search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rupee fall"

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை வைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி, கிண்டல் செய்து பதிவிட்ட ட்வீட்களை தற்போது காங்கிரஸ் கட்சியினர் தேடி எடுத்து, கேள்விகளை எழுப்பி வருகின்றனர். #RupeeAllTimeLow #Congress #Modi
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாயை தொட்டு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் சேர்ந்து சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்தின் மதிப்பு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போல, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஐ.டி விங் உறுப்பினர்கள் சமூக வலைதளத்தில் பாஜகவை தாளித்து வருகின்றனர்.

    குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 ரூபாயை தொட்டது. அப்போது, குஜராத் முதல்வராகவும், பிரதமர் போட்டியில் இருந்த மோடி, மன்மோகன் சிங் வயதுக்கு ஏற்றவாறு ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது என ட்வீட் செய்திருந்தார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூபாயின் மதிப்பு 40 ரூபாய்க்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

    இது மட்டுமல்லாது, கருப்புப்பணம், பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம் ஆகியவை குறித்து அப்போதைய காங்கிரஸ் அரசையும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் மோடி கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். தற்போது, மோடி பிரதமராகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் விஸ்வரூபம் எடுத்துள்ளதே தவிர துளியும் குறையவில்லை. 



    அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், எனக்கான முறை இது என காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கண்ட பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது. ‘ரூபாயின் மதிப்பு 40-க்கு வரும் என கூறினீர்களே? இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 69 ரூபாயாக உள்ளது.

    கருப்புப்பணத்தை மீட்டு 15 லட்சம் கொடுப்பேன் என்றீர்களே? இப்போது, 50 சதவிகித பணம் சுவிஸ் வங்கியில் அதிகரித்துள்ளது.’ என பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம், பணமதிப்பிழப்பு ஆகிய பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் அதிரடி கேள்விகளை எழுப்பி வருகிறது.

    மேலும், மோடியின் பழைய ட்வீட்களை தேடி எடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கேள்விகளை எழுப்பும் போது, பாஜக கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. சர்வதேச அளவில் எல்லா ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. அதனால், இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது என பாஜகவினர் சமாளித்து வருகின்றனர்.

    எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? போன்ற கேள்விகளையும் காங்கிரசார் எழுப்புகின்றனர். மேற்கண்ட விவகாரங்களால் சமூக வலைதளம் கருத்து மோதல் களமாக மாறியுள்ளது. 
    ×