search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NIPA Virus"

    தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. அதுப்பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் நிபா வைரஸ் குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்துக்கு வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    சேலம் தனியார் மருத்துவமனையில் உடலுறுப்பு திருட்டு நடைபெறுவதாக கேரள முதல்வர் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு இருப்பதாகத் தகவல் தற்போதுதான் வந்துள்ளது. பிலிம் தட்டுப்பாட்டைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    திண்டுக்கல்:

    நிபா வைரஸ் கிருமியால் நிபா காய்ச்சல் எனும் தொற்றுநோய் பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது தும்மும்போது உமிழ்நீரில் கிருமிகள் வெளிப்படுகின்றன. இக்கிருமிகள் நம்மை அறியாமல் நம் உடலில் ஊடுருவி தாக்க ஆரம்பிக்கிறது

    வவ்வால் கடித்த பழங்கள், பாதி உண்ட பழங்கள், பன்றி மற்றும் வெளவாலுடன் தொடர்புடையவர்களிடமிருந்து நோய் பரவுகிறது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவி உள்ளது.

    நிபா வைரஸ் தாக்கினால் மூக்கில் நீர்ச்சளி ஒழுகுதல், தலைவலி, காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், கழுத்து பிடிப்பு, தசைவலி, ஞாபகம் மறத்தல், மயக்கமடைதல், வலிப்பு, கோமா பிறகு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் ஏற்படின் அறிகுறிகளுக்கேற்ப உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் இந்நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கைகளை சுத்தமாக கழுவுதல், கைகளை மூக்கு, வாய் பகுதிக்கு அடிக்கடி கொண்டு போகாமல் இருத்தல். இருமல் வந்தால் பாதுகாப்பாக கைகுட்டை பயன்படுத்துதல், மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் பழங்களை கழுவிய பிறகு பயன்படுத்தவும், வவ்வால், பறவைகள் கடித்த பழங்களை பயன்படுத்தாமலும், இப்பழங்களை வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு கொடுக்காமலும் இருக்க வேண்டும். பன்றி வளர்ப்போர் பண்ணைகளை சுத்தமாகவும், தினந்தோறும் கிருமிநாசினி கொண்டு பண்ணையை சுத்தப்படுத்த வேண்டும்.

    மேலும், பன்றிகளை ஊராட்சியிடம் உரிமம் பெற்று பன்றிகளை அவர்கள் அளிக்கும் நிபந்தனைகளின்படி பொதுமக்கள் வசிக்காத இடங்களில் வளர்க்க வேண்டும்.

    பொது மக்களுக்கு தொல்லைதரும் விதமாக பன்றிகளை நடமாட விடுவது, பொது இடங்களில் அலையவிடுவது, அசுத்தம் செய்வது, வீடுகளில் புகுந்து பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் பன்றி வளர்க்கும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பன்றிகள் நோய் வாய்ப்பட்டாலோ, இறந்தாலோ உடனடியாக கால்நடைத்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியுடன் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கப்படும். பொது மக்கள் இத்தொற்று நோய் குறித்து பீதியடைய வேண்டாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    கேரளாவில், 'நிபா' வைரஸ் காய்ச்சலால் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது. #NipaVirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 11 பேர் உயிரிழந்து இருந்தனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் நர்சு என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் பரம்புரா பகுதியைச் சேர்ந்த மூசா என்பவர் சிகிச்சை பலனின்றி கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் இன்று உயிரிழந்தார். இதனால் நிபா வைரசுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.

    கேரளாவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்திருந்தனர்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர், தெரிவித்துள்ளார்.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்சு லினிக்கு திருவனந்தபுரத்தில் நர்சுகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #NipaVirus
    'நிபா' வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழக - கேரள எல்லைகளில் உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #NipahVirus
    நாகர்கோவில்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தொற்றுநோயாக பரவி வரும் இந்த காய்ச்சலுக்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். நிபா வைரஸ் காய்ச்சல் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதியைச் சேர்ந்த பொதுமக்களையும் பீதி அடையச் செய்துள்ளது.

    இதன் காரணமாக தமிழக - கேரள எல்லைகளில் உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கேரளாவுக்கு சென்று வேலை பார்த்து வருகிறார்கள். அவ்வாறு வேலை பார்த்து திரும்பும் அவர்களில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என 4 மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

    நிபா வைரஸ் மூலம் ஏற்படக்கூடிய காய்ச்சல் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. நிபா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஏற்கனவே அரசு துறைகள் மூலம் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    காய்ச்சல் பாதிப்பு பகுதிகளை கண்காணித்து வருகிறோம். 141 தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் 11 அரசு மருத்துவமனைகள் மூலமும் காய்ச்சல் அறிகுறியோடு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எதனால் காய்ச்சல் ஏற்பட்டது? என்பது தொடர்பாக மேற்கண்ட மருத்துவமனைகள் மூலமாக சுகாதாரத்துறை அறிக்கை பெற்று வருகிறது. நிபா வைரஸ் காய்ச்சல் கோழிக்கோட்டில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பரவ வாய்ப்பில்லை.

    இருந்தாலும் மாநில அரசின் ஆலோசனையின்பேரில் காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மக்கள் வதந்திகளை நம்பக்கூடாது. இந்த காய்ச்சல் வராமல் தடுக்க சுகாதாரத்துறையும், தமிழக அரசும் தயார் நிலையில் இருந்து வருகிறது. எந்த தொற்றுநோய் ஏற்பட்டாலும் அதை தடுக்க அரசு தயாராக இருக்கிறது. இதனால் யாரும் பயப்படத்தேவையில்லை.

    குமரி மாவட்டத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. தமிழ்நாட்டிலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை.

    இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.  #NipahVirus
    கேரளாவில் இருந்து தென் மாநிலங்களுக்கு. பரவும் நிபா வைரசை கட்டுப்படுத்த தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    கூடலூர்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 10 பேர்  அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் உயிரிழப்புக்கு காரணம் குறித்து ஆய்வு செய்தனர். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி எடுத்து சோதனை நடத்தப்பட்டதில் நிபா என்ற கொடிய வைரஸ் தாக்கியது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து மற்ற பகுதிகளுக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தினசரி ஏராளமானோர் வேலை, வர்த்தகம் மற்றும் கல்வி, சுற்றுலாவிற்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.

    இதனால் கேரளாவில் இருந்து நிபா வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மலைச்சாலை ஆகிய பாதைகள் வழியாக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பொதுவாக இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் பரவும்போது குமுளி மலைச்சாலையில் செக்போஸ்டில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சோதனை நடத்துவது வழக்கம்.

    ஆனால் தற்போது அது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த 3 இடங்களிலும் போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடிகளும் உள்ளன. தமிழகத்தில் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது அந்த பீதி அடங்கி உள்ள நிலையில் மீண்டும் ஒரு வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×