என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலட்சுமி விரத கதை"

    • பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
    • கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும்.

    சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் கடைப்பிடிக்கும் விரதங்களுள் முக்கியமானது வரலட்சுமி விரதம். இது கணவனின் ஆயுள், ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் வரலட்சுமியை என்றென்றும் தங்கள் வீட்டிலேயே தங்க வைப்பதற்காக மேற்கொள்ளும் விரதம். ஆண்டுதோறும் ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக் கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    வரலாறு: சவுராஷ்டிராவை ஆண்ட பத்ரச்ரவா மன்னனின் மனைவி கசந்திரிகா. இவர்களுக்கு ஏழு ஆண் மகன்கள் ஒரு பெண் குழந்தை. கசந்திரிகாவின் நற்குணங்களால் கவரப்பட்ட மகாலட்சுமி, அவள் மீது கொண்ட கருணையால் அருளாசி வழங்கும் எண்ணத்தில் கசந்திரிகாவின் வீடு தேடி ஒரு பழுத்த சுமங்கலிப் பெண்ணாகச் சென்றாள்.

    அந்தப் பெண்ணைப் பார்த்ததும், "அம்மா, நீங்கள் யார்? என்று வினவினாள் கசந்திரிகா. அதற்கு அந்த சுமங்கலிப் பெண், "உத்தமியே மகாலட்சுமி அவதரித்த இந்த துவாதசி வெள்ளிக்கிழமையன்று நன்றாக உண்டு, தாம்பூலம் தரித்துக் கொண்டு, பகல் வேளையில் உறங்கிக் கொண்டிருக்கிறாயே?" என்று கேட்டாள். தவறை சுட்டிக் காட்டியதும் ஆணவம் கண்ணை மறைக்க கோபமே கொள்ளாத கசந்திரிகா சுள்ளென்று சினம் கொண்டாள்.

    கோபத்தின் உச்சியில் என்ன செய்கிறோம் என்ற நினைவின்றி அந்தப் பழுத்த சுமங்கலியின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு, "எனக்கே புத்தி சொல்கிறாயா? என் கண் முன் நிற்காமல் உடனே ஓடி விடு" என்று கூறி துரத்தி விட்டாள். அழுதபடி வெளியே வந்த அந்த அம்மணியைக் கண்ட கசந்திரிகாவின் மகள் சியாமா, 'அம்மா ஏன் அழுகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டாள்.

    "பெண்ணே, உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்காக என்னை அடித்து அவமானப்படுத்தி துரத்தி விட்டாள். அதனால்தான் இங்கிருந்து திரும்பிப் போகிறேன்" என்றாள். உடனே சியாமா அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தி அமரச் செய்து, "அந்த நல்லதை எனக்குச் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்" என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, அந்தக் கன்னிப் பெண் சியாமாவுக்கு வரலட்சுமி விரதத்தின் மகிமை மற்றும் அதை அனுஷ்டிக்கும் வழிமுறைகளைப் பற்றி எடுத்து கூறினாள்.

    மகாலட்சுமி எடுத்து தந்த நோன்பு முறையை இம்மி பிசகாமல் கடைப்பிடித்து வந்தாள் சியாமா. அதனால் அந்த வீட்டிலேயே வரலட்சுமி தங்கிவிட, அங்கே செல்வமும், அமைதியும் நிலையாகக் குடியிருந்தன.

    சியாமா, திருமணப் பருவம் எட்டியதும் மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான் பத்ரச்ரவா. அதையடுத்து கணவனின் கரம்பிடித்து புகுந்த வீட்டுக்குச் சென்ற சியாமா, இத்தனை நாள் பூஜித்து வந்த வரலட்சுமி தேவியின் திருமுகத்தையும் தன்னுடன் எடுத்து சென்றாள்.

