் வீட்டில் இருந்த சீன தயாரிப்பு பொருட்களை தீ வைத்து எரித்துள்ளார்.
சார்லி சாப்ளின், கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன், மகாநடிகன் உள்பட பல படங்களை இயக்கியவர், சக்தி சிதம்பரம். இப்போது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பேய் மாமா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் நேற்று இரவு தன் வீட்டில் இருந்த சீன தயாரிப்பு பொருட்களை தீவைத்து எரித்தார். சீனா தயாரித்த டேப் ரிக்கார்டர்கள், செல்போன்கள், மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை தீவைத்து கொளுத்தினார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: “இந்திய வீரர்கள் 20 பேர்களை கொன்று மிரட்டிக் கொண்டிருக்கும் சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். அது தயாரித்த பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. அதற்கு நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சீன தயாரிப்பு பொருட்களை தீவைத்து எரித்தேன்.

என் வாழ்நாளில் இனிமேல் சீன தயாரிப்புகளை பயன்படுத்த மாட்டேன். நான் இப்போது இயக்கி வரும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தாதீர்கள். எரித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.” இவ்வாறு இயக்குனர் சக்தி சிதம்பரம் கூறினார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, காயத்ரி நடிப்பில் உருவாகி வரும் பஹிரா படத்தின் முன்னோட்டம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் பஹிரா. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரியும், அனேகன் படத்தில் நடித்த அமைராவும் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், பிரபுதேவா குலேபகாவலி படத்தில் நடிக்கும் போதே இந்த கதையை சொன்னேன். அதன் பிறகு பாலிவுட் படங்களை இயக்க சென்றுவிட்டார். அந்த படங்களை முடித்த கையோடு வந்து பஹிரா படத்தில் நடித்து கொடுத்தார். இது ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம். இதுவரை பார்த்திராத பிரபுதேவாவை இந்த படத்தில் பார்க்கலாம் என கூறினார்.
வரலட்சுமி சரத்குமாரின் படம் தியேட்டருக்கு பதில் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகின.

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டேனி படம் விரைவில் ஜி5 தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பி.ஜி.முத்தையா தயாரித்துள்ள இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கி உள்ளார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
கொரோனாவால் தடைபட்ட திலீப் வழக்கின் விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகையை 2017-ம் ஆண்டு கேரளாவில் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம்பிடித்த சம்பவம் திரையுலகையே உலுக்கியது. கடத்தியவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பிரபல மலையாள நடிகர் திலீப்பும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு 85 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 136 பேர் இதில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணையை ஆறு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சாட்சிகள் தினமும் வாக்குமூலம் அளித்து வந்தனர். நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட சிலர் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது.

நடிகர்கள் லால், இடைவேளை பாபு ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் 24-ந் தேதி விசாரணையை நிறுத்தி வைத்தனர். தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. நடிகை ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரிடம் குறுக்கு விசாரணை நடக்கிறது.
வாரிசு நடிகையாக இருப்பது அவமானம் இல்லை என்றும், அதை பெருமையாக நினைப்பதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பட வாய்ப்புகளை இவர்கள் தடுத்ததாலேயே மன அழுத்தத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எதிராக ரசிகர்கள் பிரசாரம் செய்கின்றனர்.
நடிகர் சத்ருகன் சின்காவின் மகளும் நடிகையுமான சோனாக்சி சின்ஹாவையும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டதால் அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறினார். பிரபல இந்தி நடிகர் அனில்கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூரின் வலைத்தள பக்கத்திலும் ரசிகர்கள் அவருக்கு எதிராக அவதூறு கருத்துகள் பதிவிட்டனர். வாரிசு அரசியலால்தான் சோனம் கபூருக்கு இந்தி பட வாய்புகள் கிடைத்துள்ளன என்றும் வசை பாடினர்.

இதற்கு பதில் அளித்துள்ள சோனம் கபூர், ‘’நான் எனது தந்தையின் மகள்தான். அவரால்தான் எனக்கு இந்த இடம் கிடைத்து இருக்கிறது. விஷேச சலுகையும் பெற்றுள்ளேன். இது எனக்கு அவமானம் இல்லை. பெருமையாகவே நினைக்கிறேன். என்னை இந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கு எனது தந்தை கடுமையாக உழைத்துள்ளார்.
நான் யாருக்கு பிறந்தேன் என்பது எனது விதி. எனது தந்தைக்கு மகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். நடிகை சோனம் கபூர், தனுஷ் ஜோடியாக ராஞ்சனா என்கிற இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.






