search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தக்கலையில் 45 மில்லி மீட்டர் மழை பதிவு: திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது
    X

    தக்கலையில் 45 மில்லி மீட்டர் மழை பதிவு: திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது

    • களியல், சுருளோடு, இரணியல், கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மேற்கு மாவட்ட பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    தக்கலை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை பெய்ததையடுத்து அங்கு வெப்பம் தணிந்தது. மார்த்தாண்டம், திங்கள்சந்தை, களியக்காவிளை, திருவட்டார், ஊரம்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. பத்துகாணி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. அங்கு ஆலங்கட்டி மழை பெய்தது. அதை கையில் எடுத்து பொது மக்கள் ரசித்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆலங்கட்டி மலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    களியல், சுருளோடு, இரணியல், கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அணைப்பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 372 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 3.90 அடியாக இருந்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 7.6, சிற்றாறு 1-15.2, சிற்றாறு 2-12.4, களியல் 10, குழித்துறை 23.2, புத்தன் அணை 5.8, சுருளோடு 28.4, தக்கலை 45, குளச்சல் 4, இரணியல் 5, பாலமோர் 2.4, திற்பரப்பு 11, கோழிப்போர்விளை 32.5, அடையாமடை 4.2, முள்ளங்கினாவிளை 16.8.

    மேற்கு மாவட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில் கிழக்கு மாவட்ட பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. நாகர்கோவில் கன்னியா குமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டனர். இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    Next Story
    ×