     

    புகுந்த வீட்டிலும் வரலட்சுமி விரதத்தைத் தவறாது கடைப்பிடித்தாள். அதனால் அவர்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகின. ஆனால் கசந்திரிகாவோ மகாலட்சுமியை அவமானப்படுத்தி துரத்தி விட்டதால் அவளை விட்டு நீங்கி நிரந்தரமாக சியாமா வீட்டிலேயே தங்கி விட்டாள் வரலட்சுமி. இதனால் பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்குள் ஓடி ஒழிந்து உணவுக்குக்கூட வழியற்று பராரியாகத் திரிந்தனர்.

    அவர்களுக்காக சியாமா அனுப்பி வைத்த தங்கக்காசுகளும், கரித்துண்டுகளாக மாறின. சியாமாவுக்கு தனது தாய், சுமங்கலிப் பெண்ணாக வந்த மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. அம்மாவிடம் நடந்தவைகளை நினைவுப்படுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, நோன்பின் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள். அதன்படியே கசந்திரிகாவும் வரலட்சுமி நோன்பு இருக்கத் தொடங்கினாள்.

    அதன்பிறகு அவர்கள் வாழ்வில் வசந்தம் திரும்ப, இழந்த செல்வங்களும் அதிகாரமும் மீண்டும் கிடைத்தன.

    மகாலட்சுமியே நேரடியாக வந்து விரதமுறைகளைச் சொல்லிக் கொடுத்து மேற்கொள்ளச் செய்ததால். இந்த விரதத்தை அனுசரிப்பவர்களும் குரு முகமாக, யாரேனும் பெரியவர்கள் எடுத்து கொடுக்க அதை தீக்ஷையாகப் பெற்று விரதத்தை மேற்கொள்வது வழக்கம். இதற்காக திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்ணை ஆடி நோன்புக்காக மறுவீடு அழைத்து வந்து, நோன்பு நோற்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து நோன்பு நோற்கச் செய்வார்கள்.

    இதில் வெள்ளியிலான அம்மன் முகத்தை கலசத்தில் வைத்து அலங்கரித்தல், செம்பில் அம்மன் முகத்தை வரைதல், சுவற்றில் அம்மன் ரூபத்தை தீட்டுதல் என்று பல்வேறு முறைகள் உள்ளன. அந்தந்த வீட்டு வழக்கப்படி நோன்பு முறைகளைக் கற்றுக் கொள்ளும் பெண்கள் தங்கள் வீட்டில் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடிப்பார்கள்.

    மண்டபம் அமைத்தல்: முதல் நாள் வியாழக்கிழமையே வீட்டை சுத்தப்படுத்தி, தோரணங்கள் கட்டி அழகுப்படுத்த வேண்டும். மரத்தாலான இருக்கையை (ஸ்டூல்) நன்கு கழுவி காயவைத்து அதில் மண்டபம் அமைப்பது வழக்கம். சில வீடுகளில் இதற்காகவே தனியாக ஒரு மர இருக்கையை ஒதுக்கி வைத்திருப்பார்கள். அதற்கு வெள்ளையடித்து காவி வர்ணம் பூசி, மண்டபம் அமைக்கும் இடத்தில் கொண்டுவந்து கிழக்கு முகமாகப் போட வேண்டும்.

    அதன்மேல் ஒரு பட்டாடையை விரித்து நான்குபுறமும் மாவிலைத் தோரணங்களை சுற்றிக் கட்ட வேண்டும். நான்கு கால்களிலும் சிறிய வாழைக் கன்றுகளைக் கட்டி அலங்கரிக்கவும். இருக்கையின் உட்புறம் இரு கால்களுக்கு இடையில் ஒரு மனைப்பலகையைப் போட்டு அதில் மாக்கோலமிட்டு மண்டபத்தை தயார்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

    அம்மனின் திருமுகத்தில் காதோலை, கருகமணி அணிவித்தல் மற்றும் இன்னபிற அலங்காரங்களையும்கூட செய்து வைத்து கொள்ளலாம். இதில் சிலர் மண்டபம் எதுவும் அமைக்காமல் வெறுமனே மனை மீது கலசம் அமைப்பவர்களும் உண்டு, இன்னும் சிலர் சுவற்றில் கஜலட்சுமி உருவத்தை வரைந்து வைத்து நோன்பு நோற்பதும் உண்டு. அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதுபோக நோன்பு சரடுகள் மற்றும் கோடி தந்தம் போன்றவற்றையும் தயாராகச் செய்து வைத்து கொள்ளலாம்.

