search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamiraparani"

    • அருப்புக்கோட்டைக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் டிசம்பர் முதல் வழங்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    அருப்புக்கோட்டை

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அருப்புக்கோட்டை விருதுந கர், சாத்தூர் ஆகிய நகராட்சி களுக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகி ன்றன. இதில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு மட்டும் .226 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் சீவலப்பேரியிலிருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு பகிர்மான குழாய்கள் மூலம் அருப்புக்கோட்டைக்கு கொண்டு வரப்படும். இதற்காக அருப்புக் கோட்டை நகர் பகுதிகளில் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளது. இதுவரை 90 சதவீத பணிகள் முடி வடைந்துள்ளன. நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும். மேலும் வைகையில் இருந்தும் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகை வறண்ட நிலையில் உள்ளதால் வைகையில் இருந்து வரும் தண்ணீரின் தன்மை குறைந்து சுவை யற்ற நிலையில் வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வைகை யில் இருந்து அருப்புக் கோட்டைக்கு குழாய்கள் மூலம் கொண்டு வரும் குடிநீரை கட்டங்குடியில் ரூ. 6 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து அதன்பின் அருப்புக்கோட்டைக்கு வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

    பழைய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வல்லநாட்டில் இருந்து அருப்புக்கோட்டை வரை 19 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்க ளில் ஆங்காங்கே அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகி வருகிறது. அதையும் நிவர்த்தி செய்யும் வகையில் புதிய குழாய்கள் அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்தி னரிடம் திட்ட மதிப்பீடு தயார் செய்ய கூறியுள்ளேன். திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசுக்கு அனுப்பி நிதியை பெற்று குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும் கட்டங்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பழைய இரும்பு குழாய்களுக்கு பதிலாகரூ. 6 கோடி செலவில் டி.ஐ.பைப் பதிக்கப்பட உள்ளது.

    தற்போது தாமிரபரணி, வைகை ஆகிய 2 குடிநீர் திட்டங்களிலும் குறைந்த அளவே குடிநீர் பெறப்ப டுவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஆணையாளர், அசோக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் தி.மு.க. நகர செயலாளர் ஏ.கே.மணி உடனிருந்தனர்.

    • பாளை விருந்தினர் மாளிகைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி ராஜாஜி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக அரசுக்கு நன்றி

    கூட்டத்தில் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்ததற்கும், நெல்லை மாநகர பகுதியில் பொருநை அருங்காட்சியகம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேருவுக்கும் நன்றி தெரிவிப்பது, பாளை விருந்தினர் மாளிகைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.

    தொடர்ந்து தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட கவுன்சிலர்கள் தச்சை சுப்பிர மணியன், கோகுலவாணி, சங்கர் உள்ளிட்டோர் பேசும்போது, நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் உந்துதல் மையத்தில் இருந்து நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவு நீர் உந்துதல் மையத்திற்கு செல்லும் குழாயை உடைத்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை 3-வது கட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்றி அதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோர வேண்டும் என வலியுறுத்தினர்.

    காரசார விவாதம்

    அதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடை பெற்றது. இதேபோல் மேலப்பாளையம் மண்டலத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் ரம்ஜான் அலி, ரசூல்மைதீன் உள்ளிட்டோர் பேசும்போது, பாளையங்கால்வாயில் நேரடியாக கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றனர்.

    பாளை பகுதி கவுன்சி லர்கள் சிலர் பேசுகை யில், கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் நீராதாரமாக விளங்கும் அடிக்குழாய்கள் பல்வேறு பகுதிகளில் சிதலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து கேட்டால் அதற்கான உபகரணங்கள் வரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சியில் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுவது போல் மண்டல அலுவலங்களிலும் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றனர்.

    சிறப்புக்குழு

    கவுன்சிலர் உலகநாதன் பேசும்போது, டவுன் வ.உ.சி. தெருவில் அமைக்க ப்பட்டுள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் பழுதடைந்து உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பதிலளித்து பேசிய மேயர் சரவணன் கூறியதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு உருவாக்கி கண்காணிக்கப்படும். மண்டல அளவில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை களில் மாலை நேரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுதாமூர்த்தி, கருப்பசாமி கோட்டை யப்பன், பவுல்ராஜ், கிட்டு என்ற ராம கிருஷ்ணன், ரவீந்தர், நித்திய பாலையா, சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வரவு-செலவு அறிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.24 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.
    • பட்ஜெட் கூட்டத்தின் போது மக்களை தேடி மேயர் திட்டம் என பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    நிதி நிலை அறிக்கை

    மேயர் சரவணன் பதவி ஏற்ற பின்னர் முதல் நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்து பேசியதாவது:-

    நெல்லை மாநக ராட்சியில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. வருவாய் மூலதன நிதியின் கீழ் 93 கட்டிடங்கள் ரூ.843.91 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 39 கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு, 31 பணிகள் நடந்து வருகிறது.

