search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமேஸ்வர்"

    • மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன.
    • பா.ஜனதா மோசமான ஆட்சியை நடத்தியதால் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

    பெங்களூரு :

    மூத்த மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    5 முக்கியமான உத்தரவாத வாக்குறுதிகளை அமல்படுத்துவதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம். அந்த வாக்குறுதிகளை அமல்படுத்த முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இது பா.ஜனதாவினருக்கும் தெரியும்.

    ஆட்சி நிர்வாகத்தை நடத்திய அனுபவம் அவர்களுக்கு உள்ளது. ஒரு திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரியாதா?. அடுத்த வாரம் 2-வது மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்குறுதிகள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் தான் அமல்படுத்த வேண்டும். இதை எதிர்க்கட்சிகளால் செயல்படுத்த முடியுமா?.

    நாங்கள் பொறுப்புடன் பேசுகிறோம். பா.ஜனதா மோசமான ஆட்சியை நடத்தியதால் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பா.ஜனதா பாடம் கற்கவில்லை. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டுமா?.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

    மந்திரி பிரியங்க் கார்கே கூறும்போது, "முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுத்துள்ளோம். 15 நாட்களில் முழுமையான அரசை அமைத்துள்ளோம். ஆனால் பா.ஜனதாவால் இன்னும் தனது தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால் பா.ஜனதாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

    • நான் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்தேன்.
    • காங்கிரஸ் மீது தலித் மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவா்கள் நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது கா்நாடக சட்டசபையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று இருப்பது குறித்து கடிதம் கொடுத்தார். பதவி ஏற்பு விழா நடைபெறும் நாள் உள்ளிட்ட தகவல்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    கவர்னரை சந்தித்த பிறகு பரமேஸ்வர் கூறுகையில், "புதிய முதல்-மந்திரியை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சி மேலிடம் ஒருவருக்கு மட்டுமே துணை முதல்-மந்திரி பதவி வழங்குவதாக கூறியுள்ளது. இது சரியல்ல. நான் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்தேன்.

    குறைந்தபட்சம் துணை முதல்-மந்திரி பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். காங்கிரஸ் மீது தலித் மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் துணை முதல்-மந்திரி பதவியை அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டியது அவசியம். நான் மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து இதுபற்றி வலியுறுத்துவேன்" என்றார்.

    • முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது.
    • சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். என்னாலும் 50 எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து செல்ல முடியும். ஆனால் கட்சி கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். கட்சியின் முடிவை நான் ஏற்பேன். பொதுவாக எங்கள் கட்சியில் மாநில தலைவராக இருப்பவருக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்குவது சம்பிரதாயம். இது தான் எனது கருத்து" என்றார்.

    பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பரமேஸ்வர் காங்கிரஸ் மாநில தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதாகவும், அவர் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் என்றும் அவர்கள் கூறினர்.

    • கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி.
    • முதல்-மந்திரி விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் 2 மணிநேரத்திற்கும் மேலாக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி. பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றே கூறி உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

    நாளை (இன்று) ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் வெளியான பின்பு, அதுபற்றி எங்கள் தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள். துமகூரு மாவட்டத்திலும், கொரட்டகெரே தொகுதிகளிலும் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரசில் முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

    அதற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடத்தி முதல்-மந்திரி யார்? என்பது குறித்து தீர்மானிக்கப்படும். கட்சி மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். காங்கிரஸ் மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்.

    கட்சி தலைமை கூறிய பின்பு முதல்-மந்திரி பதவி வேண்டாம் என்று சொல்ல முடியுமா?. முதல்-மந்திரி விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரட்டகெரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் போட்டியிடுகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந்தித்து வருகிறது.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கர்நாடகத்தில் முற்றுகையிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    இவ்வாறு வரும் அரசியல் கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன், அனல் பறக்கும் வார்த்தைகளால் சாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் முன்னாள் துணை முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நேற்று நடந்துள்ளது. கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

    கொரட்டகெரே தொகுதி யில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் போட்டியிடுகிறார். அவர் கொரட்டகெரே அருகே பைரேனஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பிரசாரம் செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பரமேஸ்வருக்கு மாலை அணிவித்தும், பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஆதரவாளர்கள் பரமேஸ்வரை தோள்களில் தூக்கி வைத்து உற்சாகமாக நடனமாடியபடி இருந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் பரமேஸ்வர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் ஒரு கல் அவரது தலையை பதம் பார்த்தது. இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பரமேஸ்வர் தனது கையால் ரத்தம் வெளியேறிய பகுதியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார்.

    பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை கீழே இறக்கி, அவரை அருகில் உள்ள அக்கிரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக துமகூருவில் உள்ள சித்தார்த்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் அங்கு திரண்டு இருந்த கிராம மக்கள், காங்கிரஸ் தொண்டர்களிடம் விசாரித்து தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காங்கிரஸ் வேட்பாளர் பரமேஸ்வர் மீது திட்டமிட்டே மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

    பைரேனஹள்ளி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் யாரும் அசம்பாவிதங்களில் ஈடுபடக்கூடாது என்று தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    ஏற்கனவே, பரமேஸ்வர் கடந்த 19-ந்தேதி கொட்டகெரே தாலுகா அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய தாலுகா அலுவலகத்திற்குள் சென்ற சமயத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    சம்பவம் பற்றி கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொரட்டகெரே தாலுகா ரெட்டிஹள்ளி அருகே வெங்கடபுரா கிராமத்தை சேர்ந்த ரங்கதம்மய்யா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் 2-வது முறையாக நடந்த கல்வீச்சில் வேட்பாளர் பரமேஸ்வர் மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கூட்டணி ஆட்சியில் எந்த குழப்பத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
    பெங்களூரு:

    பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இந்த கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். அதேபோல் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். இடங்கள் பங்கீடு குறித்து அடுத்து வரும் நாட்களில் நாங்கள் ஆலோசித்து முடிவு எடுப்போம்.

    கூட்டணி ஆட்சியில் நாங்கள் எந்த குழப்பத்திற்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டோம். கூட்டணி அரசில், விட்டுக்கொடுத்து போகும் போக்கை இரு கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும். எங்கள் கட்சிக்கு 22 மந்திரி பதவி கிடைத்துள்ளது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து மந்திரி பதவிகளையும் நிரப்பாமல், சில இடங்களை காலியாக வைப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

    முதல்-மந்திரி நடத்தும் ஆய்வு கூட்டங்களில் அதிகாரிகள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சரியான முடிவு தான். இதனால் கூட்டங்களில் தேவை இல்லாத தொல்லைகள் நீங்கும். அதிகாரிகள் கவனம் சிதறாமல் செயல்படும் நிலை ஏற்படும். தகுதியான ஒருவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும்.

    எங்கள் கட்சியில் மந்திரி பதவிக்கு நிறைய பேர் போட்டி போடுகிறார்கள். அவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை விரைவில் நிறைவடையும். மத்திய அரசு, சி.பி.ஐ. விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்துகிறது.

    எங்கள் கட்சியை சேர்ந்த டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த அதிகாரிகள், டி.கே.சுரேஷ் எம்.பி.யின் பெயரை குறிப்பிடுமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சரியல்ல.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
    ×