    விரத பூஜை: வெள்ளிக்கிழமை காலையில் எழுந்ததும் எண்ணெய் தேய்த்து குளித்து தூய ஆடையணிந்து பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜையறையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து, மண்டபத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் மனை மீது இலை விரித்து பச்சரிசியைப் பரப்ப வேண்டும். கலசம் வைக்கும் தாம்பாளத்தில் நெல் அல்லது கோதுமையைப் பரப்பி அதன்மீது நீர் அல்லது தானியம் நிரப்பிய பூரண கலசக் கும்பத்தை வைக்கவும்.

    முகம் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் தேங்காய் மீது அம்மனின் முகத்தைக் கட்டலாம். செம்பு மீது அம்மன் உருவத்தை வரைபவர்கள் சுண்ணாம்பைக் கரைத்து அம்மனின் முகத்தை வரையலாம். அந்தத் தாம்பாளத்தை வீட்டின் மையக் கூடத்தில் போடப்பட்டிருக்கும் ஒரு மனை மீது வைத்து, சுமங்கலிப் பெண்கள் இருபுறமும் பிடித்து தூக்கிக் கொண்டு, வரலட்சுமி அம்மனை வீட்டுக்குள் அழைக்கும் பாடலை பாடியபடி மண்டபம் வைத்திருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து மண்டபத்தில் பரப்பியிருக்கும் அரிசி மீது கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

    ஒரு வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு அருள் புரிய வேண்டி விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூர்வாங்க பூஜையைத் தொடர்ந்து வரலட்சுமியைக் கலசத்தில் ஆவாஹனம் (எழுந்தருளச்) செய்து, பிரதான பூஜையைத் தொடங்க வேண்டும்.

    நைவேத்திய பதார்த்தங்கள்: பூஜை முடிந்ததும் நைவேத்யமாக இட்லி, அன்னம், பருப்பு, சாம்பார், ரசம், மோர்க் குழம்பு, அவியல், கூட்டு, கறி வகைகள், வடை, சர்க்கரைப்பொங்கல், பாயசம், வெள்ளரிக்காய் மற்றும் நெல்லிக்காய் பச்சடி, தேங்காய் பூரணம்-எள்ளு பூரணம் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, கோசம்பரி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, நாவல் பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

    இத்தனை வகைகள் முடியாவிட்டால் பழ வகைகள் மற்றும் பாயாசம் மட்டும் கூட படைக்கலாம்.

    நிவேதனம் முடிந்ததும், தீப, தூபங்கள் காட்டி வணங்க வேண்டும். பிறகு அம்மனை மனதாரப் பிரார்த்திக் கொண்டு, நோன்புச் சரடை முதலில் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க வேண்டும். அதன்பிறகு வீட்டின் மூத்த பெண்மணிக்கு அணிவித்துவிட்டு, வரிசையாக எல்லோருக்கும் அணிவிக்க வேண்டும். சரடு கட்டிக் கொள்ளும்போது ஒரு மூடி தேங்காய், ஒரு வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு வலது கையில் சரடைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

    இவ்விதமாய் எல்லாம் சுபமாய் முடிந்ததும் அம்மனுக்கு மங்கள ஆரத்தி எடுத்து, வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் நடுவில் ஆரத்தி கலவையை ஊற்ற வேண்டும். பிறகு அனைவரும் கூடியிருந்து பிரசாதங்களை உண்ட பிறகு. பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மாலை ஆரத்தி: மாலையில் விளக்கேற்றி அஷ்டோத்திரம் சொல்லி, பாடல்கள் பாடி பூஜை செய்து, அவல், வெல்லம் அல்லது ஏதேனும் சுண்டல் வகைகளை நைவேத்யம் செய்தல் வேண்டும். தீபம் காட்டி மங்கள ஆரத்தி எடுத்து அம்மனை நித்திரை கொள்ள செய்ய வேண்டும். இரவில் பிரசாதங்களை மட்டும் உண்டுவிட்டு உறங்க வேண்டும்.

