search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health sector"

    கேரளாவில் இருந்து தென் மாநிலங்களுக்கு. பரவும் நிபா வைரசை கட்டுப்படுத்த தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    கூடலூர்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 10 பேர்  அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் உயிரிழப்புக்கு காரணம் குறித்து ஆய்வு செய்தனர். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி எடுத்து சோதனை நடத்தப்பட்டதில் நிபா என்ற கொடிய வைரஸ் தாக்கியது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து மற்ற பகுதிகளுக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தினசரி ஏராளமானோர் வேலை, வர்த்தகம் மற்றும் கல்வி, சுற்றுலாவிற்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.

    இதனால் கேரளாவில் இருந்து நிபா வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மலைச்சாலை ஆகிய பாதைகள் வழியாக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பொதுவாக இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் பரவும்போது குமுளி மலைச்சாலையில் செக்போஸ்டில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சோதனை நடத்துவது வழக்கம்.

    ஆனால் தற்போது அது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த 3 இடங்களிலும் போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடிகளும் உள்ளன. தமிழகத்தில் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது அந்த பீதி அடங்கி உள்ள நிலையில் மீண்டும் ஒரு வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×