search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா அரசு"

    • ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 மதிப்பூதியம் அளிக்கப்பட உள்ளது.

    புவனேஸ்வர்:

    கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 90 பேர் பத்ம ஸ்ரீ, 11 பேர் பத்ம பூஷண் மற்றும் 4 பேர் பத்ம விபூஷண் என மொத்தம் 105 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே தெலுங்கானா அரசு பத்ம விருது பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஒடிசா அறிவித்தது.
    • நன்கொடையாளர்களின் தைரியம், தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என தெரிவித்தது.

    புவனேஷ்வர்:

    தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறியதாவது:

    உறுப்புகளை தானம் செய்யும் நபரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்.

    மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது உறவினர்கள் தானம் செய்ய தைரியமாக முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும்.

    நன்கொடையாளர்களின் தைரியம் மற்றும் தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம்.

    உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை தொடங்க ஒடிசா அரசு முடிவு.
    • கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறும் வகையில் 63 பேருந்துகள் இயக்கம்

    ஒடிசா மாநிலத்தில் கிராம புறங்களில் இருந்து நகர் பகுதிகளை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை (லட்சுமி பேருந்து சேவை) தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக 623 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதன் முதல்கட்டமாக கோரபுத் மாவட்டத்தில் இந்த சேவையினை ஒடிசா முதல்- மந்திரி நவீன் பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் கிராமப்புற பகுதியில் இருந்து அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களுக்கு பெண்கள், மாணவ- மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5 ரூபாய் குறைந்த கட்டணத்தில் பஸ்சில் பயணம் செய்யலாம். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

    இந்த பஸ் சேவையால் கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    • ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
    • பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் குறிப்பாக, ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் சீராக வழங்கிட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தீவிரமான வெப்ப அலை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 12 ஆம் வகுப்பு வரை, நாளை முதல் ஏப்ரல் 16 வரை மூடப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    • திருமணம் நடைபெறுகிற இடங்களுக்கே சென்று புதுமண தம்பதியருக்கு பரிசுத்தொகுப்பை வழங்கப்போகிறார்கள்.
    • ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு காலம் இடைவெளி விடுவது ஆரோக்கியமானது என்பது பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்வையும் புதுமண தம்பதியருக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

    அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த பரிசு தொகுப்பில் என்னவெல்லாம் இடம் பெறப்போகின்றன என கேட்கிறீர்களா?

    கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடும் கைப்புத்தகம், திருமண பதிவு சான்றிதழ் உள்ளிட்டவை இடம்பெறும்.

    இதுபற்றி ஒடிசா மாநில குடும்ப கட்டுப்பாட்டு இயக்குனர் பிஜய் பானிகிரகி கூறுகையில், "இந்த திட்டம் தேசிய சுகாதார திட்டத்தின் அங்கம் ஆகும். இதன் நோக்கம், புதுமண தம்பதியருக்கு குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்" என குறிப்பிட்டார்.

    இப்படி புதுமண தம்பதியருக்கு பரிசு தரப்போவது நாட்டிலேயே ஒடிசாவில்தான் முதல் முறையாக அரங்கேறப்போகிறது என்று தேசிய சுகாதார திட்டத்தின் ஒடிசா மாநில இயக்குனர் சாலினி பண்டிட் பெருமிதத்துடன் கூறினார்.

    திருமணம் நடைபெறுகிற இடங்களுக்கே சென்று புதுமண தம்பதியருக்கு இந்த பரிசுத்தொகுப்பை வழங்கப்போகிறார்கள்.

    ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு காலம் இடைவெளி விடுவது ஆரோக்கியமானது என்பது பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்வையும் புதுமண தம்பதியருக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

    ஆக, ஒட்டுமொத்த நாட்டுக்கே ஒடிசா இந்த வகையில் வழிகாட்டப்போகிறது.

    ×