search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி துறைமுகம்"

    • அம்பர் கிரீஸ் மற்றும் கொட்டப்பாக்குகள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
    • கண்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களும், கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களும் படகுகள் மூலம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல் படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே அம்பர் கிரீஸ் மற்றும் கொட்டப்பாக்குகள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

    நேற்று துபாயில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட கண்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சுமார் ரூ.2½ கோடி மதிப்பிலான 28 டன் கொட்டை பாக்குகள் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சட்டவிரோதமாக கொட்டை பாக்குகள் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று, அங்கிருந்த கண்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது இயற்கை உரங்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட 2 கண்டெய்னர்களில் சோதனை நடத்தினர். அதில் சுமார் 25 டன் எடையுள்ள கொட்டை பாக்குகள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இதன் மதிப்பு ரூ. 2 கோடியே 60 லட்சம் ஆகும். இதனை கைப்பற்றிய மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதில் இருந்த சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • ஹாமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.

    தூத்துக்குடி:

    சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என அறிவித்தது. மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை ( 25-ந் தேதி) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும்.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தது.

    இந்நிலையில் ஹாமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • பாரத் கப்பலில் உள்ள கிரேன் மூலம் லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்தார்.
    • தெர்மல்நகர் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் பனாமா நாட்டின் கியானா கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் எகிப்து நாட்டுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனை தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள மீனவர் காலனி பகுதியை சேர்ந்த பாரத் (வயது40) என்பவர் லேபர் காண்ட்ராக்ட் மூலம் பணிகளை செய்து வந்தார். அதன்படி கப்பலில் உள்ள கிரேன் மூலம் லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கிரேன் உடைந்து கப்பலின் உள்ளே அவர் கிரேனுடன் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு நின்றவர்கள் உடனடியாக மற்றொரு கிரேன் மூலமாக பாரத்தை மீட்டனர்.

    அவருக்கு தலையில் பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல்நகர் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளி துறைமுக கப்பல், தூத்துக்குடி துறைமுகத்திற்குள் கப்பலில் உள்ள பொருட்களை இறக்கும் போதும், ஏற்றும் போதும் பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலில் சோதனையிட வேண்டும்.

    அதன் பின்னரே கப்பலில் உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள் சோதனை செய்வதில்லை.

    இதனாலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக துறைமுக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

    • போலீசார் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 11 பேரல்களில் 2,200 லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் வழியாக வாகனம் மூலம் டீசல் கடத்தி செல்லப்படுவதாக தூத்துக்குடி தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுரைப்படி சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு காவலர்கள் ராஜேஷ் குமார், ஆனந்த கிருஷ்ணன், ஜான்சன், செல்வின் ராஜா, முருகேசன், கிளிப்டன் மற்றும் போலீசார் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 11 பேரல்களில் 2,200 லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது. அவை கீழ அரசரடியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து டீசலுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி (வயது 24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கடத்தலில் தொடர்புடை யவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

    • தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    • மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    வானிலை மாற்றம் காரணமாக கடலோர பகுதியில் அதிக காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது. பலமான காற்று வீசக்கூடும் என்பதனை வலியுறுத்தும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மேலும் மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் 260 விசைப்படகுகள் இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

    • மிகப் பெரிய கப்பல்களை கையாளும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன.
    • பொருளாதார வளர்ச்சிக்கு பயனுடையதாக அமையும் என தகவல்

    தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஒன்பதாவது சரக்கு தளம், சரக்கு பெட்டக தளம், கப்பல் நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய அளவிலான கப்பல்களை கையாளும் வகையில் துறைமுகத்தில் மிதவையானம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக மையமாக மாற்றும் வகையில், தொலைநோக்கு அடிப்படையில் இந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம். அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இந்த பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு துறைமுகத்தில் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது.


    அப்போது பேசிய அவர், இதன் மூலம் இலங்கை துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களில் பெரும்பாலானவை தூத்துக்குடிக்கு துறைமுகத்திறகு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன.
    • திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பின்னலாடை ரகங்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியே ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகங்களையே திருப்பூர் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன.தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பப்படும் சரக்குகள், சிறிய கப்பல்களில் (பீடர் வெசல்) ஏற்றப்பட்டு, கொழும்பு சென்று அங்கு பெரிய கப்பலுக்கு (மதர் வெசல்) மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன. இதனால் சரக்குகள் வெளிநாடுகளை சென்றடைய தாமதமாகிறது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பும் சரக்குகள், கொழும்புவை அடைந்து பெரிய கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு இரண்டு வாரத்துக்கு மேலாகிறது. சீசனுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வெளிநாட்டைச் சென்றடைவது அவசியம். தாமதத்தை வெளிநாட்டு வர்த்தகர்கள் விரும்புவதில்லை.திருப்பூரின் 90 சதவீத சரக்கு போக்குவரத்துக்கு கைகொடுத்துவந்த தூத்துக்குடி துறைமுகத்தை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில் போதுமான சரக்கு ஏற்றப்பட்டால் பல பெரிய கப்பல்கள் கொச்சி துறைமுகத்தை புறக்கணித்து விடுகின்றன. திருப்பூரிலிருந்து 250 கி.மீ., தூரத்தில் கொச்சி, 330 கி.மீ.,ல் தூத்துக்குடி துறைமுகங்கள் இருந்தாலும், இந்த துறைமுகங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

    விரைவில் சரக்கை அனுப்ப 500 கி.மீ., தொலைவில் உள்ள சென்னை துறைமுகத்தை நாட வேண்டியுள்ளது. செலவும் அதிகரிக்கிறது.திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது. தூத்துக்குடி துறைமுக அதிகாரிகளின் அலட்சியமும், தொலைநோக்கு பார்வையில்லாததும், தமிழக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை பாதிக்க செய்கிறது.எனவே, துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்தி, தூத்துக்குடிக்கு பெரிய கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு துறைமுக சார்பு நிலை தொடர்ந்தால், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×