    ஒப்பந்த புள்ளிக்காக 23 பணிகள் நடவடிக்கையில் உள்ளது. மாநகராட்சியில் 44 சிறுபாலங்கள் கட்ட ரூ.153.15 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 14 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. ரூ.464.82 லட்சத்தில் 59 மழைநீர் வடிகால் பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு 12 பணிகள் முடிக்கப்பட்டு, 26 பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநக ராட்சியில் 2023-2024 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்கான நிதி வருவாயாக ரூ.312.56 கோடியாக திட்டமிடப்பட்டு வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்காக ரூ.312.80 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த வரவு-செலவு அறிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.24 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.

    மாநகராட்சி கட்டுப் பாட்டில் உள்ள 32 பள்ளி களில் அனைத்து வகுப்பு களுக்கும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப் பட்டு அதனை தலைமை ஆசிரியர் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க கூடுதலாக 2 கருத்தடை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் தாமிரபரணியை அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தீர்மானங்கள்

    தொடர்ந்து, பாளை மனக்காவலம் பிள்ளை மருத்துவ மனை அருகே பல்நோக்கு மையம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும், கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை மாநகர எல்லை பகுதியில் மாநக ராட்சி சார்பில் கலைஞர் நுற்றாண்டு வளைவு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது.

    மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 29 தி.மு.க. கவுன்சிலர்களும், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். மேயர் சரவணனுக்கு எதிராக 30-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.

    இன்றைய கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறை வேற்ற திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் 11 தீர்மானங்களுக்கு மட்டும் கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். மற்ற 19 தீர்மானங்களை நிராகரிக்க தி.மு.க. கவுன்சிலர்கள் கூறினர்.

    இது தொடர்பாக மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் 19 தீர்மானங்களை நிராகரிக்க வலியுறுத்தினர். இதனால் அந்த தீர்மா னங்களை உடனடியாக ஒத்தி வைப்பதாக கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவித்தார்.

    ஆனால் 33 கவுன் சிலர்கள் தீர்மானத்திற்கு எதிராக கையெழுத்திட்டு உள்ளதால் அதனை நிராகரிக்க வேண்டும் என தி.மு.க. மூத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே மக்களை தேடி மேயர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.

    அப்போது மக்களை தேடி மேயர் என்பதற்கு பதிலாக மக்களை தேடி மாநகராட்சி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி அந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது.

    இந்நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தின் போது மக்களை தேடி மேயர் திட்டம் என பட்ஜெட் உரையில் இடம் பெற்றி ருந்தது. இதற்கு கவுன்சிலர்கள் ஆட்சே பனை தெரிவித்ததால் உடனடியாக அவை திருத்தம் செய்யப் படும் என மேயர் அறிவித்தார்.

    கூட்டத்தில் கவுன் சிலர்கள் தச்சை சுப்பிர மணியன், சுதா மூர்த்தி, கோகுலவாணி, கிட்டு, ரவீந்தர், உலகநாதன், அனு ராதா, பவுல்ராஜ், கோட்டையப்பன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெக நாதன், முத்துலட்சுமி, சந்திர சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி கரையில் நடந்த பேரிடர் ஒத்திகை பயிற்சியை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் ஏற்படும் பேரிடரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நெல்லை வண்ணார்பேட்டை, வி.கே.புரம், முக்கூடல், களக்காடு, கூத்தங்குழி ஆகிய 5 இடங்களில் தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் பேரிடர் பயிற்சி பெற்றவர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்களுடன் இணைந்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி கரையில் நடந்த பேரிடர் ஒத்திகை பயிற்சியை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

    ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கி தவிப்பவர்களை தண்ணீர் கேன், கம்பு, டியூப் உள்ளிட்ட எளிமையான பொருட்கள், பயனற்ற பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் தண்ணீரில் மூழ்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு தத்ரூபமாக முதல் உதவி சிகிச்சை அளித்துக் காட்டினர்.

    இதனை பார்வையிட்ட பொது–மக்களிடம் ஒவ்வொருவரும் கட்டாயம் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    தொடர்ந்து மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் என்ன? என்பதை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள், பாளை தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் பால–சுப்பிரமணியன், தேசிய பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் சார்பில் தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 1200 நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் துணிப்பைகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொணடார்.

    நெல்லை:

    பாளையில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் சார்பில் தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 1200 நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நடக்கும் திருவிழா, முக்கிய நிகழ்வுகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசை, சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக சப்-கலெக்டர் ரிஷாப், மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ஏற்கனவே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும், கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வனத்துறை, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட உள்ளனர்.

    எனவே ஆடி அமாவாசை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆடி அமாவாசைக்கு தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் கொடுப்பவர்கள், பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகளை கொண்டு வர வேண்டும். அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் துணிப்பைகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சப்-கலெக்டர் சந்திரசேகர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×