என் மலர்
செய்திகள்
- நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
- இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பாவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங்கும், 3-வது ஆட்டத்தில் இந்திய அணியின் அனாஹத் சிங்கும் வென்றனர். இறுதியில், இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தனது முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுகள். சொந்த நாட்டுப் பார்வையாளர்களின் முன்னிலையில், ஜோஸ்னா, அபய்சிங், செந்தில்குமார் மற்றும் அனாஹத் சிங் ஆகியோரின் நிதானமும், துணிச்சலும், தரமும் நிறைந்த ஆட்டத்தால் 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது.
இந்திய அணியின் நால்வரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், இத்தகைய பன்னாட்டு தொடரை சென்னையில் நடத்தியதும் சேர்ந்து இச்சாதனை வெற்றியானது தமிழ்நாட்டின் விளையாட்டுச் சூழலின் ஆழத்தையும், நம்பிக்கையையும், சிறப்பையும் மீண்டுமொரு முறை நிலைநாட்டியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை மிகவும் பிரபலமானதாகும்.
- விடுமுறை நாளில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என நியூ சவுத் வேல்ஸ் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
- டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
- இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' எனும் தலைப்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
வாக்கு திருட்டு குறித்த எனது குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடுங்கும் கைகளுடன் தேர்தல் ஆணையத்துக்காக அவர் விளக்கமளித்தார்.
அவர் ஏன் நடுங்கினார் என சொல்லட்டுமா?. ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே தைரியமாக இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகிறது. நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையம், மோடியின் தேர்தல் ஆணையம் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த மேடையிலிருந்து உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், உண்மையை நிலைநிறுத்தி, உண்மைக்குப் பின்னால் நின்று, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என தெரிவித்தார்.
- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
- நயினார் நாகேந்திரன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.
தற்போது தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
தர்மசாலா:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்க்ரம் 61 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா இதுவரை வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,939 ரன்களும் அடித்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
இதற்கு முன் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
- ஆண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் வென்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், இந்தோனேசியாவின் முகமது யூசுப் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே பொறுப்பாக ஆடிய கிரண் ஜார்ஜ் முதல் செட்டை 21-14 என வென்றார். இதற்கு பதிலடியாக முகமது யூசுப் 2வது செட்டை 21-13 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரண் ஜார்ஜ் 21-16 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
- புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் பல்வேறு மாநிங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பகிரங்கமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து ராகுல் காந்தி அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஆதாரங்களை வெளியிட்டார்.
அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

அதன்படி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை கடந்த நவம்பர் 5ம் தேதி அன்று ராகுல் காந்தி ஒவ்வொன்றாக வெளியிட்டார். இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை.
நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன்.
ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார்.

5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார், பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்.
பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள், உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார் அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.
நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக gen z தலைமுறையினர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் இந்த பெண்மணி ஹரியானாவின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளை செலுத்தி இருக்கிறார்.
பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்தப் பெண்மணி நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அதனால்தான் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளிவிடாமல் தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது.
இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதுகளின் வெவ்வேறு அடையாள அட்டைகளை வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக ராகுல் காந்தி வெளியிட்டார்.
ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது . இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர்.
ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.
ஹரியானாவை தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும் அவர், "பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.
இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.
வாக்கு திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.ஐ.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.

பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.
பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.
பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று ராகுல் காந்தி கூறினார்.
- டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தர்மசாலா:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது டி போட்டி இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இன்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்கிரம் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 18 பந்தில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா- சுப்மன் கில் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது.
அடுத்து இறங்கிய திலக் வர்மா நிதானமாக ஆடினார். சுப்மன் கில் 28 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய அணி 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வென்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ஈஷாராணி பரூவா உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-17, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார்.
- கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மும்பை வான்கடே மைதானத்தில் சந்தித்து உரையாடிக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் கொல்கத்தா சென்ற மெஸ்ஸி, அங்கு தன்னுடைய 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து ரசிகர்களை சால்ட் லேக் மைதானத்தில் சந்தித்துவிட்டு சில நிமிடங்களில் வெளியேறினார். இதன்பின் ஹைதராபாத் வந்த மெஸ்ஸிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி ஆடினார். அதேபோல் மைதானம் முழுக்க வலம் வந்து ரசிகர்களுக்கு கைகளை காட்டினார். இந்த நிலையில் இன்று மும்பையில் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். வான்கடே மைதானத்தில் மெஸ்ஸி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது மெஸ்ஸியும், சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துக் கொண்டனர். மெஸ்ஸியுடன் சில நிமிடங்கள் உரையாடிய சச்சின் தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார். அதனை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்ட மெஸ்ஸி, சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி கூறினார். இதன்பின் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 10 ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடினார். அதேபோல் கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்.
இதனால் ஜெர்சி 10ஐ சச்சின் பரிசாக அளித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மூன்று பிள்ளைகளையும் ஒற்றைப் பெற்றோராக இருந்து வளர்த்துவருகிறார் இந்திராணி
- கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.
கேரம் விளையாட்டில் உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற காசிமேடு பகுதியை சேர்ந்த கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா, 2025ஆம் ஆண்டிற்கான 7ஆவது உலகக் கோப்பை கேரம் போட்டியில் மகளிர் ஒற்றையர். இரட்டையர். அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்று உலக சாம்பியனாகி, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வடசென்னையை வாழ்விடமாகக் கொண்டுள்ள லோகநாதன் - இந்திராணி ஆகியோரின் மகள் கீர்த்தனா. குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு, இளம்வயதிலேயே பணிக்குப் போகும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டவர். 2019 ஆம் ஆண்டு லோகநாதன் மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். மூன்று பிள்ளைகளையும் ஒற்றைப் பெற்றோராக இருந்து வளர்த்துவருகிறார் இந்திராணி.
இந்தப் பின்னணியில் இருந்து வந்த கீர்த்தனா, ஆறு வயதிலிருந்தே கேரம் விளையாட்டில் ஆர்வத்தோடும், அபாரத் திறமையோடும் விளங்கியதை அறிந்த அப்பகுதி மக்கள், அவரை மீண்டும் விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தியதின் விளைவாக, விளையாட்டில் முழு கவனம் செலுத்தி 2025ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் வென்றிருக்கிறார்.
அதன் பலனாய் உலகக் கோப்பை விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். 21 வயது நிரம்பிய கீர்த்தனா, சிறு வயதில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து, அதன்பின் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு இன்று உலக சாம்பியனாகத் தன் பகுதி மக்களுக்குப் பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல், இந்த நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கிறார்.
கீர்த்தனாவின் இந்தச் சாதனையைப் பாராட்டுவதும், அவரது திறமையையும் வாழ்நிலையையும் மேம்படுத்துவதும் அரசினுடைய கடமை. இது கீர்த்தனாவைப் போன்ற இன்னும் பல இளம் திறமையாளர்கள் வெளிவர உத்வேகமாகவும் அமையும் என்கிற காரணத்தினால், நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசிடம் முன்வைக்கிறது.
உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.
இதை ஊக்கப்படுத்த வேண்டியது இச்சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. இம்மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படிநீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்
- ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது. இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.






