search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை வியாபாரி"

    • கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-3 முன்னிலையில் ஆஜர்படுத்தி 2 பேரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி உதவியாளர்கள் 2 பேருடன் தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு சென்றபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து சுஷாந்தை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1½ கோடியை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 4 தனிப்படையினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், மூணாறு, நெய்யாற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த செபின் ராஜி(26), எட்வின் தாமஸ்(27) ஆகிய 2 பேரை மூணாறு பகுதியில் போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்தனர். நேற்று மதியம் கேரளாவில் இருந்து நெல்லைக்கு அவர்கள் 2 பேரையும் கொண்டு வந்தனர்.

    பின்னர் நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-3 முன்னிலையில் ஆஜர்படுத்தி 2 பேரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    கொள்ளை சம்பவத்தில் 8 பேர் வரையிலான கும்பல் ஈடுபட்டிருக்கலாம். அதில் தற்போது பிடிபட்டுள்ள 2 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    அவர்கள் தங்கியிருந்த விடுதி அறை முழுவதும் தேடிப் பார்த்தும், பெரிய அளவில் பணம் எதுவும் கைப்பற்ற முடியவில்லை. அவர்களிடம் விசாரிக்கும்போது, சக கூட்டாளிகளிடம் கொடுத்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இதனால் தனிப்படை போலீசார் தொடர்ந்து கேரளாவிலேயே முகாமிட்டு மீதமுள்ள 6 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரின் செல்போன் அழைப்புகளை வைத்து அவர்களுடைய கூட்டாளிகள் இருக்கும் இடத்தை தேடி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நகை வாங்க வருவதை நன்கு அறிந்த கொள்ளை கும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்து பணத்தை பறித்து சென்று உள்ளனர்.
    • நகை வியாபாரிகளிடம் ரூ.1 கோடியே 40 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராயபுரம்:

    ஆந்திர மாநிலம், பப்பட்டலா பகுதியை சேர்ந்தவர்கள் சுபாராவ், ரஹ்மான். நகை வியாபாரிகள். இவர்கள் அடிக்கடி சென்னை சவுகார்பேட்டையில் உள்ள குறிப்பிட்ட நகை வியாபாரியிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நகைகள் வாங்கிச்செல்வது வழக்கம்.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுகார்பேட்டையில் உள்ள மொத்த வியாபாரியிடம் நகை ஆர்டர் கொடுத்து இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை வியாபாரிகள் சுபாராவ், ரஹ்மான் ஆகியோர் நகைக்கு கொடுப்பதற்காக ரூ.1 கோடியே 40 லட்சம் ரொக்கத்தை பையில் வைத்துக்கொண்டு சென்னை வந்தனர்.

    அவர்கள் சென்ட்ரலில் இருந்து சவுகார்பேட்டை நோக்கி அதிகாலை 3.30 மணியளவில் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.

    யானைக்கவுனி, துளசிங்கம் தெரு-வீரப்பன் தெரு சந்திப்பில் வந்தபோது திடீரென ஒரு கார் ஆட்டோவை வழிமறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 வாலிபர்கள் தாங்கள் போலீசார், உங்களை சோதனை செய்ய வேண்டும் என்று சுபாராவ், ரஹ்மான் ஆகியோரிடம் தெரிவித்தனர்.

    அவர்கள் கையில் லத்தி மற்றும் கைவிலங்கு ஆகியவை வைத்து இருந்தனர். இதனால் வியாபாரிகள் சுபாராவ், ரஹ்மானுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

    3 வாலிபர்களும் வியாபாரிகளின் பையை சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டனர். உடனே அவர்கள் வியாபாரிகள் சுபாராவ், ரஹ்மானை தாக்கி கீழே தள்ளினர்.

    மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.1 கோடியே 40 லட்சம் ரொக்கத்தை பறித்து அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர். இதனால் நகை வியாபாரிகள் சுபா ராவ், ரஹ்மான் மற்றும் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதனை வைத்து போலீஸ்போல் நடித்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வியாபாரிகள் நகை வாங்க வருவதை நன்கு அறிந்த கொள்ளைகும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்து பணத்தை பறித்து சென்று உள்ளனர். அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

    கொள்ளையர்கள் ஆந்திராவில் இருந்தே வியாபாரிகளை பின்தொடர்ந்து வந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நகை வியாபாரிகளிடம் ரூ.1 கோடியே 40 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விழுப்புரத்தில் பரபரப்பு நகை வியாபாரி காருக்கு மர்ம கும்பல் தீ வைத்தனர்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்மமான முறையில் எரிவதை கண்டு குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் தீயை போராடி அணைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருவாமாத்தூர் சானந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 38). இவர் விழுப்புரத்தில் தங்க நகை செய்து விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் தனது காரில் வெளியூருக்கு சென்று விட்டு இரவு வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் தூங்கச் சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கு வந்து காருக்கு தீ வைத்து விட்டு சென்றனர். தீ லேசாக எரிய தொடங்கி மளமளவென பயங்கரமாக எரிந்தது. 

    அப்போது திடீரென்று வீட்டின் வெளியே தீப்பற்றி எரிவதை அறிந்த குமாரசாமி திடுக்கிட்டு எழுந்து வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்மமான முறையில் எரிவதை கண்டு குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் தீயை போராடி அணைத்தார். இந்த விபத்தில் காரின் முன் பக்கம் முழுவதும் தீக்கிரையானது. மேலும் இது குறித்து குமாரசாமி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காருக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

    ×