    புனர் பூஜை: மறுநாள் காலையில் புனர் பூஜை செய்து பால், பழம், கல்கண்டு ஆகியவற்றைப் படைத்து தீபம் காட்டிவிட்டு, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். அதன்பிறகு அம்மனை கலசத்துடன் எடுத்து கதவுக்கு பின்புறமாய் வைத்துவிட வேண்டும் அல்லது வீட்டின் அரிசிப் பெட்டிக்குள் வைத்து மூடி விடவேண்டும். இதை அவரவர் வீட்டு வழக்கப்படி செய்வது உத்தமம். இப்படிச் செய்வதால் நம் வீட்டுக்கு வந்த வரலட்சுமி அம்மன் நம்மோடு நம் வீட்டிலேயே தங்கி விடுவதாக ஐதீகம்.

    சிறிது நேரம் கழித்து கலசத்தை கலைத்து அம்மன் முகத்தை பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும். (கலசத்தில் தானியங்கள் போட்டிருந்தால் அதை நாம் சமைக்கும் தானியத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.) கலசத்தில் போட்டிருந்த நாணயத்தைப் பணப் பெட்டிக்குள் வைத்துக் கொள்வது வழக்கம். அதன்பிறகு மண்டபத்தை கலைத்து பூஜையறையை சுத்தம் செய்து கொள்ளலாம். இவ்விதமாய் வரலட்சுமி விரத பூஜையை சுபமாய் நிறைவேற்றிட வீட்டில் என்றும் செல்வமும் வளமும் நிலைத்திருக்கும்.

    • வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
    • லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

    லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான இலை வில்வம் என்பது பலருக்குத் தெரியாது. திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது.

    வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது. சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப் பட்டுள்ளது.

    வாமன புராணத்தில் லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

    காளிகா புராணத்தில் லட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.

    • தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான்.
    • விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.

    லட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். அந்த ''நெல்லி'' அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள். நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும்.

    அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் விஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு. அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் பூமாதேவியை குறிக்கும். ஆம் பூமாதேவியும் தேவியின் அம்சம்தானே.

    ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும். எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.

    நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது. அதிக பலன்களை தரக்கூடியது. நெல்லி இலைகளால் விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.

    • துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
    • துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.

    துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். துளசியை துளசி, திருத்துழாய் என்றும் சொல்வார்கள். இந்த சொற்களுக்கு தெய்வீக சக்தி என்பதே பொருளாகும். துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.

    பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஆனந்த மிகுதியால் விஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு அதில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தது. அதுவே மரகதப் பச்சை நிறத்தில் ஸ்ரீதுளசி தேவியாக உருவெடுத்தது என்று சொல்வார்கள். அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து மேலும் சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    துளசிதேவி பகவானிடம் பெற்ற வரத்தின்படியே வீட்டில் துளசி மாடம் வைத்து அதற்கு பூஜை செய்பவர்களுக்கும், துளசி பறித்து அதன் திவ்யதளங்களால் விஷ்ணுவை லட்சுமியை அர்ச்சிப்பவர்களுக்கும், இருவரும் சகல சவுபாக்கியங்களையும் தந்து நிறைவில் விஷ்ணு லோகத்திலும் இடம் தந்து அருளுகின்றார்கள்.

    நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிக்காத்த நம் தாயாரை மதித்துக் காப்பாற்றி அவள் அருளாசிகளைப் பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசிச்செடி வைத்து அதற்கு பூஜித்து சேவைகள் புரிவதும் இம்மூன்றும் மனிதருக்கு உத்தம கதியை தரவல்ல சேவைகள் என மகான்கள் கூறி உள்ளனர்.

    • அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.
    • வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

    திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.

    எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

    கொஞ்சம் சாஸ்திரபடி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விநாயகர் பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணபிரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

    இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர்.

    ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம் என்பது சான்றோர் வாக்கு!

    கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும். கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.

    அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

    இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்தரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயாசம் செய்யலாம். இவ்விரதத்தை கடைபிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

    • தமிழ்நாட்டுப் பெண்கள் அனுசரிக்கும் விரதம்.
    • பார்வதிக்கு, வரட்சுமி விரதத்தை பற்றி சிவபெருமான் எடுத்துரைத்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், 'வரலட்சுமி நோன்பு' கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கடைப்பிடிக்கப்படும் ஒன்று என்றாலும், குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்கள் அனுசரிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது பார்க்கப்படுகிறது.

    பூவும், பொட்டும், சகல சவுபாக்கியங்களும் பெற்று, குடும்பம் சிறந்தோங்க வேண்டும் என்று சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

    ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமசிவனும், பார்வதிதேவியும் வீற்றிருந்தனர். அப்போது பார்வதிதேவி, சிவபெருமானை நோக்கி "சுவாமி! எந்த தேவதையை நினைத்து பெண்கள் விரதம் இருந்தால், அவர்களின் குடும்பம் சகல துக்கங்களில் இருந்தும் நீங்கப்பெற்று சுகவாழ்வை அடையும்" என்று கேட்டார்.

    அதற்கு சிவபெருமான், "எல்லா சவுபாக்கியங்களையும் தரும் வரலட்சுமி விரதத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேள்" என்று கூறி, அந்த விரதம் ஏற்பட்ட வரலாற்றை சொன்னார்.

    மகத தேசத்தில் குந்தினபுரம் என்ற ஒரு பட்டினம் உண்டு. அந்த பட்டினத்தில் சாருமதி என்னும் பதிவிரதை இருந்தாள். அவள் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவளது கணவன் உஞ்சவிருத்தி மூலம் கொண்டுவரும் அரிசியைக் கொண்டு, அந்த குடும்பத்தில் அனைவரும் பசியாறி வந்தனர்.

    கருணையே வடிவான வரலட்சுமி தேவி, பதிவிரதையான சாருமதிக்கு அனுக்கிரகம் செய்ய முன்வந்தாள். ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய வரலட்சுமி தேவி, "சாருமதி.. உன் பக்தியால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உனக்கு அனுக்கிரகம் செய்வதற்காகவே வந்திருக்கிறேன். நீ ஆவணி மாதம் பூர்வ பட்சத்தில், பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் என்னைப் பூஜித்தால் உன் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என்றாள்.

    அதைக் கேட்ட சாருமதி, தான் கண்ட கனவிலேயே, அன்னை வரலட்சுமி தேவியை வலம் வந்து வழிபட்டாள். மேலும், தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொல்லி பூஜிக்கவும் செய்தார். அதோடு பவுர்ணமிக்கு முந்தை வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் வரலட்சுமி தேவியிடம் கேட்டு தெரிந்துகொண்டாள்.

    அதிகாலையில் கண் விழித்து எழுந்ததும், தான் கண்ட கனவு பற்றி, தன்னுடைய கணவன் மற்றும் மாமியார், மாமனாரிடம் சொன்னாள், சாருமதி. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, அந்த உன்னதமான விரதத்தை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டனர்.

    அதன்படி ஆவணி மாத பூர்வபட்ச பவுர்ணமிக்கு முன்பு வந்த வெள்ளிக்கிழமையில் உதய காலத்தில், சாருமதியும், அவளது குடும்பத்தினரும் விழித்தெழுந்தனர். பின்னர் நீராடி விட்டு நல்ல வஸ்திரங்களை அணிந்து கொண்டு, பூஜை செய்வதற்குத் தேவையான பொருட்களை சேகரித்தனர்.

    வீட்டில் ஓர் இடத்தை தேர்ந்தெடுத்த சாருமதி, அந்த இடத்தை மொழுகி, அரிசி மாவினால் கோலமிட்டாள். வரலட்சுமி தேவிக்கு ஒரு மண்டபம் அமைத்தாள். வண்ணப் பொடிகளால் தாமரைப் போன்று கோலமிட்டு அதனை அழகுபடுத்தினாள்.


