search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக மகளிர் உரிமை மாநாடு"

    • மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
    • இந்தியா கூட்டணி அமைத்த பிறகு இதுவரை பொதுக்கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.

    சென்னை:

    சென்னையில் தி.மு.க. மகளிர் அணி ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மகளிர் உரிமை மாநாடு இன்று நடைபெறுகிறது.

    இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை சுற்றிலும் 300 ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் அகில இந்திய தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதிகள் ஆகியோரை சந்தித்து பேசியது. முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றது உள்ளிட்ட அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

    அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மகளிர் நல திட்டங்கள் தொடர்பான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா, பிரியங்கா ஆகியோர் நேற்று இரவே சென்னை வந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு எம்.பி., காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.

    இன்று மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினரும் பீகார் மாநில மந்திரியுமான லெஷிசிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக சோனியா காந்தி விழா பேரூரையாற்றுகிறார்.

    இந்தியா கூட்டணி அமைத்த பிறகு இதுவரை பொதுக்கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. மகளிர் உரிமை மாநாடு என்று நடத்தப்பட்டாலும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். எனவே இது இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்திய பெருமை காங்கிரசுக்கு உண்டு.

    தற்போது பா.ஜனதா அரசு மசோதாவை நிறைவேற்றினாலும் உடனடியாக அமல்படுத்தாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தலுக்கான ஏமாற்று வேலை என்றும் குற்றம் சாட்டுகின்றன.

    இந்த சூழலில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை சோனியா காந்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னையில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாடு.
    • சென்னை வந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.

    சென்னை:

    சென்னையில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர்.

    சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது.

    • பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிற மசோதா தலைவர் ராகுல் காந்தி கூறிய படி நடைமுறைக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்.
    • சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களை தாங்கிக் கொண்டு எழுச்சிமிக்க வரவேற்பை நன்றி பெருக்கோடு அளித்திடுமாறு காங்கிரஸ் நண்பர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க.வின் மகளிர் உரிமை மாநாடு முதலமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலையில் நாளை நடக்கிறது.

    19 ஆண்டுகாலம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி சாதனைகளை புரிந்தவர். 6 ஆண்டுகால வாஜ்பாய் ஆட்சியை அகற்றுவதற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு மதச் சார்பற்ற கூட்டணி அமைத்து 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருந்தவர். மீண்டும் 2009 தேர்தலில் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்தவர். டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி நடத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தவர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் 2019 மார்ச் 9 அன்று மாநிலங்களவையில் அறுதிப் பெரும்பான்மை குறைவாக இருந்தாலும் பெண்களுக்கு மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான அரசியல் சட்டத் திருத்தத்தை பிரதமர் மன்மோகன்சிங் மூலம் முன்மொழிய காரணமாக இருந்தவர்.

    குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்று மகளிர் மசோதா நிறைவேற ஆட்சியை பணயம் வைத்து துணிச்சலான முடிவு எடுத்தவர். அன்று நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதா 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியின் இறுதியில் இருக்கிற பா.ஜ.க., அதே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது. பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிற மசோதா தலைவர் ராகுல் காந்தி கூறிய படி நடைமுறைக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இதுதான் பா.ஜ.க. மகளிரை ஏமாற்றுகிற அரசியலுக்கு உரிய சான்றாகும்.

    சோனியா காந்தியை பொறுத்தவரை தி.மு.க. தலைவர் கலைஞரோடும், இன்றைய தலைவர் மு.க. ஸ்டாலினோடும் சரியான புரிதல் காரணமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் மகத்தான ஆட்சி மாற்றங்கள் அமைய பெரும் துணைபுரிந்தது. அத்தகைய சூழலில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கலை ஞரால் தியாகத் திருவிளக்கே என்று அழைக்கப்பட்ட சோனியா காந்தியும், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து முறியடித்து, மோடியின் ஆட்சியை அகற்ற தலைவர் ராகுல்காந்தியோடு இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுகிற வீராங்கனை பிரியங்கா காந்தியும் இன்று இரவு 10 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வருகை புரிகிறார்கள். அதற்கு பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு அவர் தங்கியிருக்கிற சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து புறப்பட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகை புரிகிறார்.

    சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கும், மகளிர் மாநாட்டிற்கு வருகை புரிகிற அண்ணாசாலையின் இருபுறங்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளை சார்ந்தவர்கள் பெரும் எழுச்சியோடு, பெருந்திரளாக பங்கேற்று சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களை தாங்கிக் கொண்டு எழுச்சிமிக்க வரவேற்பை நன்றி பெருக்கோடு அளித்திடுமாறு காங்கிரஸ் நண்பர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மத ரீதியான கலவரம் என்றாலும், மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் இன்றுவரை மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
    • அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம்.

    சென்னை:

    சென்னையில் நடைபெறும் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு குறித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கான அங்கீகாரம், பெண் கல்வி என்று தன் ஆட்சி பொறுப்பில் இருக்க கூடிய அந்த கால கட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதற்காக கொண்டு வந்த தலைவர் கலைஞர்.

    அவரது நூற்றாண்டில், இப்போது தேர்தல் அடுத்த ஆண்டு வரக்கூடிய இந்த நேரத்தில் சரி பாதியாக இருக்கக் கூடிய பெண்கள் தங்களுடைய கருத்துக்களை தங்கள் குரலைபதிவு செய்யக்கூடிய ஒரு மாநாடாக, அவர்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கக்கூடிய ஒரு இடமாக இந்த மாநாடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வில் உள்ள பெண்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

    மத ரீதியான கலவரம் என்றாலும், மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் இன்றுவரை மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். எனவே அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
    • மகளிர் உரிமை மாநாட்டில் இந்திய கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி உள்பட இந்திய கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதற்காக நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேசிய அளவில் தலைவர்கள் வருவதால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் அரங்கங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், இருக்கைகள், மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மாநாட்டுக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
    • மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அவர் பிறந்த தினமான ஜூன் 3-ந்தேதி முதல் இந்த ஆண்டு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதையொட்டி தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் தி.மு.க.வின் ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நாளை நடத்தப்படுகிறது.

    தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னின்று நடத்தும் இந்த 'மகளிர் உரிமை மாநாடு' நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மகளிர் தலைவர்களை பங்கேற்க செய்ய கனிமொழி எம்.பி. அழைப்பு அனுப்பி இருந்தார்.

    அந்த அழைப்பை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அவரது மகள் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, பீகார் மாநில உணவுத்துறை அமைச்சர் ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினர் லெஷி சிங், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மி கட்சி தேசிய செயல் உறுப்பினரான டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிட்லன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

    இந்த மாநாட்டுக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார். துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    மாநாட்டு தொடக்கத்தில் மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்று பேசுகிறார். மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி நன்றி கூறுகிறார்.

    இந்த மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டது குறித்தும் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, அரசு வேலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பல சட்டங்களை கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து மாநாட்டில் விளக்கி பேச உள்ளனர்.

    இது தவிர இன்றைய அரசியலில் பெண்களின் நிலைப்பாடு அவர்களது வளர்ச்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும் இந்த மாநாட்டில் தலைவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி இருவரும் இன்றிரவு 10.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள்.

    அவர்கள் இருவரும் கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்கள். இதேபோல் மாநாட்டுக்கு வருகை தரும் மற்ற பெண் தலைவர்கள் அனைவருக்கும் அதே ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வி.ஐ.பி.க்களும் கிராண்ட் சோழா ஓட்டலில் தங்குவதால் ஓட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள், பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவர்கள் கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பு மகளிர் அணியினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    ×