search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.
    • நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழைப்பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர்.

    நேற்று முதல் கத்தரி வெயில் தொடங்க உள்ள நிலையில் அங்கு காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காந்தையூர், லிங்காபுரம், காரமடை, வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக அந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.

    இதுகுறித்து லிங்காபுரம் விவசாயி பிரகாஷ் என்பவர் கூறியதாவது:- எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வந்ததால் சிறுமுனை, லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழைப்பயிர்களை விளைவித்து வந்தோம்.

    இந்த நிலையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக எங்களில் பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் முறிந்து சேதமாகி உள்ளன. எனவே தமிழக அரசு வாழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    • எந்திரம் மூலம் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிலை கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூர் கிராமம் மேல தெருவில் 400 ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற வரலாறு சிறப்புமிக்க விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த சிவாலயம் சிதலமடைந்து ஆக்கிரமிப்பு காரணமாக பராமரிப்பு இல்லாமல் கிடந்தது.

    அதை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து விஸ்வநாதர் கோவில் கட்டுவதாக முடிவெடுத்து கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்திரம் மூலம் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சிலை ஊர் பொதுமக்களுடைய பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாள், விநாயகர் மற்றும் சாமி சிலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலை கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    மேலும் இந்த கோவில் கட்டும் பணிகளை ஊர் பொதுமக்களே செய்ய முன் வந்தது சிறப்பாகும்.

    • 160 பயணிகள் பயணிக்கும் இந்த கப்பலில் 133 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
    • கப்பலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் காலை 5.30 மணிக்குள் நாகை துறைமுகத்திற்கு வந்துவிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது.

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இதையடுத்து நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இயக்கப்பட்ட 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

    ஆனால் அந்த கப்பல் போக்குவரத்து குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.

    இந்த நிலையில் 'சிவகங்கை' கப்பல் அதிகாரப்பூர்வமாக இயக்கப்படும் என்று கப்பலை இயக்கும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் நேற்று நாகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சுபம் குரூப் ஆப் கம்பெனி மற்றும் இன்ட் ஸ்ரீ ப்ரே சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து 'சிவகங்கை' என்ற பெயரில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை வருகிற 13-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

    160 பயணிகள் பயணிக்கும் இந்த கப்பலில் 133 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ரூபாயின்படி 18 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் ரூ.4800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணி 60 கிலோ எடை வரை உடைமைகள் எடுத்து செல்லலாம்.

    நாகை துறைமுகத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசந்துறையை சென்றடைகிறது. மீண்டும் அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்தை வந்தடைகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

    கப்பலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் காலை 5.30 மணிக்குள் நாகை துறைமுகத்திற்கு வந்துவிட வேண்டும். காலதாமதம் ஏற்படாதவாறு பயணிகளை பரிசோதனை செய்வதற்காக 4 கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
    • அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் சென்றும் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள். தேர்வு எழுதி இருந்த மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்து முடிந்தது.

    ஏற்கனவே பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்ட போதே, தேர்வு முடிவு குறித்த தேதியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மே 6-ந்தேதி (நாளை) வெளியாகும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இடையில் அதே தேதியில் தேர்வு முடிவு வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை திட்டமிட்டபடி மே 6-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவித்ததோடு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கும் வருகிற 10-ந்தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என்றும் தெரிவித்தது. அதன்படி, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

    நாளை (திங்கட்கிழமை) காலை தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுகிறாரா? அல்லது அரசு தேர்வுத் துறையே வெளியிடுகிறதா? என்பது தொடர்பான விவரங்கள் இன்று தெரிவிக்கப்பட உள்ளது. மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்கள் பள்ளிகளில் கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் விவரங்கள் வழக்கம்போல அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும் அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் சென்றும் தெரிந்துகொள்ளலாம்.

    • ஆடை கட்டுப்பாடுகள், முடி, ஷூ, பெல்ட் அணிதல் போன்றவை வழக்கம் போல் பின்பற்றப்படுகிறது.
    • தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

    அயல்நாடுகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, கடலூர், கரூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், நீலகிரி, திருவாரூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்பட 31 நகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

    இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. தேர்வு கூடத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீட் தேர்வுக்கான வழிமுறைகளை மாணவ-மாணவிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆடை கட்டுப்பாடுகள், முடி, ஷூ, பெல்ட் அணிதல் போன்றவை வழக்கம் போல் பின்பற்றப்படுகிறது.

    தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    பதட்டம் இல்லாமல் இருக்க முன் கூட்டியே வரவும் தேர்வு அனுமதி சீட்டுடன் புகைப்படம் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை வெயில் வறுத்து எடுத்து வரும் வேளையில் இத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதும் நகரங்களில் தேர்வர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று தேசிய தேர்வு முகமை அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உறவினர்கள் மையங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் எனவும் தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும் தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வு கூடங்களில் ஒழுங்கீனங்கள் தவறுகள் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பு அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தேசிய தேர்வுகள் முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    • ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த தகவலின்படி மாம்பலம் போலீசார் நர்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
    • எழும்பூர் அரசு மருத்துவமனையில் நர்சு சிகிச்சை பெற்று வந்தார்.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் தியாகராய நகர் சவுத்போக் பகுதியில் உடன் வேலைபார்க்கும் தோழிகளுடன் தங்கி இருந்தார்.

    இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் உசிலம்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் திருமணம் செய்யாமல் நெருங்கி பழகினார். இதில் நர்சு கர்ப்பமானார்.

    இந்த நிலையில், அறையில் இருந்தபோது 7 மாதமாக கர்ப்பிணியாக இருந்த நர்சுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து கழிவறைக்கு சென்ற நர்சு தனக்கு தானே பிரசவம் பார்த்தார்.

    அப்போது குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் அதன் ஒரு காலை வெட்டி எடுத்தார். இதில் பெண் குழந்தை இறந்தது. நர்சின் அலறல் சத்தம் கேட்டு வந்த உடன் தங்கி இருந்த தோழிகள் குழந்தையின் உடலையும், நர்சையும் மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நர்சுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த தகவலின்படி மாம்பலம் போலீசார் நர்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில், பிரசவத்தின் போது குழந்தையின் காலை வெட்டி எடுத்ததால் அந்த பெண் குழந்தை இறந்து இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து நர்சு மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில், எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நர்சை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை இறந்ததால் நர்சு மீது 2 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    • ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல்.
    • வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மாநிலங்களில் தற்போது 105 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் பிரசாரத்தை முடிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திண்டாடி வருகின்றன.

    இது ஒரு பக்கம் இருக்க வெயிலை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பொதுமக்கள் கூலியை அதிகரித்துவிட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் வரை பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 மற்றும் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் மட்டும் வழங்கப்பட்டது.

    தற்போது வெயில் கொளுத்துவதால் வெயிலில் வெளியே வர தயங்குகின்றனர். அதையும் மீறி வருவதற்கு கூடுதலாக பணம் கேட்கின்றனர்.

     பெண்கள் குறைந்தது ரூ.300, தண்ணீர் பாட்டில், மோர் பாக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் கேட்கின்றனர். அதுவே ஆண்களாக இருந்தால் ரூ.500, தலைக்கு தொப்பி, தண்ணீர் பாட்டில், பீர், மோர், குளிர்பானம் சாப்பாடு ஆகியவற்றை கேட்கின்றனர்.

     இதுவும் வேட்பாளர்களின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் கூட்டுவதற்கான செலவு பல மடங்கு தற்போது உயர்ந்து விட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    • ஏராளமானோர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
    • விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    கோடை விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகளும் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கும், விடுமுறையை கழிக்க மலைப்பிரதேசங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமானோர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    குளிர்சாதன வசதியுடன், குறைந்த மணி நேரத்தில் இடத்தை சென்றடைய ஏதுவாக விமான பயணத்தை மக்கள் தேர்வு செய்கின்றனர்.

    இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை-தூத்துக்குடி இடையே தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை-கோவை இடையே தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 16 விமானங்களும், சென்னை-மதுரை இடையே 10 விமானங்களுக்கு பதில் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை-பெங்களூரு இடையே 16 விமானங்களுக்கு பதில் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை-ஐதராபாத் இடையே 20 விமானங்களுக்கு பதில் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    • நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
    • சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

    சென்னை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் கருத்தையா ஜெப்ரின் புகார் அளித்திருந்த நிலையில் அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

    கடந்த ஏப்ரல் 30-ந்தேதியே மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

    உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் பல நூறு அடி கீழே சென்று விட்டது.
    • பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்றால் மும்முனை மின்சாரம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களின் எந்தப் பகுதியிலும் கடந்த இரு மாதங்களில் தொடர்ச்சியாக 3 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. கடுமையான வறட்சி காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் பல நூறு அடி கீழே சென்று விட்டது. அதனால், உழவர்கள் அதிக குதிரைத்திறன் சக்தி கொண்ட நீர் இறைப்பான்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், கூட அவற்றின் மூலம் குறைந்த அளவிலேயே தண்ணீர் எடுக்க முடிகிறது.

    பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்றால் மும்முனை மின்சாரம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்; உழவர்களை பாதுகாக்கும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வணிகர்கள் இன்றைய சூழலில் வணிகம் சார்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
    • உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்களும் அவர்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திரைகடலோடியவர்கள் வணிகர்கள் தான். வணிகர்கள் வருவாய் ஈட்டுவதைக் கடந்து சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அதிகம். உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்களும் அவர்கள் தான். நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களையும் வளர்த்து, நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வணிகர்கள் இன்றைய சூழலில் வணிகம் சார்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். வணிகர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதன் மூலம் அனைத்து சிக்கல்களையும் களைந்து வணிகத்தில் வளர்ச்சியடைய இந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார்.
    • கட்சி ரீதியாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவோம்.

    சென்னை:

    2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்டப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

    * நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்னை கட்சிக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்.

    * ராகுல் காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார்.

    * நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன்.

    * காவல் துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

    * கட்சி ரீதியாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று கூறினார்.

    இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லை விரைகிறார்.

    ×