என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் தாக்குதல்"
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஞானராஜ் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது45). இவர் நெல்லையில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பன்னீர்செல்வம் (44). இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். ஆனந்த ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து ஆனந்தராஜ் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ராஜா தேசிங்கு (37) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று ஆனந்தராஜ் அப்பகுதியில் உள்ள தனது சகோதரி சகுந்தலா வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டின் முன்பு ஆனந்தராஜ், சகுந்தலா, அவரது கணவர் ஞானசேகர் ஆகிய 3 பேரும் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ராஜாதேசிங்கு இங்கு நின்று எப்படி பேசலாம் என ஆனந்தராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜா தேசிங்கு இரும்பு கம்பியால் ஆனந்தராஜின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதை தடுக்க வந்த சகுந்தலா மற்றும் ஞானசேகரையும், ராஜாதேசிங்கு பயங்கரமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்தராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த சகுந்தலா மற்றும் ஞானசேகரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ராஜா தேசிங்கை வலைவீசி தேடி வருகின்றனர். மீன் வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாவினிபட்டியைச் சேர்ந்தவர் திருவாசகம் (42). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தர். 2 பேரும் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள்.
தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக வழக்கு மேலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு திருவாசகத்தின் மனைவியிடம் பாலசுந்தர் மற்றும் சிலர் மிரட்டினர்.
இந்த நிலையில் நேற்று நாவினிப்பட்டியில் இது குறித்து திருவாசகம் பாலசுந்தரிடம் தட்டிக் கேட்டார். இதனால் தகராறு ஏற்பட்டது. பாலசுந்தர் மற்றும் குருநாதன், பாண்டிச்செல்வம் ஆகிய 3 பேரும் திருவாசகத்தை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர்.
தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயப்பட்ட திருவாசகம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மதுரை:
மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் செம்பருத்தி தெருவைச் சேர்ந்தவர் மோகன் மகன் முத்துக்குமார் (வயது23), கட்டுமான தொழிலாளி. இவர் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்பட 5 வழக்குகள் நிலு வையில் உள்ளன.
இந்த நிலையில் முத்துக்குமார் நேற்றிரவு சம்மட்டி புரம் முத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை 3 பேர் கும்பல் வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முத்துக்குமாரை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போலீசார் விசாரணையில் முத்துக்குமாரை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டபிரபு, அவரது நண்பர்கள் செல்லப்பாண்டி, ஜெயபாண்டி ஆகியோர் முன்விரோதத்தில் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
சென்னை:
திருவல்லிக்கேணி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர்கள் மதியழகன், கோபிநாத், இவர்கள் இருவருக்கும் இடையே சவாரி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கோபி நாத்தும் அவரது நண்பர் பார்த்தசாரதி என்பவரும் சேர்ந்து மதியழகனை அரிவாளால் வெட்டினர். இதில் காயம் அடைந்த அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மதியழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்குன்றம்:
சென்னை கொளத்தூர் திருமேனிநகர் பகுதியை சேர்ந்தவர் அன்வர்பாஷா (வயது 30), ஆட்டோ டிரைவர்.
இவர் புழல் கதிர்வேடு பாலாஜிநகர் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடினார். அவரது கழுத்து, மூக்கு, வாய் ஆகிய இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி புழல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உயிர் ஊசலாடுகிறது.
கடந்த ஆண்டு கதிர்வேடு பகுதியை சேர்ந்த அகித் என்பவரை அன்வர்ஷா அரிவாளால் வெட்டினார். அதற்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






