search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி நகைகள்"

    மயிலம் அருகே ஆம்னி பஸ்சில் ரூ.2½ லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    மயிலம்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அகமதுசுலைமான்(வயது 35). நகை வியாபாரி. இவர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்று, அங்குள்ள ஒரு வியாபாரியிடம் வெள்ளி செயின், மோதிரம், கைசெயின் உள்ளிட்ட நகைகளை வாங்கினார். 3 கிலோ 479 கிராம் எடையுள்ள அந்த நகைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஆம்னி பஸ்சில் அகமது சுலைமான் ஏறினார். வெள்ளி நகைகள் அடங்கிய அந்த பையை தனது இருக்கையில், கால் வைக்கும் பகுதியில் வைத்திருந்தார். அந்த ஆம்னி பஸ், விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பாதிராப்புலியூர் என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் இரவு 9 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சாப்பிட சென்றனர். அதன்படி அகமது சுலைமானும், பையை பஸ்சிலேயே வைத்துவிட்டு சாப்பிட சென்றார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, தான் வைத்திருந்த இடத்தில் அந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அகமதுசுலைமான், பஸ் முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் அந்த பை கிடைக்கவில்லை. அதனை ஆம்னி பஸ்சில் வந்த மர்மநபர்கள், கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இது குறித்து அவர், மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் அந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்தது யார்-யார்?, பாதிராப்புலியூரில் இருந்து டிராவல்ஸ் பஸ் புறப்பட்டபோது பயணம் செய்யாதவர்கள் யார்-யார்? என்ற பட்டியலை சேகரித்து, அதன்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எமரால்டில், சுவரில் துளையிட்டு அடகு கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மஞ்சூர்:

    எமரால்டில், சுவரில் துளையிட்டு அடகு கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மஞ்சூர் அருகே எமரால்டு பஜாரில் அடகு கடை நடத்தி வருபவர் சோத்தாராம்(வயது 47). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது கடை போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ளது. நேற்று காலை 8.15 மணிக்கு வழக்கம்போல் சோத்தாராம் கடையை திறந்தார். அப்போது அங்கு வலதுபுற சுவரில் பெரிய அளவில் துளையிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அடகு கடையை ஒட்டியுள்ள டீக்கடை ஷட்டரின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் கணேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவர், தனது கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் டீக்கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி, சுவரில் துளையிட்டு அருகிலுள்ள அடகு கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உடனே எமரால்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அடகு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர், சுவரில் துளையிட்டு கடைக்குள் நுழைவதும், கண்காணிப்பு கேமராவை சுவரை நோக்கி திருப்பி வைத்ததும் பதிவாகி இருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபு ஆகியோர் வந்து பார்வையிட்டனர். பின்னர் மில்டன் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பஜாரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த மோப்பநாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×