search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மல்டி மாடல் இன்டகிரேஷன் என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது.
    • பிராட்வே பேருந்து நிலையம் உள்ள இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.

    பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மல்டி மாடல் இன்டகிரேஷன் என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் 5 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் பேருந்து நிலையம் மாற்றப்பட இருக்கிறது.

    பிராட்வே பேருந்து நிலையம் உள்ள இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது.

    • ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் அதிகரித்தது.

    108 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. மேலும் வட மாவட்டங்களில் வெப்ப அலை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இரவில் உஷ்ணம் அதிகமாகி புழுக்கம் ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்குள் தூங்க முடியவில்லை. வீட்டிற்கு வெளியே காற்று இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஏ.சி. பயன்பாடு அதிகரித்துள்ளது.

    பெரும்பாலான குடும்பங்களில் புதிதாக ஏ.சி. வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். கடன் வசதி இருப்பதால் முன் தொகையை செலுத்தி ஏ.சி. வாங்குகின்றனர்.

    ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் இரவில் தூக்கம் இல்லாமல் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் ஏ.சி. வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக கடைகளுக்கு செல்கின்றனர்.

    சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்கள், கிராமங்கள் நகரப்பகுதியிலும் ஏ.சி. விற்பனை 'களை' கட்டி உள்ளது.

    ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு வித சலுகைகளை கூறி ஏ.சி. விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் வீட்டு உபயோக

    கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி வாங்கும் கூட்டம் போல தற்போது ஏ.சி. வாங்குவதற்கு கடைகளில் குவிகின்றனர்.

    சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது. வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கக்கூடும் என்பதால் அதனை சமாளிக்க ஏ.சி. வாங்குவதில் தீவிரம் காட்டுகின்றனர்.

    ஏ.சி. விற்பனை கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏ.சி.யை வாங்கினாலும் அதனை வீடுகளில் வந்து பொறுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது.

    • களியல், சுருளோடு, இரணியல், கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மேற்கு மாவட்ட பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    தக்கலை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை பெய்ததையடுத்து அங்கு வெப்பம் தணிந்தது. மார்த்தாண்டம், திங்கள்சந்தை, களியக்காவிளை, திருவட்டார், ஊரம்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. பத்துகாணி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. அங்கு ஆலங்கட்டி மழை பெய்தது. அதை கையில் எடுத்து பொது மக்கள் ரசித்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆலங்கட்டி மலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    களியல், சுருளோடு, இரணியல், கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அணைப்பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 372 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 3.90 அடியாக இருந்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 7.6, சிற்றாறு 1-15.2, சிற்றாறு 2-12.4, களியல் 10, குழித்துறை 23.2, புத்தன் அணை 5.8, சுருளோடு 28.4, தக்கலை 45, குளச்சல் 4, இரணியல் 5, பாலமோர் 2.4, திற்பரப்பு 11, கோழிப்போர்விளை 32.5, அடையாமடை 4.2, முள்ளங்கினாவிளை 16.8.

    மேற்கு மாவட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில் கிழக்கு மாவட்ட பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. நாகர்கோவில் கன்னியா குமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டனர். இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். 

    • பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி நிறைவடைந்தது.
    • பாராளுமன்ற தோ்தல் காரணமாக தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவின.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

    பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா்.

    பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தோ்தல் காரணமாக தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவின. அதனால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி மே 6-ந்தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், மே 10-ந்தேதி பத்தாம் வகுப்புக்கும் பொதுத்தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், இதில் எந்தவித கால தாமதமும் ஏற்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    • குற்றவாளிகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை.

    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். கேபிள் தொழில் மட்டுமல்லாமல் பன்றி வளர்த்த வருகின்றனர்.

    கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (வயது 27). டிப்ளமோ என்ஜினியர். இந்த நிலையில் பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும் கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் வந்தது. தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்த முன்விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    • தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன்தீஸ்வரர் கோவில் உள்ளது.
    • கடந்த ஒரு மாதமாக அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வறண்டு காணப்படுவதால், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளது அனுமான் தீர்த்தம். இங்கு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் தீஸ்வரர் கோவில் உள்ளது.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு வருவர்கள். இவர்கள் ஆற்றில் குளித்து விட்டு அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள், இந்நிலையில், கே.ஆர்.பி., அணையில் இருந்த ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது தற்போது வறட்சி என்பதால் நிறுத்தப்பட்டது.

