search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடி"

    • பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாராளுமன்ற தேர்தலின் பொது ஒரு வாக்குச்சாவடிக்கு பாஜக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர் தனது மகனை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் இருப்பது பாஜகவின் பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹரின் மகன் என்றும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 7-ம் தேதி வாக்குச் சாவடிக்கு தனது தந்தையுடன் சென்று வாக்களிக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    அந்த வீடியோவில் தந்தையும் மகனும் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பது பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி சந்தீப் சைனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

    • மணிப்பூர் உள்பட 13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து மறுதேர்தல்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து மணிப்பூர் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் வரும் 30ம் தேதி மறு வாக்கப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதால், ஏப்ரல் 22 ஆம் தேதி உள் மணிப்பூர் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் மறு வாக்குப்பதிவை நடத்தினர்.

    தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட வாக்குப்பதிவை மே 7-ம் தேதி நடத்தவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த வாக்காளர்கள் தங்களது பெயர்களை நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களை வாக்களிக்க அனுமதி வழங்க கோரியும் மகாதான தெரு டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. வேட்பாளர், பா.ம.க.வினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து கூடுதல் கலெக்டர் சபீர் ஆலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதாக பா.ம.க. மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த குஞ்சார்வலசை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 10 மற்றும் 11 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாட்டிற்கு சென்ற சங்கர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகள்களுடன் குஞ்சார்வலசையில் சாந்தி தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக வேதாளை அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் பணிகள் உதவிக்காக ஊராட்சி மன்றம் சார்பில் சாந்தி தன்னார்வலராக நியமிக்கப்பட்டு நேற்று காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்ந்து வேதாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையம் ஒன்றில் பணி செய்து வந்தார்.

    இந்நிலையில் மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைய இருந்த நிலையில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக அதே பள்ளியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு அறைக்கு வெளியே வந்தபோது சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் இருந்த மருத்துவர்கள் சாந்தியை பரிசோதனை செய்து பார்த்தபோது சாந்தி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து உடலை கைப்பற்றிய மண்டபம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    கணவரை இழந்து தனியாக தனது குழந்தைகளுடன் வாழ்ந்து உயிரிழந்ததால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
    • விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

    அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால், விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    • நாளை தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது
    • வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது

    நாளை தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இதனையொட்டி பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள், வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணைப்பின் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது
    • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

    சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.

    இதையொட்டி, மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 228 மையங்களை தோ்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது. அதிலும் 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

    இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.

    • பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.
    • வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழியர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடை பெறுகிறது. இதையொட்டி அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இங்குள்ள 6 தொகுதிகளிலும் மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 44 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும், 152 இதர பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.

    நெல்லை சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும், பாளையில் 270 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 306 வாக்குச் சாவடிகளும், ராதாபுரத்தில் 307 வாக்குச்சாவடிகளும், ஆலங்குளத்தில் 319 வாக்குச் சாவடிகளும், அம்பையில் 294 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,810 வாக்குச் சாவடிகள் உள்ளன.

    இதில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13 மிக பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் வீதம் மொத்தம் 4,354 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2177 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அதே எண்ணிக்கையில் வி.வி.பேட் எந்திரங்களும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவை அனைத்தும் இன்று போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை 249 வாகனங்களில் இன்று எடுத்துச்செல்லப்படுகிறது. மொத்தம் உள்ள 1,810 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு பணியில் 9,236 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 388 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 44 ஆயிரத்து 826 பெண் வாக்காளர்கள், 216 பேர் 3-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

    இதற்காக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை முழுவதுமாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 8,026 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், இன்று அவை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    இதற்காக துணை தாசில்தார் தலைமையில் 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 136 வாகனங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

    தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 203 பேர் என மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1,743 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதில் 106 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 14 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வாக்குச் சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் சி.சி.டி.வி. கேமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழி யர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நாளை வாக்குப்பதிவையொட்டி இன்று தாலுகா அலுவலகங்களில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீசாரின் பாதுகாப்புடன் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படுகிறது.

    • விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள்.
    • வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

    மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.

