என் மலர்
நீங்கள் தேடியது "விக்கிரவாண்டி தனியார் பள்ளி"
- பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர்
- அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி பகுதியில் உள்ள செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் சிறுமி லியா லெட்சுமி UKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியாகினார்.
குழந்தை பலியான சம்பவத்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குழந்தை பலிக்கு நீதி கேட்டும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழப்பு.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி, பல மாதங்களாகவே துருப்பிடித்து உடைந்த நிலையில் கிடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககமும், பிற அரசு அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைப்புகள் அவற்றின் கடமையை செய்யத் தவறியதன் விளைவாகவே மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தங்களின் வளாகத்திலேயே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாக செய்யத் தவறிய தனியார் பள்ளிகள் தான், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப் போவதாக கூறுகின்றன. அதையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அகமகிழ்ந்து வரவேற்கிறார். அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று ஏங்குவதைவிடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பலி வாங்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.
மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.
- ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
லஞ்ச் முடிந்து 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. சிறுமி மதியம் 2 மணிக்கு ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் எனக் கூறி வக்குப்பறையில் இருந்த வெளியேறினார். 2.05 வரை சிறுமி திரும்பாததால் ஆசிரியர் ரெஸ்ட் ரூம் சென்று பார்த்தபோது சிறுமி அங்கு இல்லாததால் தேட ஆரம்பித்தார்கள்.
எல்லா வகுப்பறையிலும் பார்த்தோம். எங்கேயும் இல்லை. பின்னர் கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்க்கும்போது, கம்பி வலை எடுக்கப்பட்டிருந்தது. உடனே கழிவுநீர் தொட்டியை பார்க்கும்போது உள்ளே சிறுமியின் செருப்பு கிடந்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியில் பார்க்கும்போது குழந்தை உள்ளே விழுந்தது தெரியவந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என தலைமை ஆசிரியர் கூறுகிறார்.
மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக தலைமை ஆசிரியர் கூறிய நிலையில், சிறுமியை ஒருவர் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி-யில் 2.40 மணி எனக் காட்டுகிறது. குழந்தையை கழிவுநீர் தொட்டியில் இருந்து தூக்கிய பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏன்? என்ற கேள்வி எழும்புகிறது.
மேலும், கழிவு நீர் மேடான பகுதியில் உள்ளது. UKG சிறுமியால் மேடான பகுதியில் ஏற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது?
அத்துடன் சிறுமியின் ஆடை நணையாமல் இருந்துள்ளது. கழிவுநீர் தொட்டியில் விழுந்தால் எப்படி ஆடை நணையாமல் இருக்கும். மேலும், கழிவுகள் ஆடையில் ஒட்டாமல் இருக்குமா?. ஆடையில் கழிவு ஒட்டியதற்கான அடையாளம் இல்லை.
குழந்தையை தூக்கிச் செல்லும் நபர் எந்தவித பதற்றமின்றி சாதாரணமாக தூக்கிச் செல்கிறார். குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி மட்டுமே சிசிடிவி காட்சியில் இடம் பெற்றுள்ளது.
தலைமை ஆசியர் கூறியதற்கும் சிசிடிவி காட்சியில் தெரியும் நேரத்திற்கும் மாறுபாடு உள்ளது. சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரண் தகவலை தெரிவிப்பதாகவும், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
- ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை.
- இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி.
சென்னை:
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் கூட்டுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை, செல்லக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை.
எத்தனையோ கனவுகளை, லட்சியங்களை கொண்டுள்ள அன்புக் குழந்தை லியாலட்சுமியின் பெற்றோரை என்ன வார்த்தை சொல்லி ஆறுதல்படுத்துவது என்பது தெரியாது தவிக்கிறோம். இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகள் தங்கள் உட்கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் வாகனங்களில் குழந்தைகள் ஏறும்போதும் இறங்கும்போதும் உதவியாளர்கள் பக்க பலமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறு துன்பம் கூட ஏற்படாத அளவிற்கு தாயின் கருணையோடும் தந்தையின் அக்கறையோடும் பள்ளி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்றும் பள்ளித் தாளாளர்களை தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளை ஓர் உயர்மட்டக் குழு அமைத்து பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டை கண்காணித்து பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கி குறைகள் இருந்தால் உடனே அதைக் களைய நடவடிக்கை எடுப்பதே குழுவின் நோக்கம்.
பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைப்பதற்கான அவசர ஆலோசனை கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது. குழந்தையின் இழப்பு ஆற்றொனாத் துயரத்தைத் தந்த போதிலும், அங்கொன்றும் இங்கொன்றமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அன்போடு அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