    கே.ஆர்.பி அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தற்போது திறந்து விடப்படும் தண்ணீர், அரசம்பட்டி வரை மட்டுமே செல்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தற்பொழுது கோவில் நிர்வாகம் சார்பாக தண்ணீர் தனியாக பைப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் குளிப்பதற்காக காலையில் குறித்த நேரத்துக்கு மட்டும் தண்ணீர் விடுதொக கூறப்படுகிறது. மேலும் இந்த பைப்புகளில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஒரே இடத்தில் குளிப்பதால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பெண்களுக்கு தனியாக குளிப்பதற்கு அறைகளை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ந்தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
    • இந்த எண்ணிக்கையை மே இரண்டாவது வாரத்துக்குள் 4 லட்சமாக உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள், உயா்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 ஊக்கத்தொகை, இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கான ஊக்கத்தொகை திட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ந்தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தீவிர முயற்சிகள் காரணமாக அரசு பள்ளிகளில் புதிய மாணவா் சோ்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 940 மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையை மே இரண்டாவது வாரத்துக்குள் 4 லட்சமாக உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    • இன்று காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனை வாடகைக்கு பிடித்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
    • கல்லாமொழி அனல் நிலையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    திருச்செந்தூர்:

    சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது குடும்பத்தினர் 11 பேர் சென்னையில் இருந்து நேற்று காலை திருச்செந்தூருக்கு ரெயிலில் வந்து விடுதியில் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனை வாடகைக்கு பிடித்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். காலை 10 மணியளவில் கல்லாமொழி, பள்ளிவாசல் நுழைவாயில் எதிரே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டெம்போ வேன் உருண்டு ஓடியது. அதில் பயணித்த சகாயராஜின் மனைவி சுமதி (வயது 37) படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கல்லாமொழி அனல் நிலையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் சகாயராஜின் தாயார் மேரி (60), மகன்கள் தன்ஷிக் (14), மனோஜ்குமார் (13), ரமேஷ் என்பவரது மகள் திவ்யதர்ஷினி (8), டெம்போ வேன் டிரைவர் குலசை, முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் விஜயகுமார்(38) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இதில் மேரி மற்றும் தன்ஷிக் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், டிரைவர் சுப்பையா திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்த்துறை கைது செய்தது.
    • 36-வது முறையாக ஜூன் 14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவரை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்த்துறை கைது செய்தது. அமலாக்கத்துறை சில நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. அதன்பின் நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்தார். எங்கும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

    இதனால் அவரது நீதிமன்றம் காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி மூலம் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜூன் 4-ந்தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

    இதன்மூலம் 36-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • பணத்தை ரெயிலில் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
    • கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

    சென்னை:

    பா.ஜ.க. நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சென்னையில் இருந்து ரூ.4 கோடி கடந்த மாதம் 26-ந் தேதி நெல்லைக்கு கொண்டு சென்றபோது தாம்பரத்தில் சிக்கியது.

    பணத்தை ரெயிலில் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் தாம்பரம் போலீசாரிடம் இருந்து அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. வழக்கு ஆவணங்கள் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டதால் தீவிரமாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது. விரைவில் அவர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள். அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    • பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மந்திர மூர்த்தி (வயது29). இவரும், இவரது நண்பர் செல்வ மாரியப்பன் என்பவரும் கடந்த 24-ந்தேதி இரவு கோவில்பட்டி வசந்த் நகர் பகுதியில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்நிலையில் போதையில் இருந்த மந்திர மூர்த்தியும், அவரது நண்பர் செல்வ மாரியப்பனும் ரெயில் முன்பு செல்பி எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது இருவரும் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். இதில் மந்திர மூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். செல்வ மாரியப்பன் லேசான காயம் அடைந்துள்ளார்.

    அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயம் அடைந்த மந்திர மூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் தெரியும் வகையில் தொலைக்காட்சி சாதனங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இன்று காலை சுமார் 7 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. பதிவுகள் தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக மத்திய மற்றும் மாநில போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு வசதியுடனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான கட்டுப்பாட்டு அறை அட்மின் பிளாக்கில் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் தெரியும் வகையில் தொலைக்காட்சி சாதனங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் வேட்பாளர்கள் பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களும் 24 நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இருப்பு அறையின் வெளிப்புற பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் ஒளிப்பதிவுகள் தெரியும் வண்ணம் கூடுதலாக தொலைக்காட்சி சாதனங்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. பதிவுகள் தெரியவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றதன் பேரில் ஈரோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர் பிரநிதிகளுடன் ஆய்வு செய்ததில் இருப்பு அறையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதேதும் இல்லாமல் செயல்பட்டு வந்ததும், இருப்பு அறையின் வெளியே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. காட்சிப்பதிவுகள் இருந்துள்ளதும், இருப்பு அறையில் இருந்து அட்மின் பிளாக்கில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. பதிவுகள் தெரியவில்லை என்பதும் கண்டறியப்பட்டு வேட்பாளர்களின் பிரநிதிகளுக்கு விளக்கப்பட்டது.

    பின்பு சி.சி.டி.வி. இணைப்புகள் சரி செய்யப்பட்டு காலை 9 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. பதிவுகள் முழுமையாக தெரிந்தது.

    ×