    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள், முழுமையான போர் வீரர்கள்.

    இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

    காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.

    அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.

    விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு உட்பட்டு திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி செட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டி பாளையம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டி பாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1744 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 605 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 93 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 157 பேரும் என 3 லட்சத்து 90 ஆயிரத்து 152 பேரும், திருப்பூர் தெற்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 461 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 293 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 34 பேர் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 788 பேரும் உள்ளனர்.

    பெருந்துறையில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 699 பேரும், மூன்றாம் பாலின த்தவர்கள் 10 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளர்கள் உள்ளனர். பவானியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 590 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 19 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 பேர் உள்ளனர். இதுபோல் அந்தியூர் தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 57 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 பேர் உள்ளனர்.

    மேலும், கோபிசெட்டி பாளையத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 432 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 689 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 பேரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 1744 வாக்கு ச்சாவடிகள் உள்ளன. 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்களும், 250 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 பேர் உள்ளனர்.

    நாளை (வெள்ளி க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

    திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம் இரட்டை இலை சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் தானியக்கதிர் அரிவாள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பழனி யானை சின்னம், பா.ஜனதாவை சேர்ந்த ஏ.பி. முருகானந்தம் தாமரை சின்னம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீதா லட்சுமி ஒலிவாங்கி சின்னம், ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா கட்சியை சேர்ந்த மலர்விழி தொலைக்காட்சி பெட்டி சின்னம், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியை சேர்ந்த ஜனார்த்தனம் வைரம் சின்னம், சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன் தென்னந்தோப்பு சின்னம், கார்த்திகேயன் ட்ரக் சின்னம், சதீஷ்குமார் தலைக்கவசம் சின்னம், சுப்பிரமணி வாயு சிலிண்டர் சின்னம், செங்குட்டுவன் ஆட்டோ ரிக்ஷா சின்னம், வேலுச்சாமி கரும்பு விவ சாயி சின்னம் ஆகிய சின்னங்களில் போட்டியிடு கிறார்கள். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன. வடக்கு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    • அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
    • மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 19-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் தொகுதி வரியாக ஒதுக்கப்பட்டு வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    சட்டசபை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அதற்கு அடுத்த படியாக உள்ள அதிகாரிகளுக்கு அவற்றை ஒதுக்கீடு செய்து பிரிக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

    சென்னையில் 16 இடங்களில் உள்ள பயிற்சி சென்டரில் இந்த பணிகள் இன்று நடைபெற உள்ளது.

    தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, வாக்குப்பதிவு செய்யும் இடம் என உள்ளே வெளியே போன்ற இடங்களை குறிக்கும் போஸ்டர்கள், மெழுகு வர்த்திகள், சணல் கயிறு, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி புத்தகம், மறைவு அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பயன்படுத்தும் உறைகள் உள்பட 80 பொருட்களை பிரித்து வைக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

    இந்த பணியை மாநகராட்சி ஆணையரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிடுகிறார்.

    இந்த பொருட்களுடன் மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதுவரை இந்த பொருட்கள் அந்தந்த மையத்தில் தாசில்தார் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பல ஆண்டுகளாக இங்கு சாலை எதுவும் அமைக்கப்படாதால் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.
    • மலை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் டோலி கட்டி ஊர்வலமாக சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அர்லா ஊராட்சியில் மலை கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள நீலபெண்டா, பெட கருவு, கொத்தலோ சிங்கி, பத்தலோ சிங்கி ஆர்ல பிட்ரிக் கெட்டா, குர்ரலா பைலு கட்டாபலேம் உள்ளிட்ட கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக இங்கு சாலை எதுவும் அமைக்கப்படாதால் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். கர்ப்பிணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக மலை கிராம மக்களுக்கு வாக்குச்சாவடி வசதி ஏற்படுத்தவில்லை.

    அவர்கள் 15 கிலோமீட்டர் நடந்து சென்று வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மலை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மலை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் டோலி கட்டி ஊர்வலமாக சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

    15 கிலோமீட்டர் நடந்து சென்று ஓட்டு போட முடியாது. எங்கள் மலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். 

    ×