search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொகரம் பண்டிகை"

    • மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.
    • இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர்.

    இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இந்த கிராமத்தில் சாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.

    அதன்படி இன்று இஸ்லாமியர்களால் மொகரம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கிராமத்தைக் காட்டிலும் காசவளநாடு கிராம இந்து மக்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் மொகரம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். மொகரம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்துக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து பயபக்தியோடு பண்டிகைக்கு தயாராகி வந்தனர்.

    அதன்படி இன்று இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அந்த கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை மாலை மற்றும் பட்டுத் துண்டை சாத்தி வேண்டிக்கொண்டனர். பின்னர் அங்குள்ள அல்லா கோவிலுக்கு கொண்டு வந்து பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இதையடுத்து அந்த பஞ்சா கரகம் அங்குள்ள பூக்குழியில் இறங்கியவுடன் அல்லா சாமியை சுமந்து வந்தவர்கள் முதலில் தீ மிதித்தனர். பின்னர் பயபக்தியுடன் மற்ற பொதுமக்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் திருநீறு, எலுமிச்சை பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனால் இன்று அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டது.

    இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம் என்றனர்.

    • மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்தது.
    • இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் தீக்கங்குகளை போட்டு தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்தது. பெரியகுளம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அசனார், உசேனார், மாமூனச்சி ஆகிய உடன் பிறந்தவர்கள் இருந்தனர்.

    அங்கு நடந்த கலவரத்தில் அசனார், உசேனார் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை எரித்த தீயில் சகோதரியான மாமுனாட்சி அதே நெருப்பில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அதன் பின்பு பெரியகுளம் பகுதியில் காலரா பரவி அதிக அளவில் பொதுமக்கள் இறந்தனர்.

    அந்த கிராமத்தில் பெரியவர் ஒருவர் கனவில் தலையில் முக்காடு அணிந்த பெண் தோன்றி நோய் குணமாக வேண்டுமானால் வருடந்தோறும் பூக்குழி இறங்கி எங்களை வணங்கி வந்தால் நோய் குணமாகும் என்று கூறி மறைந்தார். அதன்படி பொதுமக்கள் நேர்த்திக்கடனாக செய்தனர்.

    பரவிய நோய் காணாமல் போனது. அது முதல் பெரியகுளம் கிராம மக்கள் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை அன்று இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் தீக்கங்குகளை போட்டு தெய்வமாக வணங்கி வருகின்றனர். விழாவில் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • இளைஞர்கள் புலி வேடமணிந்து ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
    • நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆடுகளை வாயில் கவ்வி தூக்கி வீசும் நிகழ்வும் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள எரப்பநாயக்கனூர் கிராமத்தில் மொகரம் பண்டி கையையொட்டி இஸ்லாமிய மக்களின் முதல் மாத புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

    அதன் அடிப்படையில் மொகரம் தொடங்கி 10 நாட்களுக்கு விரதம் இருந்து பத்தாவது நாளில் துக்கம் அனுசரிக்கும் விதமாக விரதமிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் புலி வேடமணிந்து ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

    தொடர்ந்து நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆடுகளை வாயில் கவ்வி தூக்கி வீசும் நிகழ்வும் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை அனைத்து மக்களுக்கும் சமப்பந்தி விருந்து வைத்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று அவர்கள் பாத்திமா நாச்சியாரை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடுவது வழக்கம்.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை மொகரம் பண்டிகை கொண்டப்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன் திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையைக் இந்துக்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    முதுவன் திடல் கிராமத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிகளவில் வசித்தனர். அப்போது பாத்திமா நாச்சியார் என்ற பெண் அங்கு வாழ்ந்து வந்தாகவும், அவர் இறந்த பின் முதுவன் திடல் கிராமத்தின் மையப் பகுதியில் தர்கா, பள்ளிவாசல் அமைத்து அவரை அந்த கிராம மக்கள், முஸ்லிம்கள் தெய்வமாக வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த கிராமத்தில் தற்போது இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று அவர்கள் பாத்திமா நாச்சியாரை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம் போன்றவற்றுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும், நேர்த்திக்கடன் தீர்க்க நினைப்பவை நடப்பதாகவும் கிராம மக்கள் நம்புகின்றனர்.

    இந்த ஆண்டு மொஹரம் பண்டிகையையொட்டி முதுவன் திடல் கிராமத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், 7-வது நாள் தர்காவில் சப்பர பவனியும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை மொகரம் பண்டிகை கொண்டப்பட்டது.

    இதையொட்டி பூக்குழி அமைக்கப்பட்டது. கிராம மக்கள் ஊர்வலமாக வந்து அதிகாலை 4.20 மணிக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து பூ மொழுகுதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் தலையை சேலையால் மூடியபடி பூக்குழி முன்பு அமர்ந்து இருப்பார்கள். தலையை ஈரத்துணியால் போர்த்தி, அதற்குமேல் 3 முறை தீ கங்குகளை எடுத்துப் போடுவார்கள்.

    திருவிழாவின் இறுதியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை பொதுமக்கள் மேளதாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கிச் சென்று மீண்டும் தர்காவிற்கு கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். இன்று நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியைக் காண திரளான பொது மக்கள் கூடி இருந்தனர்.

    ×