    அதன் மீது ஒரு நுனி வாழை இலையைப் போட்டு, அந்த இலை முழுவதும் பச்சரிசியை பரப்பி வைத்தாள். பச்சரிசியின் மேல் பகுதியில் பித்தளை செம்பில் சுண்ணாம்பு தடவி, அதன் வாய்ப் பகுதியில் மாவிலைகளை சுற்றிவைத்து, தேங்காயை வைத்து கலசம் போல் மாற்றினாள்.

    அந்த கலசத்தின் மீது அம்மன் முகத்தை பதித்தாள். பின்னர் குத்துவிளக்கேற்றி வைத்தாள். கலசத்தை மலர் மாலைகளைக் கொண்டு அலங்கரித்தாள். அந்த கலசத்தில் வரலட்சுமி தேவியை ஆவாகனம் செய்தாள்.

    இந்த பூஜையில் சாருமதியும் அவளது வீட்டின் அருகில் உள்ள பெண்களும் பக்தி சிரத்தையுடன் பங்கேற்று, வரலட்சுமி தேவியை பிரார்த்தனை செய்தனர்.

    பத்மாஸநே, பத்மகராம்

    ஸர்வலோக பூஜிதே

    நாராயணப்ரியே தேவி

    ஸுப்ரி தாப்பவ ஸர்வதா!!

    என்ற லட்சுமி சுலோகத்தால், வரலட்சுமி தேவியை வணங்கி, ஷோடச உபசார பூஜைகள் செய்து, ஒன்பது முடிச்சு போட்ட மஞ்சள் சரடினை வலது கையில் கட்டிக் கொண்டனர்.

    வரலட்சுமி தேவிக்கு ஒன்பது விதமான பட்சணங்களை நைவேத்தியமாக படைத்து, கற்பூர தீபாராதனை காட்டி வணங்கினர். விரதம் முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    பின் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றபோது, அந்த பெண்களின் வீடுகள் அனைத்தும் மாட மாளிகைகளாக ஆடம்பரமாக காட்சியளித்தன. இதைக் கண்ட மக்கள் அனைவரும், 'இது சாருமதி செய்த வரலட்சுமி பூஜையின் மகிமையால் ஏற்பட்டது' என்பதை அறிந்து சாருமதியை போற்றினர்.

    இந்த வரலட்சுமி விரதம் இருப்பவர்கள், வரலட்சுமி தேவியின் அருளைப் பெற்று, தங்கள் பக்திக்கான நற்பலன்களை அடைவது உறுதி என்று பார்வதிக்கு, வரட்சுமி விரதத்தைப் பற்றி சிவபெருமான் எடுத்துரைத்தார்.

    பவிஷ்ய புராணத்தில் பரமேஸ்வரனால் பார்வதி தேவிக்கு சொல்லப்பட்ட இந்த வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்பவர்களும், சொல்லக் கேட்பவர்களும், விரதம் இருந்து அதை பூர்த்தி செய்பவர்களும், அஷ்ட ஐஸ்வரியங்களுடன், புத்திர பாக்கியமும், தீர்க்காயுளும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.


    சரடு எடுக்க சொல்லும் சுலோகம்

    ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் சரடை பூஜையில் வைத்து, பூஜை முடிந்ததும் அதனை வலக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்து சரடை எடுக்கும் போது,

    ஸர்வமங்கள மாங்கள்யே ஸர்வபாப ப்ரணாசினி!

    தோரகம் பரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா!!

    என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பின்னர் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் வைத்து, பூஜையில் பங்கேற்ற சுமங்கலி கையில் கொடுத்து கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லவும்.

    நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்திஸமன்விதம்

    பத்னியாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே

    பிறகு மஞ்சள் சரடை வலது கையில் கட்டி விட வேண்டும். இதேபோல் மற்ற சுமங்கலிகளுக்கும் கட்டி விடவேண்டும்.

    ×